காணொளிகள்

சிறீலங்காவைச் சுத்தப்படுத்த முடியுமா? … யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

 சிறீலங்காவை கிளீன் பண்ணத்தான் வேண்டும். ஆனால் அதை எங்கிருந்து தொடங்குவது? சிறீலங்காவின் கறை எது? அல்லது அசுத்தம் எது? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்துதான் சுத்தப்படுத்தலைத் தொடங்கலாம். சிறீலங்காவின் அசுத்தம் எது?
இனப்பிரச்சினைதான். இன மோதல்கள்தான் சிறீலங்காவை உலக அரங்கில் அவமானப்படுத்தின.இனப்பிரச்சினைதான் சிறீலங்காவை ஜெனிவாவில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இனப்பிரச்சினைதான் தமிழ் மக்களை கூடு கலைந்த பறவைகள் ஆக்கியது. இனப்பிரச்சினைதான் சிறீலங்காவுக்குள் வெளிச் சக்திகள் தலையிடும் வாய்ப்பை வழங்கியது. இனப்பிரச்சினைதான் நாட்டைப் பொருளாதார ரீதியாக நாசமாக்கியது.கடன் வாங்கிச் சண்டை செய்தார்கள். கடனுக்கு வெடிமருந்து வாங்கி தமது சக இனத்தவர்களைக் கொன்றார்கள். காசைக் கரியாக்கினார்கள். விளைவாக நாடு அதன் முதலீட்டுக் கவர்ச்சியை இழந்தது.எந்த நாட்டை சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்தார்களோ,அந்த நாட்டிலிருந்து இப்பொழுது சிங்கள மக்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெளியேறியிருக்கிறார்கள்.
முன்பு யுத்த காலங்களில் தமிழர்கள் வெளியேறினார்கள். காரணம் உயிர்ப் பயம். இப்பொழுது சிங்கள மக்களும் வெளியேறுகிறார்கள். இப்பொழுது வெளியேறும் அதிகமானவர்கள் படித்தவர்கள்,துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்கள்.பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள்.நடுத்தர வயதுக்காரர்கள்…ஏன் வெளியேறுகிறார்கள்? யாருக்காக நாட்டை வென்று கொடுத்தார்களோ,அவர்களே வெளியேறுகிறார்கள். என்றால் அந்த வெற்றியின் பொருள் என்ன? வென்றெடுத்த நாடு யாருக்குச் சொந்தம்?
அது இப்பொழுது பேரரசுகளுக்குச் சொந்தமாகி வருகிறது.எல்லாப் பேரரசுகளின் இழு விசைகளுக்குள்ளும் நாடு சிக்கிவிட்டது. பொருளாதார நெருக்கடியின் விளைவாக அது கடன் வாங்கிய நாடுகள் மற்றும் உலகப் பொது நிதி நிறுவனங்களின் பிடிக்குள்ளும் வந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் அரசாங்கம் நிலையான வைப்புக்களுக்கான வட்டிக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்தியிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க அந்த வரியை ஐந்து விகிதமாக உயர்த்தினார்.அனுர அதனை பத்து விகிதமாக உயர்த்தியிருக்கிறார்.அரசாங்கம் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கீழ்படிந்தே அவ்வாறு வரியை உயர்த்தியிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு மட்டும் இருப்பது லட்ஷத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வந்தார்கள்.அதேசமயம் மூன்று லட்ஷத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.
போர் காரணமாக தமிழர்கள் அப்பொழுதோ புலம்பெயரத் தொடங்கி விட்டார்கள்.பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், மீண்டும் தமிழ்ப் புலம்பெயர்ச்சி அதிகரித்திருக்கிறது.இது மூன்றாவது தமிழ்ப் புலப்பெயர்ச்சி அலை. இந்த அலை முன்னைய இரண்டு புலப்பெயர்ச்சி அலைகளில் இருந்தும் துலக்கமான விதங்களில் வேறுபடுகிறது. முதலாவது புலப்பெயர்ச்சி அலையானது 1983 யூலைக்கு முந்தியது. அதில் ஆங்கிலம் பேசும் படித்த, பெருமளவுக்கு உயர் குழாத்துத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள்.அவர்கள் சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தது குறைவு. இரண்டாவது அலை 1983இற்குப் பின்னரானது.அதில் லட்சக்கணக்கானவர்கள் புலம் பெயர்ந்தார்கள்.அவர்களில் அதிகமானவர்கள் சட்ட விரோதமாகப் புலம் பெயர்ந்தார்கள். சட்டவிரோத வழிகளின் ஊடாகப் புகலிடந் தேடிச் சென்றவர்கள்.
இப்பொழுது நிகழும் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையும் ஒப்பீடடளவில் சட்ட ரீதியானது. ஏனென்றால் ஏற்கனவே புலம் பெயர்ந்தவர்கள் அந்தந்த நாடுகளில் செற்றில்ட் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஊரில் உள்ள தங்கள் உறவுகளுக்கு ஸ்பொன்சர் செய்யக்கூடிய அல்லது விசா வாங்கிக் கொடுக்கக்கூடிய தகைமையை அடைந்து விட்டார்கள். இது மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையின் ஒரு பிரதான வேறுபாடு.அடுத்தது இப்பொழுது புலம்பெயரும் தமிழர்களில் அநேகர் படித்தவர்கள்.நடுத்தர வயதினரும் உண்டு. இங்கு பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள்,அரசு ஊழியர்கள்,சமூகத்தின் துறைசார் தலைமைத்துவம் என்று வர்ணிக்கத்தக்கவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அதில் ஒரு பகுதியினர் திரும்பி வருகிறார்கள். தாயகத்தில் தமது பதவி நிலை காரணமாக அனுபவித்த அதேயளவு மரியாதை புலம் பெயர்ந்த நாட்டிலும் கிடைக்காதபோது விரக்தியடைகிறார்கள்.குறிப்பாக நடுத்தர வயது கடந்தவர்கள் புலம் பெயர்ந்த நாட்டின் நிலைமைகளோடு தங்களைச் சுதாகரிக்க முடியாது போகும்போது திரும்பி வருகிறார்கள். இதுவும் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையின் பிரதான வேறுபாடுகளில் ஒன்று.
அண்மையில், ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு பிரபல எழுத்தாளர் என்னைக் காண்பதற்கு வந்திருந்தார். அவரோடு ஓர் இளம் அரச ஊழியரும் வந்திருந்தார். அந்த அரச ஊழியர் சொன்னார்,தான் புலம் பெயரப் போவதாக. ஏனென்று கேட்டேன். “ ஒரு அரசு ஊழியனாக என்னால் தாக்குப் பிடிக்க முடியாதுள்ளது. ஒரு புதிய வீட்டைக் கட்டினேன்.மூன்று மில்லியன்களுக்கும் மேல் கடன்.அந்த கடனை அடைப்பதற்காக என்னுடைய சம்பளத்திலிருந்து பெரும் தொகுதி போகிறது. ஜீவனோபாயத்துக்காக அப்பாவும் அம்மாவும் வீட்டில் ஒரு கடை திறந்து விட்டிருக்கிறார்கள்.அந்த கடையைத் திறப்பதற்கான முதலீட்டில் ஒரு பகுதியையும் புலம் பெயர்ந்த நண்பர்கள்தான் தந்தார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் என்னுடைய கடன் ஒரு சிறிய தொகை.ஆனால் அரச ஊழியனாகிய எனக்கோ அது பெரிய தொகை.எனவே கடனாளியாக இருப்பதை விடவும் புலம்பெயரலாம் என்று முடிவெடுத்தேன்”என்று சொன்னார்.
அவரோடு எழுத்தாளர் சொன்னார் “அவர் சொல்வது உண்மை. ஏனென்றால் என்னுடைய கிராமத்துக்கு அண்மையில் ஒரு சா வீட்டுக்குப் போயிருந்தேன். என்னுடைய வயதில் உள்ளவர்கள் அங்கே வந்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் தோற்றத்தில் கிழண்டிப் போய்க் காணப்பட்டார்கள். அவர்களுடைய வயதை விட அதிகம் முதுமையான தோற்றம். ஏனென்றால் வாழ்க்கை அந்தளவுக்குக் கஷ்டமாக இருக்கிறது; சுமையாக இருக்கிறது” என்று.
இவ்வாறு மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையின் கீழ் எத்தனை தமிழர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள் என்பது தொடர்பாக சரியான புள்ளி விபரம் யாரிடமாவது உண்டா?
இப்படியாக போரில் வென்றவர்களும் புலம் பெயர்கிறார்கள்;தோற்றவர்களும் புலம் பெயர்கிறார்கள்.இப்பொழுது வெற்றிக்கும் பொருள் இல்லை. தோல்விக்கும் பொருள் இல்லை.இந்த லட்சணத்தில் நாட்டைச் சுத்தப்படுத்துகிறேன் என்று புறப்பட்டு வேண்டுமானால், வீதிகளைச் சுத்தப்படுத்தலாம்.சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தலாம்.அதற்கும் வரையறைகள் உண்டு. ஏனென்ன்றால் சுற்றுச் சூழலும் அரசியல் தான்.
ஒப்பீட்டளவில் ஓரளவுக்காவது சுத்தப்படுத்தக்கூடிய துறை அதுதான்.அது தவிர ஏனைய எந்தத் துறையிலும் நாட்டைச் சுத்தப்படுத்த முடியுமா? கடினம். ஏனென்றால் ஊழல்,முறைகேடு,அதிகார துஷ்பிரயோகம் போன்றன ஒரு பண்பாடாக வளர்ந்து விட்டன.எங்கிருந்து அவை பண்பாடாக மாறின? எல்லாப் பிரச்சினைகளையும் இனப்பிரச்சினைமூலம் திசை திருப்பலாம் என்ற அரசியல் சூழல்தான் காரணம்.எல்லாத் தவறுகளையும் இந முரண்பாடடைத் தூண்டுவதன்மூலம் கடந்து விடலாம் என்ற ஒரு அரசியல் சூழல்தான் காரணம். தமிழ்ப் பகுதிகளில் அரச திணைக்களங்களில் காணப்படும் விமர்சனத்துக்குரிய பெரும்பாலான அம்சங்கள் தொடர்பாக அதிகாரிகளைக் கேட்டால்,”அரசாங்கம் விடுவதில்லை அல்லது மேலதிகாரிகள் இனரீதியாக விவகாரத்தை அணுகுவார்கள் “என்றெல்லாம் சாட்டுச் சொல்லுவார்கள். “நாங்கள் எதையாவது செய்தால் அதனை இனரீதியாக வியாக்கியானப்படுத்தி எங்களைப் பதவி இறக்கி விடுவார்கள். அல்லது நமது பதவி உயர்வுகளை நிறுத்தி விடுவார்கள்” என்று கூறுவார்கள்.
இப்படியே இரண்டு இனங்கள் மத்தியிலும் காணப்படுகின்ற எல்லா முறைகேடுகளுக்கு இன முரண்பாட்டை ஒரு சாட்டாகச் சொல்லும் பண்பாடு வளர்ந்து விட்டது. ஏன் அதிகம் போவான்? ராஜபக்ச குடும்பத்தில் பசில் ஒரு புரோக்கராக,ஒரு டீல் மேக்கராக எப்படி எழுச்சி பெற்றார்? யுத்த வெற்றிதான் காரணம்.யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டைத் தனிப்பட்ட சொத்தாக மாற்றினார்கள்.நாட்டின் கருவூலத்தைத் திருடினார்கள். வெற்றி மயக்கத்தில் குருடாக இருந்த சிங்கள மக்களுக்கு அது முதலில் தெரியவில்லை. அது தெரிந்த பொழுது, நாடு மீள முடியாதபடி பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கி விட்டது.
இப்பொழுது அனுர வந்திருக்கிறார். இன முரண்பாடுகள் இல்லை என்று சொல்லுகிறார். அது தவறு.இன முரண்பாடுகள் எப்படி இல்லாமல் போயின? தமிழ்ப் பகுதிகளில் அவருடைய வேட்பாளர்களுக்குக் கிடைத்த வெற்றியை வைத்து அவ்வாறு கூற முடியாது.இனமுரண்பாடு எங்கிருந்து தோன்றியது ?தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக,தேசமாக ஏற்றுக்கொண்டு பல்லினத்தன்மை மிக்க ஒரு நாட்டைக் கட்டி எழுப்பத் தயாரில்லை என்பதுதான் இன முரண்பாட்டின் வேர்.எனவே இன முரண்பாட்டைத் தீர்ப்பது என்பது நாட்டின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களைச் செய்வதுதான்.ஆனால் அதைச் செய்வதற்கு அனுர தயார் இல்லை.
அனுரவின் இடத்தில் யார் இருந்தாலும் அதைச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இனப் பிரச்சினைதான் நாட்டைக் கடனாளியாக்கியது என்ற விடயத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு காரணம், ஊழலும்முறைகேடும் என்றுதான் அவர்களிற் பலர் கூறி வருகிறார்கள். சிங்களப் புத்திஜீவிகளில் பெரும் பகுதியினரும் அப்படித்தான் கூறி வருகிறார்கள்.பொருளாதார நெருக்கடியின் மூல காரணத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதும்ஒரு வகையில் இனவாதம்தான்.
ஆனால் இப்பொழுது இனப்பிரச்சினையில் கை வைத்தால், அதாவது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் கை வைத்தால், அது இளம் அரசாங்கத்தைக் கவிழ்த்து விடும் என்று ஒரு விளக்கம் கூறப்படுகிறது.எனவே பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்குத் தணித்தபின், ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் இனப்பிரச்சினையில் கை வைக்கலாம் என்றும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது.இது வண்டிலுக்குப் பின் மாட்டைக் கட்டும் வேலை. நோய்க்கு உரிய உள் மருந்தை எடுக்காமல்,வலி நிவாரணிகளை மட்டும் வழங்கும் ஓர் அரசியல்.
எனவே இந்த இடத்தில் மாற்றத்தைச் செய்ய அனுரவால் முடியாது. அவருக்குக் கிடைத்த வெற்றியின் கைதி அவர்.அந்த வெற்றியை மீறி அவர் சிந்திக்க முடியாது.அதனால்தான் கவர்ச்சியான சுலோகங்களை முன்வைக்கின்றார். நாட்டைச் சுத்தப்படுத்தப் போவதாகக் கூறுகிறார்.ஆனால் நாட்டின் உண்மையான கறை அப்படியே இருக்கத்தக்கதாக அதன் விளைவாக வந்த கறைகளை அகற்றுவது என்பது வலி நிவாரணி அரசியல்தான். எனவே நாட்டைச் சுத்தப்படுத்துவது என்றால் இனப்பிரச்சினை என்ற கறையை அகற்ற வேண்டும். அங்கிருந்துதான் சிறீலங்காவைக் கிளீன் பண்ணத் தொடங்க வேண்டும்.
May be an image of martial arts and pizza
All reactions:

1

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.