ரணில் -சஜித் இணைவு சாத்தியம் !
ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடுகள் இல்லை எனவும் சிலர் இல்லாத முரண்பாடுகளை உருவாக்க முயல்வதாகவும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான இணைப்பு குறித்து கட்சிகளால் முன்மொழியப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு இணைப்பு ஏற்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் மல்வத்து விகாரையின் பீடாதிபதி வண. ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் மத்துமபண்டார இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கூறிய ரஞ்சித் மத்துமபண்டார,
நாங்கள் எப்போதும் ஊடகங்களை பாதுகாத்து வருகிறோம். ஊடகங்களுக்கு சுதந்திரமாகச் செயல்பட வாய்ப்பு வழங்கப்பட்டது. எதிர்க்கட்சியில் இருந்த போது ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக நின்ற தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை நசுக்க முயற்சிக்கின்றது.
பிரதான எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி ஊடகவியலாளர்களுக்காக நிற்கிறது. அதிகாரம் இல்லாத போது கூறியது அல்ல.
விவசாயிகளின் உர மானியம் இன்னும் வங்கிகளுக்குச் செல்லவில்லை. இதுகுறித்து கேட்டால், சிலர் இன்னுமில்லை என கூறுகின்றனர்.
ஆனால் பெரும்பாலானோருக்கு இதுவரை மானியம் கிடைக்கவில்லை. எதிர்க் கட்சியில் இருந்தபோது பயிர் சேதத்திற்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறினார்.
இப்போது 40000 என்கிறார்கள். அதுவும் செலுத்துவதில்லை. வயலில் இறங்கிய தலைவர்கள், விவசாயிகளின் பிரச்னைகளை மறந்து, தற்போது குளிர் அறைகளுக்குச் சென்றுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம்தான் இன்று அரசையும் நாட்டையும் கட்டுப்படுத்துகிறது. அவர்கள் விரும்பியபடியே வேலைகள் நடக்கும். தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான முன்னைய வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் எப்பொழுது வந்தாலும் நாங்கள் தயார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு நல்ல சமிக்ஞையை வழங்குகிறார்கள்.
நல்லாட்சி காலத்தில் 80 ரூபாவாக இருந்த ஒரு கிலோ அரிசி, ரணில் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 170 ரூபாவாக அதிகரித்தது. இப்போது கிலோவுக்கு அரிசி 250 ஆக உள்ளது. தேங்காய். 250 ரூபாய் நாட்டைச் சுற்றி கடல் இருப்பதால் மீன் பிடிப்பதில்லை என்று குற்றம் சாட்டிய அரசு, தற்போது நாட்டைச் சுற்றி கடல் இருந்தாலும் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.