வைகுண்ட ஏகாதசி விரதம்!
வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் இரவில் கண் விழித்து வழிபட வேண்டும் என எதற்காக சொல்கிறார்கள் என்ற காரணத்தையும், வைகுண்ட ஏகாதசி விரதம் பிறந்த கதையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி விரதம் :
விரதங்களிலேயே மிகவும் புண்ணிய பலனை தரக் கூடியது ஏகாதசி விரதம்.
மாதத்திற்கு இரண்டு முறை என வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வந்தாலும், மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே இரவில் கண்டிப்பாக கண் விழித்து, விரதம் இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
மற்ற மாதங்களில் வரும் ஏகாதசிகளில் நிர்ஜல உபவாசம், அதாவது தண்ணீர் கூடி குடிக்காமல் நாள் முழுவதும் மிக கடுமையாக ஏகாதசி விரதம் கடைபிடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதே போல் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் தான் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வும் அனைத்து வைணவ தலங்களிலும் நடைபெறும்.
மற்ற எந்த மாதத்திற்கு இல்லாத தனிச்சிறப்பாக மார்கழி மாதத்தில் மட்டுமே வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக வரும் பெருமாளை தரிசிக்க முடியும்.
வைகுண்ட ஏகாதசி பிறந்த கதை :
வைகுண்ட ஏகாதசி அன்று எதற்காக உணவு சாப்பிடால் விரதம் இருக்க வேண்டும், இரவில் கண்டிப்பாக கண் விழிக்க வேண்டும் என சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் ஏகாதசி விரதம் உருவான கதை, யார் இந்த ஏகாதசி என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தீபாவளி, கந்தசஷ்டி ஆகிய விழாக்களை போன்று வைகுண்ட ஏகாதசியும் அசுர வதத்தின் அடையாளமாக கொண்டாடப்படும் ஒரு விரதமாகும்.
ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணு ஆழ்ந்த நித்திரையில் இருந்து போது அவரது இடது காதில் இருந்து மது, கைடபர்கள் என இரு அசுரர்கள் வெளிபட்டனர்.
இவர்கள் மகாவிஷ்ணுவிடம் இருந்து தோன்றியதால் அதிக வலிமை படைத்தவர்களாக இருந்தனர்.
இதனால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் துன்பப்படுத்தி வந்தனர்.
யார் இந்த ஏகாதசி ?
அசுரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்தனர். அவரும் தேர்களை காப்பதற்காக அசுரர்களிடம் போரிட்டார்.
நீண்ட காலம் போரிட்டதால் களைப்படைந்த பெருமாள், ஒரு குகையில் சென்று தன்னுடைய ஆயுதங்களை புதுப்பிக்கும் பணியை செய்து கொண்டே, ஓய்வும் எடுத்தார்.
குகையில் பெருமாள் நிராயுதபாணியாக ஓய்வில் இருப்பதை தெரிந்து கொண்ட அசுரர்கள், இது தான் சரியான சமயம் என கருதி, பெருமாளை அழிக்க வந்தனர்.
அப்போது பெருமாளின் உடலில் இருந்து பெண் சக்தி ஒன்று வெளிபட்டு, அசுரர்களை போரிட்டு அழித்தது.
அந்த பெண் சக்தியை போராற்றி பாராட்டிய பெருமாள், “இன்று முதல் நீ ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்படுவாய்.
விரதம் இருந்து உன்னை வழிபடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும்” என வரமளித்தார்.
அசுரர்களுக்கு பெருமாள் அளித்த வரம் :
ஏகாதசியால் அழிக்கப்பட்ட அசுரர்கள், தங்களின் தவறை உணர்ந்து பெருமாளிடம் மன்னிப்பு கேட்டனர்.
அவர்களை மன்னித்து அருள் செய்த பெருமாள், தன்னுடன் அவர்களையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அவர்கள், “எங்களுக்கு அருள் செய்ததை போலவே இந்த நாளில் உலக மக்கள் அனைவருக்கும் நீங்கள் வைகுண்டத்தில் இருந்து வெளியே வந்து அருள் செய்து, அவர்களின் பாவங்களை போக்கி, வைகுண்ட பதவியை அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.
அதனை ஏற்று அப்படியே ஆகட்டும் என வரமளித்தார் பெருமாள்.
இது நடந்தது மார்கழி மாத ஏகாதசி தினத்தில்.
ஏன் அரிசி உணவு சாப்பிடக் கூடாது?
மது, கைடபர்கள் அரிசியின் வடிவத்திலேயே இருப்பதால் வைகுண்ட ஏகாதசி அன்று அரிசி உணவுகளை உட்கொண்டால் நமக்குள் அசுரர்கள் வந்து விடுவார்கள் என்பதால் இந்த நாளில் அரிசியில் செய்த சாதம் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றார்கள்.
அதே சமயம், அரிசியை நன்கு பொடியாக்கி, அரைத்து செய்யப்படும் இட்லி, உப்புமா போன்ற உணவுகளை வைகுண்ட ஏகாதசியில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை என சொல்லப்படுகிறது.
ஆனால் நம்முடைய உடல் இயக்கங்கள் ஒடுங்கும் போது, மனமானது இறைவனுடன் ஒன்றும் என்பதால் கடுமையான விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
இரவில் கண் விழிக்க காரணம் :
பெருமாள், நித்திரையில் இருந்த போது அசுரர்கள் அவரது உடலில் இருந்து வெளிப்பட்டு, அவர் குகையில் இருக்கும் போது அவரையே கொல்ல அசுரர்கள் முயற்சி செய்தார்கள்.
அதனால் வைகுண்ட ஏகாதசி அன்று நம்மை பல விதமான துன்பங்களுக்கு ஆட்படுத்தி, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் அசுர குணங்கள், பாவங்கள் ஆகியவற்றை போக்கிக் கொள்வதற்காக உறக்கத்தை விடுத்து, விழிப்பு நிலையில், இறை சிந்தனையில் இருந்து இறைவனின் திருவடிகளை அடைய வேண்டும் என்பதற்காக தான் வைகுண்ட ஏகாதசி அன்று இரவில் கண் விழிக்க வேண்டும் என்கிறார்கள்.
விழித்திருந்து அசுரர்கள் பாவ மன்னிப்பு பெற்று, வைகுண்ட பதவி பெற்ற அந்த சமயத்தில் நாமும் பெருமாளின் அருளை பெற வழிபட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
மார்கழி மாத வழிபாடு :
மனிதர்களின் ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். அப்படி தேவர்கள் மட்டுமின்றி, பெருமாளுக்கும் நித்திரை கொள்ளும் இரவு பொழுதாக இருப்பது கார்த்திகை மாதம். அவர்கள் கண் விழிக்கும் அதிகாலை வேளையாக கருதப்படுவது மார்கழி மாதம்.
ஒருவர் காலையில் கண் விழிக்கும் போதே அவர்கள் மனம் மகிழும் படியான விஷயங்கள் சுற்றி இருந்தால், அந்த மகிழ்ச்சியில் வேண்டுபவர்கள் வேண்டும் வரங்களை அளிப்பார்.
அப்படி தேவர்களும், பெருமாளும் தூக்கத்தில் இருந்து கண் விழிக்கும் மார்கழி மாதத்தில் அவர்களை போற்றி பாடி, வழிபட்டால் நாம் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பதாலேயே மார்கழி மாதத்தில் கண்டிப்பாக அதிகாலையில் எழுந்து வழிபட வேண்டும் என்கிறார்கள்.