Featureகட்டுரைகள்

வாக்குமூலம்-33 தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

“வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் சூழல் தற்போது இல்லாத
பட்சத்தில் அந்த மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வடக்கு கிழக்கு
பிரதேசங்களில் உள்ள சகல அரசியல் தரப்புகளையும் ஒன்றிணைத்து இடைக்கால
நிர்வாகமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்
செயலாளரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பகிரங்கக்
கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்”

இது ஒரு நல்ல நடைமுறைச் சாத்தியமான யோசனையே. இதனைத் தற்போதைய ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுமா?
அல்லது அரசாங்கத்தினால் இதனை நிறைவேற்றச் செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவினால் முடியுமா? என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க, இவ்வாறானதொரு
இடைக்கால நிர்வாகம் ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் –
முறையாகவும் அமுல் செய்வதற்கான அதிகாரம் படைத்திருந்தால் மட்டுமே அது பயனளிக்கும்.

13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை
அர்த்தமுள்ள விதத்தில் பிரயோகிப்பதற்குத் தேவையான நியதிச் சட்டங்களை ஆக்கி அவற்றைஆளுநரின் அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிக்கும் அதிகாரமும் இந்த இடைக்கால நிர்வாகத்திற்கு இருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் அது வெறுமனே கூடிக் கலையும்- தீர்மானங்களை மட்டுமே
நிறைவேற்றும் -ஆளுநர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்கும் பொறிமுறையாக
அமையுமானால் அது பின்னர், பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்த
கதையாகத்தான் முடியும். கடந்த காலங்களில் அரசாங்கங்கள் அமைத்த ஆணைக் குழுக்களைப் போல அதுவும் ஒரு பொம்மை அமைப்பாகத்தான் போய் முடியும்.
சந்திரிகா விஜய குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஜனாதிபதியாகவிருந்த காலகட்டத்தில்
வடக்கு கிழக்கு இணைந்ததாக இவ்வாறான ஒரு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையை
ஏற்படுத்தத் தானாகவே முன்வந்த போது குறுகிய கட்சி அரசியல் நோக்கங்களுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதனைக் குழப்பிய வரலாறுண்டு.
மட்டுமல்லாமல், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவிருந்த காலகட்டத்தில் அனைத்துத் தமிழ்
அரசியற் கட்சிகளும் இணைந்து ஐக்கியப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டத்தை
ஒருமித்து முன்வைப்பதற்காக அப்போதும் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா
அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளையும் உள்ளடக்கியதாக  தமிழ்க் கட்சிகளின் அரங்கம்
என்னும் பொறிமுறையை உருவாக்க முனைந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது
குறுகிய கட்சி அரசியல் நோக்கங்களுக்காக அம்முயற்சியை கருவிலேயே கலைத்த –
முளையிலேயே கிள்ளியெறிந்த இன்னுமொரு வரலாறுமுண்டு.

இந்தப் பின்னணியில் இந்த யோசனையை தமிழ்த் தேசியக் கட்சிகள் குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதிலும் குறிப்பாக அதன் தாய்க் கட்சியான தமிழரசுக் கட்சி பரந்தமனதுடன் ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக ஒத்துழைக்க முன்வருமா? என்பது சந்தேகமே.

காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசு கட்சி) வழமைபோல் – வைக்கோல் பட்டறை
நாய் போல – தானும் செய்யாது; செய்பவனையும் செய்யவிடாது தடுத்த அனுபவத்தைத் தமிழ்
மக்கள் பல தடவைகள் பட்டறிந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் மக்களின்
நலன்களையும் விடத் தமது கட்சி நலன்களே முக்கியமானவையும் முன்னுரிமையுமாகும்.
அண்மைக் காலங்களில் வேறு தமிழ்க் கட்சி / கட்சிகள் எடுத்த கூட்டு நடவடிக்கைகளைத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்க் கட்சியான தமிழரசுக் கட்சி எப்போதும் குழப்பி
அல்லது திசை திருப்பியே வந்துள்ளது.

இந்தப் பின்னணியில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனையை ஒட்டியதாக
நடைமுறைச் சாத்தியமான யதார்த்த பூர்வமான ஒரு விடயத்தை இப் பத்தி முன்வைப்பதுடன்
அதனை டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கும் கொண்டு வர விரும்புகிறது.
கடந்த வருடம் 09.04.2021 அன்று, தமிழர் விடுதலைப் கூட்டணி – அகில இலங்கை தமிழர்
மகாசபை – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும்
சமத்துவக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் கொழும்பில் கூடி 'அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்(MOVEMENT FOR DEVOLUTION OF POWER) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளன.

அதிகாரப் பகிர்வு இயக்கமானது தேர்தல் அரசியலை நோக்கமாகக் கொண்டதோர் அரசியற்
கூட்டணியல்ல. அது முற்றுமுழுதாக தேர்தல் அரசியலுக்கு அப்பால் – கட்சி அரசியலுக்கு
அப்பால், 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தினை முழுமையாகவும் முறையாகவும்
அமுல் செய்வதற்கான அரசியற் கள வேலைகளை முன்னெடுப்பதற்கானதோர் அமைப்பாகும்.

மேலும், அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதில் மாகாண சபைத் தேர்தல்கள்
நடைபெற்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபைகள் அமையும் வரை மாற்று ஏற்பாடுகளை
அரசியலமைப்பின் 154 S ஷரத்து அனுமதிக்கிறது. ஜனாதிபதிக்கு அந்த அதிகாரமுள்ளது.
அந்த வகையில், அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம் கடந்த ஒரு வருட காலமாகக்
கலந்துரையாடித் தயாரித்த 'அரசியலமைப்பின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை
முழுமையாக அமுல் செய்வதற்கான வழிகாட்டி' (A GUIDE FOR THE FULL IMPLEMENTATION OF
THE 13TH AMENDMENT TO THE CONSTITUTION) எனும் தலைப்பிலான ஆங்கில மொழிமூல
அறிக்கையொன்றினைத் தயாரித்து இவ்வருட முற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மற்றும்
பிரதமர் உட்பட உரிய அரசியற் பொறுப்பாளர்களிடம் கையளித்துள்ளது.
இவ் அறிக்கையின் பிரதி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி
வகித்த குறுகிய காலகட்டத்தில் அவருடைய அலுவலகத்திலும் கையளிக்கப்பட்டுள்ளது.
அதனை அவரும் அறிவார்.
இந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தற்போதைய ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்கவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் அரசியல் விருப்புடன்
முன்வருவார்களேயானால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்குக் கிழக்கில்
எதிர்பார்க்கின்ற இடைக்கால நிர்வாகப் பொறிமுறை விரைவில் சாத்தியமாக இடமுண்டு. இது
விடயமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் செல்வாக்கினைப்
பயன்படுத்துவது மட்டுமல்ல மேற்படி அதிகாரப் பகிர்வு இயக்கத்தில் தனது கட்சியான ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியையும் ஒரு பங்காளிக் கட்சியாக இணைத்துக் கொண்டு
செயற்படவும் முன்வருவாரேயானால் அதுவும் மிகப் பயனுள்ளதாகும். மட்டுமல்ல அது
அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தை அரசியல் ரீதியாக மேலும் வலுப்படுத்தும்.

எல்லாவற்றிற்கும் முதற்படியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ் ஐந்து
கட்சிகள் இணைந்த அதிகாரப் பகிர்வு இயக்கத்தின் நிறைவேற்றுக் குழுவுடன் மனந்திறந்த
உரையாடலொன்றைத் தாமதியாது மேற்கொள்ளும்படி இப்பத்தி அவரைத் தயவுடன்
வேண்டிக் கொள்கிறது.
ஒரு நாளும் ஊர் கூடித் தேர் இழுப்பதில்லை. முதலில் நான்கைந்து பேர்தான் தேரின்
வடத்தைப் பிடிப்பார்கள். அதன் பின்னர்தான் ஊர் கூடுவதும்; தேர் ஓடுவதும். எனவே,
அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வேலையில் நேரத்தை வீணாக்காமல்.
முதலில் மேற்கூறப்பெற்ற ஐந்து ஒன்றிணைந்த கட்சிகளால் உருவான அதிகாரப் பகிர்வுக்கான
இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வரவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.