சொல்லித்தான் ஆகவேண்டும்!…. அரசியல் பத்தித்தொடர் 26… தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் இனியும் ‘பழைய குருடி கதவைத் திறடி’ தானா?
21.09.2024 அன்று இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின்போது இலங்கை அரசியலில் ஒரு முறைமை மாற்றத்தை – பண்பு மாற்றத்தை இலக்கு வைத்து தென்னிலங்கையில் எழுந்த ‘அனுர’ அரசியல் அலை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்காவை ஜனாதிபதியாக மேலெழச் செய்து பின்னர் 14.11.2024 அன்று நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் முழு இலங்கையையும் மேவிச்சென்று 159 பேரை (பாராளுமன்ற உறுப்பினர்களை) பாதுகாப்பாகக் (தேசிய மக்கள் சக்தியில்) கரையேற்றிவிட்டு – பல பேரை (முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல பாராளுமன்றப் பெருந்தலைகளை) மூழ்கடித்துவிட்டு சில பேரை (66 பேரை) எதிர்க்கரையில் (எதிர்க்கட்சியில்) ஒதுக்கியுள்ளது.
தென்னிலங்கையில் எழுந்த இந்த ‘அனுர’ அலை பக்கவாட்டில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களையும் தழுவியும் கழுவியும் சென்று அடுத்த நகர்வுக்காக அடிகோலுகிறது.
இலங்கைத் தமிழர்கள் ஆகிய நாம் வழமைபோல் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியும் அறிக்கைப் போர்களை நிகழ்த்தியும் வெற்று வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டும் கரையில் நின்று புதினம் பார்க்கப் போகிறோமா? அல்லது இந்த அலையடிப்பின் சாதக பாதகங்களை அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து அவற்றிலிருந்து அடையக்கூடிய அனுகூலங்களை ‘அறுவடை’ செய்யப் போகிறோமா?
இதற்குப் பதில் என்னவென்றால், இன்று தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் பிராந்திய அரசியலில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களையும் பிராந்திய அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம் பூகோள அரசியலில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களையும் கணிப்பீடு செய்து நமது அரசியல் வழிவரை படத்தைச் சீரமைக்கவேண்டியது அவசியமாகும்.
இலங்கைத் தமிழர்கள் எதிர்காலத்தில் எதிர்பார்ப்பது எதனை என்றால் கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக அழிவுகளையே அனுபவங்களாகத் தந்த உணர்ச்சிமைய மரபுவழி அரசியலிலிருந்து விடுபட்டு – தமிழ் மக்களைச் சமூக பொருளாதார ரீதியாகக் கைதூக்கி விடக்கூடியதும் அதே வேளை தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தையும் இருப்பையும் பாதுகாத்து வளர்த்தெடுக்கக்கூடியதுமான ‘மாற்று அரசியல்’ ஒன்றினைத்தான்.
இந்த ‘மாற்று அரசியல்’ என்பது யாது?
தமிழ் மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தித் தேவைகளுக்கான நடவடிக்கைகளையும் அதற்கு அவசியமான அதிகாரப் பகிர்வுச் செயற்பாடுகளையும் சமகாலத்தில் சமாந்தரமாக வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்லக்கூடியதோர் அறிவார்ந்த அரசியல் அணுகுமுறையே ‘மாற்று அரசியல்’ ஆகும். இதற்குத் தமிழ் மக்களிடம் தற்போதுள்ள ஒரேயொரு கருவி ‘மாகாண சபை முறைமை’ யேயாகும்.
இந்த ‘மாற்று அரசியல்’ கோட்பாட்டின் – கருத்தியலின் பயன்பாட்டை இன்று தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள முறைமை மாற்றத்துடன் தமிழ் மக்களும் கைகோர்த்துப் பயணிப்பதினூடாகவே அடைய முடியும். இதனையே தென்னிலங்கைப் பெரும்பான்மைச் சமூகமும் தமிழ் மக்களின் நலன்கள் மீது அக்கறை கொண்டுள்ள பிராந்திய அரசியல் சக்திகளும் சர்வதேச அரசியல் சக்திகளும் எதிர்பார்க்கின்றன.
கடந்த காலங்களைப் போல எடுத்ததற்கெல்லாம் ‘போர்க்கோலம்’ பூணுவதும் எல்லாவற்றையும் எப்போதுமே சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதும் புத்திசாலித்தனமாகாது.
இந்த மாற்று அரசியலை எங்கிருந்து ஆரம்பிப்பது?
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாண சபை முறைமையானது தமிழ் மக்கள் போராடிப் பெற்றதொன்றாகும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன் உத்தேச புதிய அரசியலமைப்பு வரும்வரைக்கும் நடைமுறையிலுள்ள அதிகாரப் பகிர்வுப் பொறிமுறையான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யப் போவதாகவும் தன்னுடைய ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அறிவித்துள்ளார். (உத்தேச புதிய அரசியலமைப்பு வருகிறபோது வரட்டும். அதற்காகத் தமிழ் மக்கள் காத்திருக்க வேண்டியதில்லை.)
ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் மாகாண ஆளுநர்களையெல்லாம் கூட்டிய சந்திப்பில் மாகாண சபைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளை அறிக்கையிடும்படியும் கேட்டிருக்கிறார்.
இந்த மூன்று விடயங்களையும்-நிகழ்வுகளையும் தமிழர்கள் நேர்மறைச் சிந்தனைகளுடன் நோக்கிச் செயற்பட வேண்டும். (எதிர்மறையாகச் சிந்திப்பது எந்தப் பலனையும் விளைவிக்காது.)
இந்தச் செயற்பாட்டின் முதல் நடவடிக்கையாகப் பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே – கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு வெளியே- தேர்தல் அரசியலுக்கு வெளியே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம் ஒன்றினைத் தமிழ் மக்களிடையேயுள்ள ‘மாற்று அரசியல்’ சக்திகளை ஒன்றிணைத்து ஆரம்பித்துச் செயற்படுவதே ஜனாதிபதி உறுதியளித்துள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ‘ஊக்கி’யாக அமையும்.தற்போது தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் (போலித்) தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் இதனைச் செய்யப் போவதில்லை. செய்ய முன்வருமாயின் அது நல்லதே. ஆனால் இவர்கள் செய்வார்களெனக் காத்திராமல் தமிழ் மக்களிடையேயுள்ள மாற்று அரசியல் சிந்தனையாளர்கள் ஒருங்கிணைந்து ‘மாற்று அரசியல் அணி’ யாக நிறுவனமயப்படவேண்டும்.
இவ்வாறான நிறுவனமயப்படுதல் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன் கூட்டியே நிகழவும் வேண்டும். ஏனெனில் இத்தகைய மாற்று அரசியல் அணி எதிர்வரும் காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரத்தில் பிரதான பங்காளராக மாற வேண்டியதோர் அரசியல் தேவைப்பாடும் உள்ளது. அப்போதுதான் மாற்று அரசியல் சிந்தனைகள் செயல்வடிவம் பெறும். இல்லையேல் தமிழர்களுடைய அரசியலில் ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதைதான் தொடரும்.