முடியைத் தொட்டாலே கையோடு வந்து விடுகிறது; மராட்டியத்தில் பரவும் மர்ம நோய்
மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்திலுள்ள கல்வாட், பாண்ட்கான், ஹிங்னா ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆண், பெண், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த ஒரு வாரத்தில் திடீரென முடி கொத்து கொத்தாக உதிர்ந்து வழுக்கையாகி வருகின்றது.
முதலில் உச்சந் தலையில் சிறிது அரிப்பு ஏற்பட்டு சில நாட்களில் ரோமத்தின் தன்மை சொரசொரப்பாக மாறி 72 மணித்தியாலத்துக்குள் முடி தானாக உதிர்ந்து வழுக்கையாகிவிடுவதாக கூறப்படுகிறது.
தலைமுடியை மெதுவாக வருடி விட்டால் கூட கையோடு வந்து விடுவதாகவும் இதுவரையில் அந்தக் கிராமத்தில் சுமார் 50 பேர் வரை இந்த மர்ம நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆண்களுக்கு தலை முடி மட்டுமல்லாமல் தாடியும் உதிர்ந்து விடுவதாக கூறுகின்றனர்.
இந்த முடி உதிர்வுக்கான காரணம் என்னவென்று இதுவரையில் கண்டறியப்படவில்லை.
ஆனாலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அக் கிராமத்துக்கு சென்று அங்கு விநியோகிக்கப்படும் தண்ணீர், முடி, தோல் மாதிரிகள் போன்றவற்றை சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
தலை முடியை தொடும்போதே கையோடு வருவதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.