கவிதைகள்
உன் அழகை பேரழகென்பேன்!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்
உன்னை ஒருநாள் ஓடையில் கண்டேன்
என்னை மேடையில் நீ பாரென்றாய்
தன்னழகும் தளிர் கொடியாய் திகழவே
அன்னமாய் மனதி்ல் அசைய மகிழ்ந்தேன்
பெண்ணே மண்ணில் நடந்து சென்றாலே
கண்ணே என்மனம் பொறுப்பது இலையே
பொன்னோ பூவோ தளிர்தான் உன்தாளோ
என்னே சொல்வேன் என்மனம் கலங்குதே
மேகத்தில் மறைந்து வெளிவரும் மதியாய்
தாகத்தை போக்கிடும் தண்ணிள நீராய்
மோகத்தில் என்னை மூழ்கிட வைத்தாய்
சோகத்தில் ஆழ்ந்தேன் உனை காணாதே
செவ்வானின் கீழே பகலவன் எழுவதும்
அவ்வானில் மறைய சந்திரன் தெரிவதும்
இவ்வாறே இங்கே இயற்கையும் இயங்க
அவ்வாறுன் அழகை பேரழகென்பேனே!