காணொளிகள்
அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் வருகிறார் பராக்! பராக்!!
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்றம்ப் ஜனவரி 20ம் திகதி பதவியேற்க இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் அவரின் புதிய புதிய அதிரடிப் பேச்சுக்களை உலகமே மிரண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றது. டென்மார்க் அரசுக்குச் சொந்தமான கிறீன்லண்ட் தீவை தனது பாதுகாப்புக் கருதி அமெரிக்காவுடம் இணைக்கப் போவதாக சொல்லியுள்ளதுடன், அதிரடியாக கனடாவையும் தனது 51வது மாநிலமாக இணையலாம் என்று குண்டொன்றை போட்டுள்ளார். வடக்கு அமெரிக்க -தெற்கு அமெரிக்கக் கண்டங்களுக்கிடையில் உள்ள பனாமா கால்வாயை மீண்டும் பனாமா அரசிடம் இருந்து பிடுங்குவேன் என்று மேலும் ஒரு அறிவிப்பை விட்டு சீனா உட்பட்ட பல நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார். நேட்டோ, பரிஸ் உடன்படிக்கை ஆகியவற்றில் இருந்தும் விலகப்போவதாகக்கூட முன்பு ஐரோப்பிய அரசுகளை மிரட்டியிருந்தார்.
20ம் திகதி நான் பதவியேற்கும் போது இஸ்ரேல் பணயக்கைதிகள் எல்லோரும் விடுவிக்கப்பட்டிருக்கா விட்டால் ஹமாஸ், ஹிஸ்புல்லா எல்லோருக்கும் என்ன நடக்கும் பாருங்கள் என்று மிரட்டியிருக்கின்றார். (All hell will break loose in the middle east- என்றார்)
ட்றம்பின் பிரதம ஆலோசகராக உலகப் பெரும் செல்வந்தரான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளதுடன் முன்பு இவரை எதிர்த்து வந்த மெட்டா (Facebook இன் தாய் நிறுவனம்) நிறுவன சொந்தக்காரரான மார்க் சுக்கர்பேக் கூட தற்போது ட்றம்ப்பின் கால்களை கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கின்றார். இவர்களுடன் அமெசான் நிறுவன தலைவர் ஜெப் பிசோ, அப்பிள் நிறுவன தலைவர் ரிம் குக், ஓப்பின் AI தலைவர் சாம் ஆல்ட்மன் ஆகியோரும் கை கோர்த்துள்ளனர்.
ஒரு தீவிர வலதுசாரி சிந்தனைகுழாம் எழுதிய 900 பக்க Project 2025 மேலும் பல சர்ச்சைக்குரிய வேலைத்திட்டங்களை கொண்டிருந்தாலும் தனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று இதுவரை ட்றம்ப் கூறிவருகின்றார்.
அடுத்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கடுத்த 5 ஆண்டுகள் கூட பல மாற்றங்களை உலகில் நாம் காணக்கூடியதாக இருக்கும்.