கதைகள்

“கஞ்சி”…. கதை – 6 … குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர்… மீனாசுந்தர்

‘இந்த வெருசம் என்னொட சொந்த செலவுலியெ மாரியாத்தாளுக்குக் கஞ்சி காய்ச்சி ஊத்தலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கன். நீங்க எல்லாரும் மனமாச்சரியமில்லாம ஒருதாயிப் புள்ளய்வளா ஒத்துமயா நின்னு மாரியாத்தாவுக்குக் கஞ்சி வார்க்குற விழாவ சிறப்பா முடிச்சித் தரணும்னு வேண்டிக்கறென்’னு கூடியிருந்த ஊரு மக்க எல்லாரையும் பாத்து, கதிரேசன் வாய்க்காரர் கையெடுத்துக் கும்புட்ட அடுத்த நிமிசமே வேலம்மா சுர்ர்ருன்னு எழுந்திருச்சி, பொடு பொடுன்னு பொறிஞ்சித் தள்ளிப்புட்டா.

வேலம்மா அப்புடிப் பேசுவான்னு கதிரேசன் உட்பட யாருமே எதிர்பாக்கல. கூட்டம் செய்வதறியாம தெகச்சிப் போயி ஒக்காந்திருந்திச்சி. இத்தனி வயசு அனுபவத்துல கதிரேசன இந்த மாரி மூஞ்சிலடிச்சி யாரும் பேசிருக்க வாய்ப்பில்ல. நெத்திக்கி முட்டா அவமானப் படுத்துன மாரி ஆயிப் போயிருச்சி. ஆளானப்பட்ட ஆம்பளய்வளே கதிரேசங்கிட்ட ஒரு அடி தள்ளி தான் நிப்பாங்கெ. அவ்ளோ பயம். இவ என்னுமோ புதுசா மசிறு மொளச்சவ பொரட்டிப் பொரட்டிப் பார்க்கற கணக்கா எதப் பத்தியும் கெவலப் படாம இப்புடிச் செய்துப்புட்டாளேன்னு ஊருப் பெரிசுங்க வாயடிச்சி முழி பிதுங்கி ஒக்காந்திருந்திச்சிங்க.

வேலம்மா அப்பயிலர்ந்தே கொஞ்சம் துடுக்கா தான் இருப்பா. அதனாலியே அடங்காப்பிடாரி, ராங்கிக்காரி, அதிகப் பிரசங்கி, முந்திரிக்கொட்ட செரிக்கின்னு பல பட்ட பேருக அவளுக்கு. முன்னபின்ன யாரு எவருன்னுல்லாம் பாக்க மாட்டா அவ. மனசில படுறத யாராருந்தாலும் மறைக்காம, கொட்டிடுற ரகம் அவ. இந்தத் தெம்பு தயிரியம் சின்ன புள்ளயிலேர்ந்தே அவளுக்கு எப்புடியோ உசிரோடவே சேந்து வளர்ந்திருச்சி.

வேலம்மாவுக்கு கல்யாணமாயி ரெண்டு வருசத்துலியே ஒரு ஆம்பளப் புள்ளய குடுத்திட்டு செத்துப் போயிட்டான் புருசங்காரன் சின்னான். வேலம்மாவோட அம்மா ரஞ்சிதமும் சின்ன வயசுலியே காடு போயி சேந்துட்டதால தனியாருந்த அப்பா ராமசாமி வாய்காரருக்குத் தொணயா பொறந்த ஊட்டுக்கே வந்து சேந்துட்டா இவ. ஒருத்தருக்கொருத்தரு அனுசரணையா, இவ்ளோ காலமும் வாய்க்காரரோட அரவணப்புல தான் இருந்து வந்தா பேச்சி. அவளோட கெட்ட நேரமோ என்னவோ அவரும் ஒரு வருசத்துக்கு மின்னாடி போயிச் சேந்திட்டாரு. வேலம்மாளுக்குன்னு இப்பருக்கற பத்துக்கொடின்னா அவளோட மொவன் பிச்சுமணி தான். எட்டு வயசாவுற அவன வளத்து ஆளாக்குறது ஒன்னு தான் இப்ப அவளுக்கு வாழ்க்க இலச்சியமா பொயிருச்சி.

ஊருல செல்லியம்மன் கோயிலு திருநா சம்பந்தமா பேசணும்னு கூட்டம் போட்டா எப்பவும் கூட்டத்துக்குக் கொறச்சலிருக்காது. ஊருல ஒரு ஆளும் தவறாம வந்திருவாங்க. அது மட்டுமில்ல. பொண்டுக கூடக் கக்கத்துப் புள்ளயத் தூக்கிகிட்டு வந்திடும்ங்க. இப்பவும் அது போலத் தான் ஆணு பொண்ணுன்னு ஊரே தெரண்டு நின்னிச்சி.

கொயிலுக்கு மின்னாடி ஒரு பெரிய தெடலு இருக்கு. வேப்பமரமும், புங்கமரமும் தென்னமரமும்னு ஒரு சோல மாரி இருக்கும் அந்த எடம். நெழலுக்கு கொறவில்லாம பரந்து விரிஞ்சி கெடக்கற அந்த எடத்துல ஊரு கூட்டம் நடக்கறப்ப மக்க அததுங்க வசதிக்குத் தவுந்தாப்புல ஒக்காந்துக்கிடும்ங்க. ஆணுங்க தனியா, பொம்ணாட்டிக தனியா, இளவட்டங்க தனியான்னு ஒதுங்கிக் கெடந்தாலும், எல்லாருமே செல்லியம்மன் கொயிலு திருநாவ எப்புடிச் செறப்பா செய்யிறதுன்னே ரோசன பண்ணிக்கிட்டிருக்கும்ங்க. எல்லாரும் ரோசன சொன்ன பெறவு அத ஆராஞ்சிப் பாத்து முடிவ அறிவிக்கிற வேல தான் கிராமக் கமிட்டிக்கு. கிராம கமிட்டில பெரும்பாலும் வயசான அனபவஸ்த ஆளுங்களாவே தான் இருப்பாங்க. மதிப்பு மரியாதிக்கு கொறவிருக்காது.

அப்புடியொன்னும் பெருசா வசதி வாய்ப்பா வாழுற சனங்களில்ல அவுங்க. எல்லாரும் அன்னன்னிக்கு வேல செஞ்சி பொழக்கிற ரகந்தான். ஆனாலும் கொயிலுக்கு திருநா செய்யனுன்னு சொல்லிப்புட்டா போரும். உசிரக் கொடுத்தாவது எல்லாரும் கூடி நின்னு ஒத்துழைப்பாங்க. ஏன்னா அந்த செல்லியம்மன் தாயிதான்ங் இந்தூரு மக்களக் காத்து நிக்கிறான்னு அவுங்க அழுத்தம் திருத்தமா நம்புறாங்க.

ஊருல கொஞ்சம் வசதி வாய்ப்பாவும், செல்வாக்காவும் உள்ள குடும்பம்ன்னா அது கதிரேசன்ங் குடும்பம் ஒன்னுத்தென். கதிரேசன் தலப்பட்டு வந்ததுலேருந்து அந்த ஊருக்கு நெரந்தரமான தலைவரு அவரு தான். அவரு பேசுற பேச்சிக்கி மறு பேச்சிருக்காது. மறுபேச்சின்னு மனசுக்குள்ளாற எதுவும் இருந்தாலும் அத வெளிப்படுத்திக்க மாட்டாங்க. ஊருல வெள்ளயும் சொள்ளையுமா, வெவரம் தெரியறாப் போல நடமாடுற ஆளுவன்னா, அதுவும் கதிரேசன்ங் குடும்பந் தான். கஸ்டம்னா அமயம்ஞ் சமயத்துக்கு அங்க ஓடிப் போயி தான் கய்ய நீட்டணும். எதாவுது சொல்லித் தொலச்சிட்டம்ன்னா, நாளக்கி எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு அவரு மின்னாடி போயி கய்ய நீட்டுறதுன்னு எல்லாருக்குமே ஒரு தயக்கம். அதால அவுரு என்ன சொன்னாலும் செரி. எல்லாரும் தலயாட்டுறதோட முடிச்சிப்பாங்க..

கதிரேசன் வாய்க்காரரு அப்படியொன்னும் தெடகாத்திரமான ஆளு இல்ல. கட்டயா, கருப்பா தான் இருப்பாரு. முன்னந்தலை வழுக்கயும், முறுக்குன மீசயிம் பாக்க அவருக்கு எடுப்பாவே இருக்கும். அதுக்கு தவுந்தா மாரி கரகரன்னு கொரல் வேற. எல்லாம்ஞ் சேந்து அவருக்குனு ஒரு பெரிய மனுச தோரணையா உருவத்தை வடிவமச்சிப்புடுச்சி. கதிரேசன்ம் பொண்டாட்டி காமாச்சி அப்புடியே அவருக்கு நேர்மாறா இருப்பாவ. இவர விட ஒரு சாண் ஒசரம் கூடன்னு தான் சொல்லணும். நடுவுல பொளந்த பச்ச மஞ்ச கெழங்கு மாரி அப்படியொரு நெறம் அவங்களுக்கு. லெச்சிமியா எப்பவும் சிரிச்ச மொகம். அம்பது காசு அளவுக்கு நெத்தியில குங்குமப் பொட்டுன்னு வளைய வரும் காமாச்சி மேல ஊரு மக்களுக்கு ஒரு தனி மரியாதயிம் பாசமும் உண்டு. மக்க ஆச்சி ஆச்சின்னு சுத்திக்கிட்டே நிப்பாங்க.

கதிரேசன் வாய்காரருக்கு ரெண்டு பய்யனுவ. மூத்தவன்ங் கணேசனுக்குப் போலீசு உத்தியோவம். கல்யாணம் ஆனதுமெ குடும்பத்த அளச்சிக்கிட்டு அவன் கும்மோணத்துக்கு குடி போயிட்டான். எப்பவாவது நல்லது கெட்டதுக்கு வர்றதோட செரி. சின்னவன் தியாகராசன் தான் ஊர்லியேருக்கான். குடும்பத்தோட அப்பா, அம்மாவ வெச்சிக்கிட்டு பரம்பர ஊட்டுலியே குடியிருக்க அவனுக்கு சுழி கெடந்திருக்கு. அவனுக்கும் கல்யாணமாயி நாலு வயசுல ஒண்ணும், ரெண்டு வயசுல ஒண்ணும்னு ரெண்டு பொம்பளப் புள்ளய்வ இருக்குதுங்க. அவன்ம் படிச்சப் பத்தாவது படிப்புக்கு எப்புடியோ கதிரேசனோட லோக்கல் அரசியலு செல்வாக்கப் பயன்படுத்தி உள்ளூரு ரேசன்ங் கடயில வேல வாங்கிக் குடுத்திட்டாரு. கொடுத்தாலும்ங் கொடுத்தாரு அவென் ஆடுற ஆட்டத்துக்கு ஒரு அளவில்லாம பொயிருச்சி. அதான் இப்போ பெரிய பெரச்சினயா உருவெடுத்து நிக்கிது.

இந்த ஊரு சனங்கள ஆடு மாடுகள விடக் கேவலமா நெனச்சி ரொம்பவும் வதச்சி தான் எடுக்குறான் தியாகராசன். அநியாயம்னா அப்புடியொரு அநியாயம்ங். ரேசன்ங் கடய அவென் ஊட்டுச் சொத்துங்கிற மாரி பேசிக்கிட்டுத் திரிவான். அரிசி வாங்க வர்ற ஏழபாழ சனங்கள பாத்தாலே அவனுக்கு மூஞ்சி மாறிப் போயிரும். அட்டானிக்கால் போட்டுக்கிட்டு நீஸ் பேப்பர படிச்சிக்கிட்டு, வர்ற சனங்கள வேணும்னே காக்க வெப்பான். சீக்கிரம் போவனும்னு யாராவது வா தொறந்து கேட்டா அவ்வளவு தான். வாயில வந்த மாரி அசிங்க அசிங்கமா திட்டிக் கொட்டுவான். அவன் வாயில வராத கெட்ட வார்த்தைகளே இல்லியாங்கற மாரி அவ்வளவு பேசுவான். யாரும் எதித்துக் கேக்க முடியாது. அவ்வளவு அராசகம் பண்ணுவான்.

வர்ற அரிசி மூட்டய்வள்ல முக்காவாசிய வெளில நல்ல ரேட்டுக்கு வித்துப் புடுவான். மீஞ்ச கொஞ்ச நஞ்ச அரிசிய ஆளுக்குக் கொஞ்சம்னு கொடுத்துப்புட்டு, அவ்ளோ தான் இந்த மாசம் வந்த அரிசி. இனிமே அடுத்த மாசந்தான்னு மனசாச்சியில்லாம சனங்கள வெரட்டுவான். இதே கெதி தான் மண்ணெண்ணெய்க்கும். ரேசன் கடக்கி வர்ற அப்பாவி மக்க வயிறெரிஞ்சு பல நாளு வெறங்கையோட திரும்பிப் போயிருக்காங்க. இப்பவும் போயிகிட்டிருக்காங்க.

இதெல்லாம் பாத்து வேலம்மா மனசுக்குள்ளயே பொகஞ்சிருக்கா. ஒரு நாளு தாங்க முடியாம், கொஞ்சம் பணிவா தான்ங் கேட்டா. “ஏங்க ! கெவுருமெண்டு எங்களுக்குன்னு அனுப்பற அரிசி எப்படிங்க கொறஞ்சி போவும்? நம்ம ஊரு கடக்கி மட்டும்ந் தான் மாசா மாசம் இப்புடி அனுப்புறாங்களா? நாங்க எல்லாரும் ஒரு நாளைக்கி கூடிப் போயி கேக்கிறோம். அந்த ஆபிசு எங்க இருக்குன்னு சொல்லுங்கன்னு?” அவ கேட்டது தான்ங்க தாமதம். தியாகராசன் கேட்ட கேள்வி இன்னதின்னு இல்ல. இவனோட குத்தத்த மறைக்கிறத்துக்கு அவ நடத்தயப் பத்தி கேவலமா பேசினான். புருசங்காரன்னு ஒருத்தன் இருந்தா அடங்கிக் கெடப்பா. ஊர்ல மேயிர நாயி தான. ஊதாரிக் கழுதே ஒழுங்கா இருப்பாளா?ன்னு ரொம்பவும் கேவலப்படுத்தி பேசினான். வேலம்மாவால அவன் வார்த்தைகள சமாளிக்க முடியல. தாங்க முடியாம அழுதுகிட்டே ஊட்டுக்கு போயிட்டா.

அதுக்குப் பெறவு இந்தக் கூட்டத்துல தான் அவ தியாகராசன பாக்குறா. ரேசன் கடக்கி மகன அனுப்பறதோட சரி. இப்பவும் இந்தக் கூட்டத்துல தன்னோட அப்பன இப்புடிப் பேசிப்புட்டாளேன்னு கூட்டத்தில ஒக்காந்திருந்த தியாகராசன் எளுந்திருச்சிட்டான். அவனுக்குக் கோவம் கொப்பளிச்சிக்கிட்டு நின்னிச்சி. அப்பாவ எதித்து ஒரு பொட்டக்களுத அதுவும் தாலி அறுத்த முண்டச்சி கம்முனாட்டி பேசிட்டாளன்னு உள்ளுக்குள்ள பொங்கிக்கிட்டு வந்திச்சி ஆத்திரம். கண்ணெல்லாம் கோவப்பழம் மாரி செவந்து ரத்தமாயிட்டு. மனசு அடங்காம குமுறுனிச்சி. வெடுக்குன்னு எழுந்திருச்சிட்டான்.

“இங்க பாருடி வேலம்மா… யாருக்கிட்டப் பேசறேன்னு பாத்து தான் பேசறியா?” ன்னு நேரடியாவே மூஞ்சிக்கு நேரா கேட்டுக்கிட்டு பாயவும், பக்கத்துல இருந்தவங்கல்லாம் அவனப் புடிச்சி அமுக்கி, சமாதானம் பண்ணி அசமடக்கி வெச்சாங்க. கூட்டத்துல பெரிய ரசாபசமா ஆயி ஒரே சலசலப்பாயிருச்சி. ஆளாளுக்கு ஒரு பேச்சின்னு எல்லாரும் வேலம்மாவ திட்டிக் கொட்டுனாங்க. பொம்பளங்கள்லாம், “புத்தி பேதலிச்சி போச்சா இவளுக்கு? பைத்தியம் மாரில்ல பேசிக்கிட்டுத் திரியறா” ன்னு நேரடியாவே காதுபடக் கேட்டுச்சிங்க. அவுரு கஞ்சிக் காச்சி ஊத்துறதுக்கு இவளுக்கு எங்க பத்திக்கிட்டு எரியிது? அரிப்பெடுத்தவ அடங்கிக் கெடக்க மாட்டா போலருக்குன்னு கெட்ட கெட்ட வார்த்தயால வறுத்தெடுச்சிங்க சனங்க.

வேலம்மா அப்புடியே தெகச்சிப் போயி நின்னுட்டா. “ஒக்காருடி தேவுடியா முண்ட. எழுந்திருச்சம்ன்னா ஒம் பொழப்பு நாறிப் பொயிரும் ஆமா”..”ன்னு சனங்கல்லாம் அவளுக்கு எதிரா கத்த ஆரம்பிச்சிடுச்சிங்க. அப்ப தான் வாட்ட சாட்டமா உள்ள ஒருத்தன் எழுந்திருச்சான். கய்ய ஒசத்தி, “எல்லாரும் இங்க கெவனிங்க, இது என்னா ஊரு கூட்டமா? இல்ல காகறிச் சந்தயா?” ன்னு சத்தமா கேக்கவும் கூட்டம் கொஞ்சம் கட்டுபாட்டுக்கு வந்திச்சி. ஆங்காரமாவே கேட்டான் அவன்.

“ஏன் வேலம்மா? நான் மூடி மறச்சி பேச விரும்பல. ஒனக்குக் காது கழுத்துல தான் ஒண்ணுமில்லாம வெறுசா கெடக்குறன்னா, மண்டயிலியும் ஒண்ணுமில்லியா? சாமிக்குக் கஞ்சிக் காச்சி ஊத்துறது எவ்வளவு புண்ணியம். அந்தப் புண்ணியத்த நீயோ நானோ செய்ய வக்கிருக்கா? இதத் தடுக்குறத்துக்கு நிய்யி யாரு?” ன்னு கேக்கவும் எதுவோ சொல்ல திரும்பவும் எழுந்திருச்சா வேலம்மா. அதுக்கு அவன், “நிய்யி ஒரு மயிரும் சொல்ல வேணாம். பொச்ச பொத்திக்கிட்டு மொதல்ல ஒக்காருடி” ன்னு ஓங்கி ஒரு அதட்டு அதட்டவும், கூட்டம் மொத்தமும் ஆடிப் போயிருச்சி.

“வாய்க்காரரே, நீங்க கஞ்சிக் காச்சி அவுசியம் ஊத்தணும். ஒங்க புண்ணியத்தால நாங்க சாமிக் கஞ்சிய குடிச்சிப் பாக்கணும். இதில எல்லாருக்கும் சம்மதந்தானே?” ன்னு கூட்டத்தப் பாத்துக் கேக்கவும். எல்லாரும் சம்மதந்தாங்கற மாரி வேகவேகமா தலையாட்டிக் கத்தினாங்க. அவ்வளவு தான். அத்தோட கூட்டம் முடிஞ்சிப் போயிருச்சி, வேலம்மாவ கருவிக்கிட்டே கூட்டம் மொத்தமும் கலஞ்சிப் போவ ஆரம்பிச்சிச்சி. வேலம்மா சுக்கு நூறா ஒடஞ்சி கலங்கிப் போயி, தனியா, அனாத மாரி நடந்து ஊட்டுக்குப் போயிக்கிட்டிருந்தா.
…………………………
செல்லியம்மன் கோயிலுத் தெடலு மொத்தமும் விழாக்கோலம் பூண்டு நின்னுச்சி. எல்லார் மொகத்திலயிம் கொண்டாட்டமும், சந்தோசமும் பரவி கெடந்திச்சி. பெரிய பெரிய அண்டா குண்டானெல்லாம் வெச்சி, அடுப்பு மூட்டி. கோயில சுத்தி புகை சூழ்ந்து, கண்ண கசக்தி சமயக்காரவுங்க கஞ்சி காச்சிக்கிட்டிருந்தாங்க. கொதிக்கிற கஞ்சில ஊரோட ஒத்துமயிம் உணர்வும் சேந்துக் கொதிச்சிச்சி. கஞ்சிய நீள நீளமா கம்பு வச்சி அடி புடிக்காம கிண்டிவுட்டுக்கிட்டே இருந்தாங்க. சூட்ட ஆத்தி செல்லியம்மா முன்னால எடுத்து வெச்சி, மணக்க மணக்க பத்தி கொளுத்தி, சாம்புராணிப் போட்டு, மணியடிச்சி, சூடம் காட்டிறப்ப, எல்லாரும் கய்ய தலக்கி மேலத் தூக்கி “செல்லியம்மா.. செல்லியம்மா.. மகமாயி.. மாரியம்மா எங்களக் காப்பாத்து தாயீ..” ன்னு ஒரு சேர மக்க பக்திப் பரவசத்தில சத்தம் போட்டாங்க. பாத்துக்கிட்டிருக்கற அத்தன பேருக்கும் உசுரு சிலித்துப் போயிருச்சி.

கூட்டத்த கட்டுப்படுத்துறத்துக்காவ சாமிக்கு நேரா நடுவுல பத்தடிக்கு இடவெளி உட்டு ரெண்டு பக்கமும் சவுக்குக் கம்புகள கட்டி தடுத்திருந்தாங்க,. எதிர்பாத்தது போல பக்கத்து ஊர்லருந்தெல்லாம் மக்க தெரண்டு வந்திருந்தாங்க. பண்டு, பாத்திரத்தயெல்லாம் எடுத்துகிட்டு தெரண்டு மக்க சாரசாரயா வந்துக்கிட்டே இருந்தாங்க. ரெண்டு பக்கமும் திமுதிமுன்னு திமிறிக்கிட்டு நின்னிச்சி பக்திக் கூட்டம்.

கதிரேசன் வாய்க்காரர் வந்து செல்லியம்மன கும்பிட்டு சாஸ்டாங்கமா கால்ல உலுந்து எழுந்திருச்சாரு. திருநீற கைய்யி நெறய அள்ளி நெத்தில பட்டையா பூசிக்கிட்டாரு. கையிலயும் நெஞ்சிலயும் கோடுகள போட்டுக்கிட்டாரு. குங்குமத்த எடுத்து திருநீறுக்குக் கீழ வெரலளவுக்கு வெச்சிக்கிட்டாரு. தோள்ல கெடந்த துண்ட எடுத்து இடுப்புலக் கெட்டிக்கிட்டு மொதல்ல கொஞ்சம் கஞ்சிய டம்ளர்ல ஊத்தி பயபக்தியா சாமிய நெனச்சிக்கிட்டுக் குடிச்சாரு. அதுக்குப் பெறவு ஆளுங்க வரிசையில நின்ன மக்களுக்குக் கஞ்சி ஊத்த ஆரம்பிச்சிட்டாங்க.
கூட்டம் முண்டிக்கிட்டு திமுறிணிச்சி. ஒரு பக்கம் கஞ்சி ஊத்துறதுன்னா, இன்னொரு பக்கம் மக்கள அமைதிப் படுத்தற வேல நடந்திச்சி. அடிச்சிப் புடிச்சிக்கிட்டு தள்ளுற கூட்டத்தப் பாத்து அறிவிப்பு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. “ஒன்னும் அவசரப்படாதீங்க, எல்லாருக்கும் கஞ்சிருக்கு. வாங்குனவங்களே திரும்ப திரும்ப வாங்காதீங்க. மத்தவங்களயும் கொஞ்சம் வாங்க உடுங்கன்னு கூட்டத்த அசமடக்கறதுக்குன்னே ஒரு கூட்டம் வேல செஞ்சிச்சிட்டு இருந்தாங்க.

வேலம்மா மொத நாளே தன்னோட மவன் பிச்சுமணியக் கூப்புட்டு கண்டிச்சிச் சொல்லிப்புட்டா.
“பிச்சுமணி.. என் செல்லம்.. கோயில்ல அவங்க ஊத்துற கஞ்சிய விட அருமயா ஒனக்குக் கஞ்சி வச்சி தர்றேன் அம்மா. என்ங் கண்ணுல்ல! அங்கப் போவக் கூடாதுடி. மான மரியாதய உட்டுப்புட்டு அந்தக் கஞ்சிய குடிக்கக் கூடாதுடி” ன்னு செல்லமாவே கண்டிச்சி வெச்சிருந்தா. அவன அங்கப் போவ உடாம தடுக்குறதுக்காவ அவன்ங் கேட்டதயெல்லாம் தட்டாம வாங்கிக் கொடுத்திருந்தா வைராக்கியமா.

பிச்சுமணி வயச ஒத்தவனெல்லாம் சட்டியத் தூக்கிக்கிட்டு குதூகலமா ஓடுறப்போ இவனாலத் தாங்க முடியல. ஆனாலும் அம்மா அடிப்பாளேன்னு பயந்து நடுங்கிக்கிட்டே ஊட்டுத் திண்ணையில ஒக்கார்ந்திருந்தான் அவன். வேலம்மாவுக்கு அலுப்பு தாங்கல. கண்ண சொழட்டிக்கிட்டு வரவும் பாய எடுத்துப் போட்டு செத்த நேரம் கண்ணசந்தா.. அவளையறியாம நல்லாவே தூங்கிப் போயிட்டா.

இதான்ஞ் சமயம்ன்னு பாத்த பிச்சுமணி ரெண்டு சட்டிய எடுத்துக்கிட்டு ஒரே ஓட்டம் புடிச்சான் கோயிலுக்கு. அவன் வயசுப் பயலுவள பாத்ததும் அவனுக்கு அவ்வளவு குதூகலம். கஞ்சிய வாங்கி வயசொத்தப் பயலுங்களோட பேசிக்கிட்டு குடிக்கிறது அவனுக்கு அவ்வளவு ஆனந்தமா இருந்திச்சி. தன் அம்மா வேலம்மா மேல அவனுக்குக் கோவம் கோவமா வந்திச்சி.
கதிரேசன் வாய்க்காரர் எதிர்பாத்தத விடக் கஞ்சி காச்சி ஊத்துற நிகழ்ச்சி செறப்பாவே அமஞ்சிப் போயிட்டு. பிச்சுமணி கஞ்சி வாங்குனதப் பாத்த தியாகராசன் தன் அப்பாவப் பார்த்து, “அந்தக் கேடுகெட்ட சிறுக்கி.. ஆளு அனுப்பி வாங்கியாறச் சொல்லிருக்கா பாருங்கப்பா” ன்னு நக்கல் பேசிக்கிட்டு சிரிச்சிக்கிட்டிருந்தான். அவன் பேசினது மட்டுமில்லாம ஊரு வாய்வளும் வேலம்மாவ மென்னு துப்பிக்கிட்டிருந்திச்சிவ.

சனங்க இன்னும் கலையாம அங்கங்க நின்னுகிட்டு இருந்திருச்சிங்க. பத்து நிமிசம் போயிருக்கும். வேலம்மா அந்த எடத்துக்கு எப்படி வந்தான்னே தெரியல. தன் மவனப் புடிச்சி தரதரன்னு இழுத்துக்கிட்டே தெடலுக்குள்ள வந்துக்கிட்டிருந்தா. மறு கய்யில பிச்சுமணி வாங்கிட்டுப் போன கஞ்சிக் கலயம் இருந்திச்சி. அவ நடயில பொயலு மாரி அவ்வளவு ஆக்ரோசம். ஐயோ இந்த ஈனச்சிறுக்கி மொவ என்ன பண்ணப் போறாளோன்னு கூட்டம் மொத்தமும் அவளயே வச்சக் கண்ணு வாங்காம பாத்துக்கிட்டு நின்னுச்சி.
விடுவிடுன்னு நேரா செல்லியம்மன் சிலைகிட்டப் போனா வேலம்மா.

“ஏ செல்லியம்மா…. மனுசங்களுக்குத் தான் கண்ணுமில்ல.. மனசாச்சியுமில்ல. ஒனக்குமா அவிஞ்சிப் போச்சி? கஞ்சிக் காச்சி ஊத்துறது நல்ல விசியந்தான். ஆனா யாரு ஊத்துறது?ன்னு ஒரு வெவஸ்த இல்லியா செல்லியாத்தா? மாசந்தவறாம எங்களுக்குன்னு வர்ற அரிசிய, பருப்ப, மண்ணென்ணெயைத் திருடி வித்து, ஏழ பாழங்க எங்க வயித்துல அடிச்சி நாசம் பண்றவங்க ஊத்துறதுக்கு பேரு சாமி கஞ்சியா? இந்த அரிசி ஏது ஆத்தா? அவங்க வேர்வ சிந்தி சம்பாதிச்சதா? வருசம்பூரா நாங்க வயிறு எரிஞ்சி கெடக்கோம். அத கேக்க நாதியில்ல? எங்க ஆயுசுக்கும் உள்ள பசிய இந்த ஒரு நாளு கஞ்சி தீத்திடுமா? சொல்லு செல்லியாத்தா இது புண்ணியமா? ஒம்பேரச் சொல்லி ஏமாத்தறது பாவம்… மகா பாவம். பொல்லாத பாவம். இத கேக்க ஒனக்கும் வக்கில்லியா?”

வேலம்மா தலைவிரிகோலமா கஞ்சிய எடுத்துக்கிட்டு வேகவேகமா அண்டாகிட்டப் போனா. கலயத்தக் குப்புற கவுத்து வாங்குன கஞ்சிய அண்டாவுலயே திரும்ப ஊத்துனா. விடுவிடுன்னு பிச்சுமணிய இழுத்துக்கிட்டு நெஞ்ச நிமித்திக்கிட்டு வீட்டுக்குப் போனா. ஊர் அப்புடியே செய்வதறியாம நின்னுச்சி. யாரோ ஒரு பெரிசு தான் சொன்னாரு.
“வேலம்மா சொல்றதும் நாயந்தான?. இந்தக் கஞ்சிய குடிக்கிறது ரொம்ப பாவம்ய்யா. வருசம்பூரா நம்ம வயித்துல அடிக்கிற பாவத்த ஒரு நாளு கஞ்சி ஊத்தி கழுவ பாக்குறானுவ இந்தப் பாவிப் பயலுவ”

பெரியவர் தன்னோட சொம்புல வாங்கியிருந்த கஞ்சிய அண்டாவுல கொண்டு திரும்ப ஊத்தினாரு. ஊரு மக்க எல்லாரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டாங்க. அதுதான்ஞ் சரின்னு அவங்களுக்கும் பட்டுச்சி. திமுதிமுன்னு கூட்டம் மொத்தமும் அப்படியே திரும்புனிச்சி. ஒருத்தர் பின்னால ஒருத்தர்னு எல்லாருமே வாங்கியிருந்த கஞ்சிய திரும்பவும் அண்டாவுலயே ஊத்தினாங்க.

கதிரேசன் வாய்க்காரரும், மவன் தியாகராசனும் நடக்கற எதையும் தடுக்க வக்கில்லாம அவமானத்துல கூனிக் குறுகி தலைகவுந்து நின்னாங்க செய்வதறியாம.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.