ரணிலின் திட்டங்கள் விரைவில் வரும்
நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான புதிய பயணத்திற்கான வேலைத்திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விரைவில் முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஐக்கிய தேசிய கூட்டணி அலுவலகத்தில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த இரண்ட மாதங்களாக கலந்துரையாடி நாட்டின் எதிர்கால, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான புதிய பயணதத்திற்கான வேலைத்திட்டம் கட்சியின் தலைவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 8ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாடு வங்குரோத்தடைந்த நேரங்களில் தனி நபராக நாட்டை பொறுப்பேற்று அதனை தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.
அவருக்கு அந்த அனுபவம் உள்ளது. தனக்கென குழுவொன்று இல்லாவிட்டாலும், அமைச்சரவை இல்லாவிட்டாலும் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்கும் திறமை அவருக்கு உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றுவிடாதவாறு பல்வேறு வேலைத்திட்டங்களை தயாரித்துள்ளார்.
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாற்றாது இந்த அரசாங்கம் முன்னெடுத்து செல்கின்றது. அதனை மாற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் சட்டமூலங்களை கொண்டு வந்து சட்டங்களை மாற்ற வேண்டும்.
இதேவேளை ஊழல் மோசடி தொடர்பான சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.