அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-36 ……… தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்
அண்மைக்காலமாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனத் தத்தம் கட்சிகளைக் குறிசுட்டுக்
கொண்டுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் கூறியுள்ள/கூறிவரும் கூற்றுக்கள் குறித்த
பிரதிபலிப்புகள்/பின்னூட்டல்கள் இங்கே பதிவு செய்யப்படுகின்றன.
* அரசியல் தீர்வு விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டமே இறுதித் தீர்வு என இந்திய
அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது- எம்.கே. சிவாஜிலிங்கம் (தமிழ்த்
தேசியக் கட்சி)
இந்தியா 13ஆவது திருத்தச் சட்டமே இறுதித் தீர்வு என ஒருபோதும் கூறியதில்லை. 13 ஆவது
திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வுக்கான ஆரம்பப்படியாக ஏற்றுப் பின் படிப்படியாக வடக்கு
கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒற்றை மொழிவாரி மாநில சுயாட்சியை அடைந்திருக்க
வேண்டிய சந்தர்ப்பத்தைக் – சாத்தியப்பாட்டைக் கெடுத்தது தமிழர் தரப்புத்தானே. (தமிழீழ
விடுதலைப் புலிகள்தானே). இந்தியா அல்லவே. தமிழர் தரப்பு முதலில் தன்னைத் திருத்திக்
கொண்டுதான் இந்தியாவுக்கு உபதேசம் பண்ணப் புறப்பட வேண்டும்.
* ;இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தமிழ் பேசும்
மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இங்குள்ள
மாவட்டங்களைக் கூறு போட்டு இன நிலத்தொடர்பை துண்டிக்கும் நடவடிக்கையை
இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டாது.இரா சம்பந்தன் பா.உ. (தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர்).
ஒரு கட்டத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்று இரா சம்பந்தன்
கூறிய கூற்று ஒரு புறமிருக்க இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவான
தற்காலிகமாகவேனும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசைத் தொடர்ந்து தக்க
வைப்பதற்கு, முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகமாகவும் பின்பு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புத் தலைவராகவும் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருந்த இரா
சம்பந்தன் மேற்கொண்ட காத்திரமான-உறுதியான அரசியற் செயற்பாடுகள் யாவை? பாட்டு
வாய்த்தால் கிழவியும் பாடுவாள் என்ற போக்கில் சந்தர்ப்பவாதக் கருத்துகளைக் கூறக்கூடாது.
* அரசியல் தீர்வு என்பது சமஷ்டிக் கட்டமைப்பிலான ஒரு அதிகாரப் பகிர்வாக-
அர்த்தமுள்ளதாக-இருக்க வேண்டும். அத்தகைய அதிகாரப் பகிர்வையே நாம் ஏற்றுக்
கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.எம் ஏ சுமந்திரன் பா உ
(தமிழ்த் தேசியக் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்)
அவ்வாறாயின், தமிழர் தரப்பு அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவும் இந்தியாவுக்கு நம்பகத்
தன்மையாகவும் அல்லவா நடந்து கொள்ள வேண்டும்.
சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் மற்றும் திருமதி நிர்மலா சந்திரஹாசன்
ஆகியோருடன் லண்டனில் இருந்து வந்த உலக தமிழர் பேரவை பிரதிநிதிகள் சகிதம்
அமெரிக்காவில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சென்று சந்தித்துப்
பேசியமையும் – இந்திய எதிர்ப்பு வாதத்தை உள்கிடக்கையாகக் கொண்டிருந்த
போராட்டத்தைச் சுமந்திரன் சாணக்கியனையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு பகிரங்கமாகஆதரித்தமையும்போராட்டக் காலத்தில் சுமந்திரன், சாணக்கியன் பா.உ. சகிதம்
கொழும்பில் சீனத் தூதுவரை ரகசியமாகச் சந்தித்தமையும் – 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு வெளியே புதிய அரசியலமைப்பு மூலம் அரசியல் தீர்வை நாடுவதும்
சுமந்திரனின் முரண்பாடான அரசியல் நடத்தைகளாகவல்லவா தெரிகிறது. படிப்பது தேவாரம்இடிப்பது சிவன் கோயிலாக இருக்கக் கூடாது.
*தமிழர்களின் விடயங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையைப்
பகடைக் காய்களாகப் பயன்படுத்துகின்றன–வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்
சார்ள்ஸ் நிர்மலநாதன்.
சார்ள்ஸ் நிர்மலநாதன் சார்ந்துள்ள தமிழரசுக் கட்சியும் அது தாய்க்கட்சியாகவிருந்து
தர்பார்நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்குக் கிழக்குத் தமிழர்களைத் தேர்தல்
பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதைப் போல என்று கூறலாம்.
;13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு இந்தியா
அழுத்தம் கொடுக்க வேண்டும்.-சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியின் தலைவர்)
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உடனடியாகவும் அவசியமாகவும்
தேவைப்படுவது தமிழர்களுக்குத்தான். இந்தியாவுக்கல்ல. தமிழ்த் தரப்பு 13 ஆவது
திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி ஒரு கூட்டு அழுத்தத்தை இலங்கை
அரசாங்கத்திற்குக் கொடுத்தால்தானே பதிலுக்கு இந்தியாவும் இலங்கைக்கு அழுத்தம்
கொடுக்க ஏதுவாயிருக்கும். தமிழ்த்தரப்பு இந்த விடயத்தில் சும்மா வாளாவிருந்துகொண்டு
இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல்
வாய் மெல்லுதல் பயன்தராது. பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுட முடியாது. முயற்சி தன்
மெய்வருந்தக் கூலி தரும்.