ரணிலால் ஏமாற்றம் பலர் தடுமாற்றம்; எவருடன் சேர்வதென விரக்தி
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து பிரசாரம் செய்த பலர் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை இழந்துள்ளமையால், தற்போது பல கட்சிகளாக பிரிந்து செயற்படும் குழுக்கள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒரு குழுவினரும் சஜித் பிரமேதாசவுடன் ஒரு தரப்பினரும் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்ததன் மூலம், ரணிலுடன் இணைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குழுக்கள் எவ்வாறு அரசியல் ரீதியாக செயலிழந்தன என்பதை காணக்கூடியதாக இருந்தது. அதன்படி தற்போது பல கட்சிகளாக பிரிந்து செயற்படும் குழுக்கள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகக் காணப்படுகின்றது.
ஆரம்பம் முதல் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து வந்த அநுராதபுரத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரமுகர் எஸ்.எம்.சந்திரசேன, கடந்த வாரம் திலித் ஜயவீரவின் மௌபிம ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.
மேலும் ரணிலை ஆதரித்த நிமல் லான்சா உள்ளிட்ட மற்றுமொரு குழு தற்போது மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து எதிர்கால அரசியலை செய்ய தயாராக உள்ளது. இதுதவிர ரணிலுக்கு ஆதரவான மதுர விதானகே உள்ளிட்ட இளம் எம்.பி.க்கள் குழு ஒன்று, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தங்களது எதிர்கால அரசியலை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த பலர் தற்போது ஏமாற்றமடைந்துள்ள நிலையில், அவர்கள் எதிர்காலத்தில் அரசியலில் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.