சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 33 ) சட்டத்தரணி, பாடும்மீன்.ஸ்ரீகந்தராசா
"இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
இனக்கலவரத்தின் விளைவாக, 1977 ஆகஸ்ட் மாதக் கடைசி வாரத்தில் கொழும்பிலிருந்து
ஊருக்கு வந்த நான், நாட்டு நிலைமை சீரடைந்தது விட்டது என்றும் மீண்டும் பணிக்குத்
திரும்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டமையால் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும்
கொழும்பிற்குச் செல்ல ஆயத்தமானேன். திரும்பிச் செல்லும் அரச ஊழியர்களுக்கு இலவச
புகைவண்டிப் பயண அனுமதிப் பத்திரம் ( Railway Warrant) அவ்வந்த மாவட்ட அரசாங்க
அதிபர்களால் வழங்கப்பட்டது. அதில் மட்டக்களப்பில் இருந்து செல்லும் என்னைப்
போன்றவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது.
அதற்கான அரசின் சுற்றுநிருபத்தில்“யாழ்ப்பாணத்திலிருந்து செல்பவர்களுக்கு” என்று இருந்திருக்கிறது. அதனால் எங்களுக்குத்தரமுடியாது என்று, கச்சேரியில் ஸ்தாபனக் கிளையில் அதற்குப் பொறுப்பாக இருந்த விடயஎழுதுவினைஞரும், அந்தக் கிளையின் தலைமை எழுதுவினைஞரும் மறுத்துவிட்டார்கள்.இதுபற்றி நான் கச்சேரியின் ஆளணிக்குப் பொறுப்பாக இருந்த, மேலதிக அரசாங்க அதிபர்எம். அந்தோனிமுத்து அவர்களிடம் முறையிட்டதும், அவர் அரசாங்க அதிபர் டிக்ஸன் நிலவீரஅவர்களிடம் எடுத்துரைத்ததன் பேரில், அவர் தனது தற்றுணிபு அதிகாரத்தின் மூலம்மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்குத் திரும்பிச் செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்கானபுகைவண்டிப் பயண உரிமப் பத்திரத்தை வழங்க அனுமதியளித்தார்.
இந்த விடயத்தை இங்கு நான் குறிப்பிடுவதற்குக் காரணம், அந்தக்காலத்தில்
அமைச்சுக்களிலும், திணைக்களங்களிலும் உப்பரிகையில் இருந்த நம்மவர்கள் சிலரின்
ஏனோதானோ என்ற அசமந்தப்போக்கினால் அல்லது குறுகிய மனப்பான்மையினால்
பல்வேறு தவறுகள் இடம்பெற்றன என்பதையும், அவற்றினால் பலர் மிகுந்த
பாதிப்புக்குள்ளானார்கள் என்பதையும் அறியத்தருவதே!நான் கொழும்பிற்கு மாற்றம் எடுத்துவந்த நோக்கம் சட்டம் படிப்பதே. ஆனால் எனது தாயார்படுகின்ற துன்பத்தை அதற்கு விலையாகக் கொடுக்க எனது மனம் இடந்தரவில்லை.
என்னைவழியனுப்பும்போது படிப்பும் வேணாம் ஒண்டும் வேணாம். நீ இங்கயே வந்திரு மகனே!இஞ்ச மாறுதல் எடுத்து வந்திரு மகனே! என்று கண்கள் கலங்க, நாத்தழுதழுக்க அம்மா
சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சில் ஒவ்வொரு கணமும் ஒலித்துக்கொண்டிருந்தன.
அதனால், மட்டக்களப்பிற்கு மாற்றம் எடுத்துச் செல்லத் தீர்மானித்தேன். அதற்காக இணைந்த
சேவைகள் பணிப்பாளரைச் சந்திக்க, கொழும்பு 7 இல், பௌத்தலோக மாவத்ததையில் இருந்த
பொது நிர்வாகத் திணைக்களத்திற்குச் சென்றேன். எந்தவித அரசியல் செல்வாக்குமின்றி,
எவருடைய விதப்புரையுமின்றி, இணைந்த சேவைகள் பணிப்பாளரை (அவரது பெயர்
ஜெயசிங்க என்று நினைக்கிறேன்) சந்தித்தேன். நின்ற நிலையில் தனது மேசையில் கிடந்த
கோப்புக்களில் எதையோ தேடிக் கொண்டிருந்த அவரிடம் எனது விண்ணப்பத்தைக்
கொடுத்தேன். எனது நிலைமையைச் சொன்னேன். அப்ப, படிப்பைக் கைவிட்டு விட்டாயா? “
என்று என்னிடம் கேட்டார்.
“ இந்த இளம் வயதில் மேலே படிப்பதை விட்டுவிட்டுப் போகும் உனது தீர்மானம் தவறு.
அதை நான் விரும்பவில்லை” என்று சொன்னர். அப்போது எனக்கு இருபத்து மூன்று வயது.
அந்த வயதில் கொழும்பில் இருப்பதே நல்லது என்றும், கிராமத்திற்குச் சென்றால் எதுவும்
செய்ய முடியாது, கலியாணம் கட்டத்தான் முடியும் என்றும் அவர் மனம்விட்டு அறிவுரை
கூறினார்.
அம்மாவுக்காக… என்றேன். என்னை ஒருநிமிடம் உற்றுப் பார்த்தார். எனது கோரிக்கையில்
நான் உறுதியாக இருப்பதை உணர்ந்த அவர், இறுதியாக,
" சரி, ஒருவாரத்தில் மட்டக்களப்பு கச்சேரிக்கு மாற்றம் செய்த ஆணை வரும். ஆனால்,
அதற்கிடையில் எந்த நேரமாவது, உனது எண்ணம் மாறினால், என்னிடம் வந்து சொல்."
என்று கூறி என்னை அனுப்பினார்.
அவர் ஒரு சிங்களவர் நான் தமிழன். சிலமாதங்களுக்கு முன்னர்தான் இனக்கலவரம் நடந்து
முடிந்தது. சிங்களவர்கள் அடித்துத் துரத்தினார்கள், நாங்கள் ஓடித்தப்பி ஊருக்குச் சென்றோம்.
ஆனால், அதே இனத்தைச் சேர்ந்தவர், எனக்கு எந்தவிதத்திலும் முன்னறிமுகம் இல்லாத அவர்
இப்படிச் சொன்னதும் எனது நெஞ்சில் நிலைத்திருந்த கருத்துக்கள் சுக்குநூறாகத்
தகர்வதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.
அவர் கூறியவாறே ஒரு வாரத்தில், எனக்கு மட்டக்களப்பு கச்சேரிக்கு 1977, டிசம்பர் மாதம்
பதினைந்தாம் திகதியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு கிடைத்தது.
மட்டக்களப்பு கச்சேரி எனக்குப் புதிய இடமல்ல. 1972 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் ஐந்தாம்
திகதி எனது பதினெட்டாவது வயதில், முதன்முதலாக அரச சேவையினை ஆரம்பித்ததே
அங்குதான். அன்றிலிருந்து 1974.02.17 வரை எனது அரும்பு மீசைப்பருவத்தில் அங்கே
பணியாற்றிய இரண்டுவருட காலத்தில் என்னைவிட மூத்தவர்களான பல
உத்தியோகத்தர்களின் நட்பினையும், நன்மதிப்பையும் பெற்றிருந்தேன். அதனால் விருப்போடுபணியாற்றும் மன உந்துதல் இருந்தது.
மட்டக்களப்பு கச்சேரியில் பணியாற்றும் காலத்தில் மேலதிக அரசாங்க அதிபர்
எம்.அந்தோனிமுத்து, ஆட்பதிவுத் திணைக்கள உதவிப்பணிப்பாளர்கள் எம்.கே.சங்கரதாஸ்,
எஸ். எம் சக்கரியாஸ், திட்டமிடல் பிரதம எழுதுனர் சதாசிவ ஐயர், கணக்காளர் துரைராஜா,
தாபனக்கிளை பிரதம எழுதுனர் எஸ்.ரீ.ஒக்கஸ், புவனேஸ்வரன், சாந்தலிங்கம், ஆரையம்பதி
இரண்டு தியாகராஜாக்கள், காசாளர்கள் அப்பாசாமி, சந்திரன், கணக்குக் கிளை, சாம்பசிவம்,
எச். ஏ.சீ.ராஜா வருமானக்கிளை சிவானந்தம் மற்றும் திருமதி சக்திராணி மகாலிங்கம்
………இப்படி மிக நீண்ட பட்டியல் உள்ளது. சிலரின் பெயர்கள் நினைவுக்கு வரவில்லை.
எல்லோருமே என்னவிட வயதிலும், சேவையிலும், மூத்தவர்களாக இருந்தவர்கள் எல்லோரும்
என்னுடன் அன்புடன் பழகியவர்கள்.
கச்சேரியில் சில மாதங்கள் பணியாற்றியபின்னர், வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர்
அலுவலகத்திற்கு மாற்றம் பெற்றுக்கொண்டேன். வெல்லாவெளியில் பணியாற்றிய காலத்தில்
தென்றலாய் வீசியும் புயலாய் அடித்தும் இடம்பெற்ற சம்பவங்களை 20ஆம் 21ஆம் மற்றும் 22
ஆம் அத்தியாயங்களில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
1979 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அளவில், சட்டப் படிப்பைத் தொடர்வதற்காக, மீண்டும்
கொழும்பிற்குச் செல்லத் தீர்மானித்த நான், கொழும்பிற்கு இடமாற்றம் பெறுவதற்கான
முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். நீதி அமைச்சில் கடமையாற்றுவதையே பெரிதும்
விரும்பினேன். அதற்கான முயற்சியின் இறுதிக் கட்டத்தில் இருந்தபோது, 1979 ஆம்
ஆண்டு ஜூலை மாத நடுப்பகுதியில் ஒருநாள் எதிர்பாராதவிதமாக அமைச்சர்
செ.இராசதுரை அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.
இரட்டை அங்கத்துவத் தொகுதியான, மட்டக்களப்பின் முதலாவது பாராளுமன்ற
உறுப்பினராகவிருந்த திரு. செல்லையா இராசதுரை அவர்கள், 1979 மார்ச் 7 ஆம் திகதி பிரதேச
அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றிருந்தார். அவர் தனது அமைச்சில் கடமையாற்ற
வரும்படி எனக்கு நேரடியாக அழைப்பு விடுத்தார். ஏற்கனவே கொழும்பிற்கு
இடமாற்றம்பெறுவதற்கான முயற்சியில் இருந்த எனக்கு, அதுவரை அதற்கான இடமாற்ற
உத்தரவு கிடைக்கப்பெற்றிராத நிலையில், பிரதேச அபிவிருத்தி அமைச்சில் பணியாற்றக்
கிடைத்த வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதனால், அமைச்சர் திரு.
செ.இராசதுரை அவர்களின் அழைப்பை ஏற்று, மறுநாளே கொழும்பிற்குப் பயணமானேன்.
நான் கொழும்பிற்கு இடமாற்றம் பெற முயற்சிசெய்துகொண்டிருக்கும் விடயம் அமைச்சர்
இராசதுரை அவர்களின் பிரதம் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த திரு.
க.சச்சிதானந்தம் அவர்களுக்கு முன்னரே தெரியும். அவரை ஒரு நாள் கொழும்பில்
தற்செயலாகச் சந்தித்தபோது, இதுபற்றிக் கூறியிருந்தேன். அதனால், அந்த நேரத்தில்
எதிர்பாராதவிதமாக அமைச்சர் இராசதுரை அவர்களின் அழைப்பு எப்படி வந்திருக்கிறது
என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சரான, சச்சிதானந்தம் அண்ணன் அவர்கள் எனது ஊரைச்
சேர்ந்தவர். எனது உறவினர். மட்/பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்
சங்கத்தின் தலைவராக அவரும், செயலாளராக நானும், உப தலைவராக (அமரர்) அல்பேட்
சீவரெத்தினம் அவர்களும் பணிசெய்த 1975/76 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளைப்பற்றிப்
பின்னர் எழுதுவேன்.
(நினைவுகள் தொடரும்)