சவால்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அஞ்சாது – சமூக மாற்றத்துக்கான பயணம் எதிர்ப்புகளை தாண்டியும் தொடரும்
சவால்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒருபோதும் அஞ்சாது. சமூக மாற்றத்துக்கான எமது பயணம் ஓர், இரு நாட்டிகளில் இடம்பெறக் கூடியதல்ல என்பதால் எத்தகையை எதிர்ப்புகள் வந்ததாலும் அவற்றை முறியடித்து முன்னோக்கி பயணிப்போம். அதற்காகவே மக்கள் ஆணை எமக்கு கிடைக்கப்பெற்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அசித நிரோசன எகொட வித்தான எம்.பி கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான நோக்கத்தின் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்தியை மக்கள் அதிகாரத்துக்கு கொண்டுவந்தனர். ஆழமான மாற்றமொன்றுக்காகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர். இது நபர் மாற்றத்துக்கான மக்கள் ஆணை மாத்திரமல்ல ஒட்டுமொத்தமாக சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்தின் பிரகாரம் மக்கள் ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் போது அதற்கு எதிராக பல சவால்கள் வரும். எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்புகள் இருக்க முடியும். இது யதார்த்தம். மாற்றத்துக்கு எதிரான தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து நாம் செயல்பட மாட்டோம்.
நாட்டு மக்கள் வழங்கிய மக்கள் ஆணைக்கே நாம் கௌரவமளிக்கிறோம். அந்த ஆணையின் பிரகாரமே நாம் செயல்படுவோம். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஏற்படும் சவால்களை முறியடித்து செயல்பட தயாராக இருக்கிறோம். சமூக மாற்றத்திற்கு அரச கட்டமைப்பின் பங்களிப்பு மாத்திரம் போதாது மக்களின் பங்களிப்பும் அவசியம் என்பதையே நாம் நம்புகிறோம்.
அதனால் ஒழுக்க ரீதியான விவகாரங்களில் தலையீடு செய்வது அவசியமாகும். இது நிறுவன ரீதியான மாற்றம் அல்ல சமூக ரீதியான மாற்றமாகும். சமூக மாற்றத்துக்கு மக்களின் மாற்றமும் பங்களிப்பும் அவசியமாகும். மக்களின் இயல்புநிலை மாற்றமடைய வேண்டும். இது ஓர், இரு நாட்களில் இடம்பெறும் விடயம் இல்லை.
எமக்கு எதிரான தரப்பினரும் எமது செயல்பாடுகளில் மாற்றமடைவார்கள் என எண்ணுகிறோம். அதிகாரத்தின் ஊடாக எமது திட்டத்தை செய்ய முடியாது. கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பிலான முழுமையான அறிவை பெற அரச அதிகாரிகளும் மக்கள் தெரிந்துகொள்ள சில காலம் செல்லும். அதிகாரத்தின் ஊடாக மாத்திரமே செயல்பாடுகளை செய்துள்ள அனுபவம் அரச ஊழியர்களுக்கு இதற்கு முன்பிருந்தது. அதனால் இதில் சில குறைப்பாடுகள் ஏற்படலாம். அவை வேண்டுமென்றே செய்யும் செயல்கள் அல்ல என நினைக்கிறோம்.
ஜனவரி 21, 22 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் விவாதமொன்றை நடத்த தீர்மானித்துள்ளோம். அதன் ஊடாக அரச ஊழியர்களும், மக்களும் மேலும் பல அறிவை பெற முடியும்.” என்றார்.