அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-35 ……… தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்
12.092022 இல் ஜெனீவாவில் ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள்
பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய இந்திய நாட்டுப் பிரதிநிதி இந்த்ரா
மணி பாண்டே (ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி), 13
ஆவது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளதுடன் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான முயற்சியில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் எதனையும் காட்டவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வைப் பொறுத்த வரை இந்தியாவின் தெளிவான
உறுதியான நிலைப்பாடு இதுதான் என்பதைத் தமிழர் தரப்பு உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த (விட்ட) இடத்திலிருந்துதான் தமிழர்கள் தமது பயணத்தைத் தொடர வேண்டும். அதை
விடுத்துத், தமிழர் தரப்பு இந்தியாவை விமர்சித்து எப்போதும் இந்தியாவை நோக்கி விரல்
நீட்டிக் கொண்டேயிருப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. இலங்கை அரசாங்கங்கள் எதுவும் ஒரு நாளும் தானாக விரும்பி முன்வந்து இனப்பிரச்சினைக்கான தீர்வு எதனையுமே வழங்கப்போவதில்லை மற்றும் இந்தியாவின் அனுசரணையோ அழுத்தமோ இன்றி இனப் பிரச்சனைக்கான தீர்வு எதுவும் இலங்கையில் சாத்தியமில்லை என்கின்ற யதார்த்தங்களின் அடிப்படையில் சிந்திக்கும்போது தமிழர் தரப்பு 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வெளியே புதிய அரசியலமைப்பு மூலம் தீர்வை எதிர்பார்ப்பது அல்லது தேடுவது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பௌத்த சிங்கள பேரினவாத மேலாதிக்கத்தை மேலும் விசாலிப்பதற்கான கால அவகாசத்தை இலங்கை அரசாங்கங்களுக்கு வழங்குமேயொழிய அம்முயற்சி அதாவது புதிய அரசியலமைப்பு
மூலம் அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு முயற்கொம்பாகவே முடியும்.
உண்மையில் தமிழர் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்றினைத்
தமிழர் தரப்பு அதில் அசமந்தமாகவும் அக்கறையற்றதாகவும் இருக்கும் சூழ்நிலையில் இந்தியா அவ்விடயத்தினை ஐ நா மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தி இருப்பதைத் தமிழர் தரப்பு நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையை ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தும் விதத்திலான தீர்மானமொன்றை எடுக்கும்படி ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கடிதமூலம் தனித்தனியே கோரியிருக்கும் ரெலோ தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட் ஈ பி ஆர் எல் எப் ஆகிய ஆறு கட்சிகளின் கூட்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் பா. உ. உம் -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பா.உ உம் வலியுறுத்தாத -வலியுறுத்தத் தவறிய ஒரு விடயத்தை இந்தியப் பிரதிநிதி இலங்கைத் தமிழ் மக்களுக்காக வலியுறுத்தியிருப்பது தமிழர்களுக்கு அனுகூலமானதும் இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு வெட்கக்கேடானதுமாகும்.
மட்டுமல்லாமல் தண்ணீர்ப் பந்தல் போடப் போகிறோம் அன்னதானம் கொடுக்கப்
போகிறோம்-(மற்றவர்கள் சார்பில்) நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வைக்கப்
போகிறோம் என வெளிக்கூறி (வழிச் செலவிற்குப் பணம் சேர்ப்பதற்காக) வருடா வருடம்
வழிபாட்டுத் தலங்களை நோக்கி யாத்திரை செல்லும் போலி அடியார்களைப் போல
(உண்மையான பக்தர்களைக் குறிப்பிடவில்லை) ஜெனீவா சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்
போகிறோமென்று (அங்கும் சென்று மேடை போட்டுப் பேசியிருக்கிறார்களென்றே செய்திகள்
வந்துள்ளன) ஆரவாரத்துடன் இலங்கையிலிருந்து இம்முறை ஜெனீவாவுக்கு (எதிர்காலத்தில்
வரவிருக்கின்ற உள்நாட்டுத் தேர்தல்களில் இதனைக் காட்டி வாக்கு சேகரிப்பதற்காக)
அரசியல் காவடிஎடுத்திருக்கும்;அரசியல் பிரகிருதிகள் (போலித் தமிழ்த் தேசியவாதிகள்)
வெளியில்தானும் வாய்திறக்காத ஒரு விடயத்தை இந்தியப் பிரதிநிதி பேரவைக்
கூட்டத்திலேயே தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முழுமையான -முறையான அமுலாக்கம் உடனடியாகத் தேவைப்படுவது வடக்குக் கிழக்கு மாகாணங்கள் வாழ் தமிழர்களுக்குத்தான். இந்தியாவுக்கு அல்ல. இந்தியாவுக்கு அது இரண்டாம் பட்சத்
தேவைதான். 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முழுமையான – முறையான
அமுலாக்கம் தமிழர்களுக்கு ஒரு தற்காப்பு வேலியாகும். ஆனால், தமிழர்கள் அதில்
ஆர்வமற்றிருக்கும்போது இந்தியா அதனைக் கவனத்தில் எடுத்திருப்பது, அதுவும் ஐநா மனித
உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இது குறித்துக் கூறியிருப்பது தமிழர்களின் அதிகாரப்
பகிர்வு நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்ப்பதாகும். இதன் பலாபலன்களை அறுவடை
செய்யும் வகையில் தமிழர் தரப்பு இந்தியாவுடன் ராஜதந்திர ரீதியான நகர்வுகளைக் கூட்டுச்
செயற்பாடாக முன்னெடுக்க வேண்டுமென இப்பத்தி இலங்கைத் தமிழர்களைப்
பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் சக்திகளையும் கேட்டுக் கொள்கிறது.
நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களைக் கோரிக்கையாக விடுப்பதும் அவற்றிற்காக
வெற்றுக் கோஷம் போடுவதும் கூட்டம் கூடி வெறும் வாயை மெல்லுவதும் ஆர்ப்பாட்டங்கள்
நடத்துவதும் தேர்தல் அரசியலுக்காக மக்களை ஏமாற்றும் வேலைகளாகும்.
பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரை பேரணி ;கௌரவமான உரிமைகளுடன் கூடிய
அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப்பொருளில் வடக்குக் கிழக்கு
ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரால் (தீர்வு என்னவென்ற தெளிவில்லாமல்) நடைபெறும்
100 நாள் கவனயீர்ப்புப் போராட்டம் -பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாந்தோட்டை வரை செல்லவுள்ள ஊர்தி வழிப் போராட்டம்
(கையெழுத்து வேட்டை) என ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு அமைப்பும் விளம்பரத்திற்காகவும்
பிரச்சாரத்திற்காகவும் தனித்தனியே நடாத்தும் பேரணி – ஊர்வலம் -கூட்டம்-
போராட்டங்களை விடவும், 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும்
முறையாகவும் அமுல் செய்யக்கோரும் மக்கள் பேரியக்கமொன்றினை அரசியல் மற்றும் சிவில் சமூகத்தினர் இணைந்து கூட்டுச் செயற்பாடாக முன்னெடுப்பார்களாயின் அதுவே
பயனுள்ளதாகும்.