காணொளிகள்
“இசையமைப்பாளர்களிடம் கீபோர்ட் வாசிப்பதால் வரும் வருமானம் ரொம்பக் குறைவான சூழல்” …
“இசையமைப்பாளர்களிடம் கீபோர்ட் வாசிப்பதால் வரும் வருமானம் ரொம்பக் குறைவான சூழல் அப்போது.
புதுப் புது வாத்தியக் கருவிகளை நாமளே பணம் கொடுத்து வாங்கி வைத்துக் கொண்டு போய்த் தான் வாசிக்கணும், அப்படி வாங்க முடியாமல் கூட ரொம்பக் கஷ்டப்பட்டேன்.
அப்போது ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்த முதல் நாளில் நான் இசையமைத்த பாடல் இசைத்தட்டுடன், என்னென்ன வாத்தியம் வைத்திருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன்.
அப்போது ரஹ்மான்,
“இங்கே பாருங்கள் நீங்கள் சொன்ன வாத்தியங்கள்
எல்லாம் நானே வாங்கி வைத்திருக்கிறேன்,
நீங்க எதுவும் எடுத்து வர வேண்டாம்” என்றார்.
இப்படி சாய் வித் சித்ராவில் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஶ்ரீதர் குறிப்பிட்ட போது இரண்டு நிகழ்வுகள் ஞாபகத்துக்கு வந்தன.
“எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அப்பா இறந்துவிட்டார்.
என் தந்தை இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, என் அம்மா வீட்டை நடத்துவதற்காக அவரது இசைக்கருவிகளை வாடகைக்கு விடுவார், அதன் பிறகு உபகரணங்களை விற்று வட்டியுடன் வாழ அறிவுறுத்தப்பட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
“இல்லை, எனக்கு என் மகன் இருக்கிறான்.
அவன் கவனித்துக் கொள்வான் என்றாராம்.
என் அம்மாவுக்கு இசை சார்ந்த உணர்வோட்டம் இருந்திருக்கிறது. ஆன்மீக ரீதியாக அவள் சிந்திக்கும் விதத்திலும் முடிவுகளை எடுக்கும் விதத்திலும் என்னை விட மிக உயர்ந்தவர்.
உதாரணமாக, என்னை இசையை எடுக்க வைத்தது அவளுடைய முடிவு. அவர் என்னை பதினொன்றாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறி இசையை எடுக்க வைத்தார், இசைதான் எனக்கு ஏற்ற வழி என்பது
என் அம்மாவுடைய நம்பிக்கை”
என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியில் (2017) ஏ.ஆர்.ரஹ்மான் தன் தாயைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பால்ய கால வளர்ப்புச் சூழலே இவ்விதம் ஒவ்வொரு வாத்தியக் கருவிகளைத் தானே வாங்கி வைத்துக் கொள்ளும் பண்பு வளர்ந்திருக்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்னொரு பேட்டியில் ரஹ்மான் வேடிக்கையாகக் கூடச் சொன்னார் இப்படி
“என்னை கோடி கோடியாக வாங்கும் இசையமைப்பாளர் என்றெல்லாம் சொல்வார்கள், ஆனால் அதில் பெரும்பங்கு வாத்தியக் கருவிகளுக்கும், ஒலி உபகரணங்களுக்குமே போய் விடுகிறது” என்றார்.
அப்படியாக வாழும் கலைஞனுக்கு இதெல்லாம் வாழ்வின் கூறு.
அப்படியாக வாழ்ந்ததால் தான், இன்னோர் கலைஞனுக்குத் தன் வாத்தியச் சொத்தைப் பகிர முடிந்தது.
ஊருக்காக ஆடும் கலைஞன்
தன்னை மறப்பான்!
தன் கண்ணீரை மூடிக்கொண்டு
இன்பம் கொடுப்பான்!
கானா பிரபா.