முச்சந்தி

ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்

இலங்கையில் பல தசாப்தங்காக ஆட்சி செய்த தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிபீடம் ஏறியது.

அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஒரு பிரபலமான தலைவராக மாறியுள்ளார். அவர் பலரால் நேசிக்கப்படுகின்றார்.

மேலும் தேசியக் கட்சிகளின் பெருகிய ஆதிக்கத்திற்கு மத்தியில் தனது கட்சியை மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்று தனது தலைமை திறனை நிரூபித்துள்ளதுடன் ஒரு வலுவான அரசியல் நபராகவும் உருவெடுத்துள்ளார்.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா அநுர?

தனது ஆட்சியில் முதல் 100 நாட்களுக்குள் அதிகாரத்தை நிறுவி, மக்களின் ஆணையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்குப் பாடுபடுவேன் என்று ஜனாதிபதி அநுரகுமார் பிபிசிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், சில வாரங்களுக்குள் தனது அரசாங்கத்தின் கீழ் நிறுவப்பட்ட நாடாளுமன்றின் முதல் சபாநாயகரை இழந்த போதிலும், தொடர்ந்து ஒரு வலுவான அரசாங்கத்தை ஜனாதிபதி வழிநடத்தி வருகின்றார்.

சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தவும், நிறைவேற்றப்படாத சில நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் சில முன்னேற்றங்களையும் கண்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்ற பிக்கர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறிபத்த வழக்கை விசாரிக்க கடந்த அரசாங்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இரண்டு மூத்த புலனாய்வாளர்களை நியமித்தார்.

மேலும், விசாரணைகள் குறித்து கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை திருப்தி தெரிவித்துள்ளார், எவ்வாறாயினும, அவர்களின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

பிள்ளையான் என்று பிரபலமாக அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட்டார்.

கூடுதலாக, வரி ஏய்ப்பு செய்ததற்காக அர்ஜுன் அலோசியஸ் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரி ஏய்ப்பு செய்து வந்தவர்கள் விரைவாக பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மெண்டிஸ் டிஸ்டில்லரீஸின் உரிமம் இடைநிறுத்தப்பட்டது.

பொருளாதார முன்னேற்றம்

அநுரவின் ஆட்சியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது, மேலும் பங்குச் சந்தையில் 40 வீத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சியில் இராஜதந்திர முயற்சிகள் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், அவரது வெளிநாட்டு உறவுகள் பெரும்பாலும் சுமூகமாக நடந்துள்ளன.

இருப்பினும், அரசாங்கம் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தலையிட்டுள்ளது. எனினும் அந்தப் பிரச்சியை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

மேலும், பொலிஸ்மா அதிபர், தலைமை நீதிபதி, இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு புதிய தலைவர்களை ஜனாதிபதி அநுரகுமார நியமித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு முயற்சிகள்

ஊழலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத் திட்டம் பலரிடையே நம்பிக்கையைத் தூண்டியுள்ளதுடன் பரவலான ஆதரவுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

எவ்வாறாயினும், அநுரவின் தலைமைத்துவம் அதிர்ச்சியூட்டும் சீர்திருத்தங்கள் உட்பட தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று சிலர் கணித்திருந்தாலும், அவர் படிப்படியாக ஒரு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், இதனை மெதுவான வேகம் என்று குறிப்பிட்டிருந்தாலும், மாற்றத்தின் அளவிடப்பட்ட வேகத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அநுர முன் உள்ள சவால்கள்

சந்தேகத்திற்கு இடமின்றி, இனப் பிளவுகளை சரிசெய்வதற்கான தனது முயற்சிகளைத் தொடரும்போது ஜனாதிபதி அநுரகுமார ஏராளமான முக்கியமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்படி, வேறூன்றி போயிருக்கும் ஊழலை ஒழிப்பதும், சில அதிகாரக் கட்டமைப்புகளை அகற்றுவதும் எளிதல்ல என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், அநுரகுமாரவின் குழுவினர் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற போதிலும் சில பகுதிகளில் இன்னும் அனுபவம் போதவில்லை எனவும் இது வெளிப்படையாக தெரிவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார மக்களின் ஆதரவுடன் தனது அதிகாரத்தை பலப்படுத்தியுள்ளார், ஆனால் இப்போது அவர் அரசியல் உயரடுக்கின் சிக்கலான இயக்கவியலுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.