மூத்த பத்திரிகையாளர் ஈ.கே.ராஜகோபால்… எஸ்.ஜெகதீசன்
கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக ஈ.கே. ராஜகோபாலின் வரலாறு – அதுவும் புகழ் பூத்த முன்ணணி தமிழ் பத்திரிகையாளராக அவரது வரலாறு – சாதாரண வரலாறு அல்ல!
செய்திகளை எடுப்பதிலும் அவற்றை ஏற்ற முறையில் தயாரிப்பதிலும் ஏற்றமுடன் வாசகரிடம் சேர்ப்பிப்பதிலும் அவரிடம் தனித்துவமும் இருந்தது. கலைத்துவமும் இருந்தது.
செய்திகளுக்கு உயிரூட்டினார். கலைஞர்களுக்கு உயிர் கொடுத்தார். காகிதங்கள் அவரால் கௌரவப்பட்டன.
அவருடனான முதலாவது சந்திப்புக் கூட நிரந்தரமாக மூளைக்குள் முகாமிட்டுள்ளது
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரிய பகுதி! அவர் அங்கு தேர்ந்த உதவி ஆசிரியர். பத்திரிகை வாழ்வின் முதல் நாள் எனக்கு.
உறுத்தாத எளிமை அவரிடம் இருந்ததை அவர் பழகிய விதம் காட்டியது. உறுத்தாத எளிமை அவரது எழுத்தில் இருந்ததை அவர் எழுதிய விதம் காட்டியது.
அசந்து போனேன்.
அன்று தொட்டு அந்த அன்பும் அந்த மதிப்பும் அடர்த்தியாகி அவருடன் நெருக்கமாக நெருங்க வைத்தன.
ஊடகத்துள் அவர் இருக்கின்றாரா அல்லது அவருக்குள் ஊடகம் இருக்கின்றதா என நான் விதந்தது பல காலம் நீடித்தது.
செய்திகளுக்கும் , செய்தி அறிக்கைகளுக்கும் , உலக விவகாரங்களுக்கும் , உள்நாட்டு நடப்புகளுக்கும் , முக்கியமளித்தது அவரது அன்றாட வாழ்வு.
அவற்றுடன் கலை , இலக்கியம் , கலாசாரம் , பண்பாட்டுக்கோலங்கள் , சிறுகதை , தொடர்கதை போன்ற பிறபலவும் எந்நேரமும் ராஜனின் நினைவின் எல்லைக்குள் மேலதிக சேர்க்கையாக வாழ்ந்து கொண்டிருந்ததும் தெரிந்தவர்களுக்கு தெரியும்.
இலக்கியம் , அரசியல் , கலை , சினிமா , விளையாட்டு என பல துறைகளில் உள்ள அறிவும் சரளமாகவும் சாமர்தியமாகவும் உரையாடும் ஆற்றலும் பல மக்களின் – விசேடமாக பல பிரமுகர்களின் இதயங்களில் இலகுவாக குடிபுக வைத்தது.
பத்திரிகையாளர்களையும் , படிப்பாளர்களையும் , படைப்பாளர்களையும் அரவணைத்து சமுதாயத்தை மேம்படுத்தும் சாதுரியமும் அவரிடமிருந்தது.
அற்புதமான – ஆழமான – செய்திகளை அழகு தமிழில் இனிய நடையில் கவரும் தலைப்புகளில் பதியமிடும் நிமிடங்களும் அவரோடிருந்தது.
இளையதம்பி குமாரசாமி ராஜகோபால் என்பது அவரது முழுப் பெயர். குமாரசாமி விசாலாட்சி தம்பதியின் மூத்த மகனாக 25.12.1944 ல் வல்வெட்டியில் பிறந்தார். ஊரார் அவரது தந்தையாரை அப்பாத்துரை என்ற செல்லப் பெயரிலும் அழைத்தனர். சந்திரகோபால் , பவானி , பத்மினி , நளினி , மாலினி ஆகியோர் அவரது உடன்பிறப்புகளாயினர். சர்வ தேச புகழ் பூத்த நடன ஆசிரியையும் , லண்டன் நாட்டியாலயா அதிபருமான ராகினி அவரது மனைவி. ஷர்மினியும் , ஷியாம் ராஜும் அவரது பிள்ளைகள்.
உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் , கந்தரோடை ஸ்கந்தவரோதயா ஆகிய கல்லூரிகளின் மாணவர்களின் அன்றைய வரவு பதிவேடுகளில் அவரது பெயரும் இருக்கும்.
கல்லூரி காலத்தில் அவரது வார இறுதி நாட்களை கலைச் செல்வி சஞ்சிகை தனதாக்கிக் கொண்டது. வசந்தம் , எரிமலை , வாடாமல்லிகை ஆகிய மூன்று கையெழுத்துச் சஞ்சிகைகளை தயாரித்து வெளியிட்ட சிறப்பும் அவரது மாணவப் பிராயத்துக்கு உண்டு. வராந்தரியாக வெளிவந்து கொண்டிருந்த வரதரின் புதினம் பத்திரிகையும் , வரதரின் பல குறிப்பும் அவரது எழுத்தாற்றல் பரந்து விரிய களம் காட்டின. அவரது ஆற்றலில் கவரப்பட்ட விவேகி சஞ்சிகை பொறுப்பாசிரியராக்கி தன்னை மெருகேற்றிக் கொண்டது.
கலைச்செல்வியில் பல காலம் அவர் எழுதியது பலதும் பத்தும். அதில் ஒரு புதிர். எந்த விளையாட்டிலும் முன் நோக்கிச் சென்றால்தான் வெல்லலாம். ஆனால் எந்த விளையாட்டில் பின் நோக்கி செல்பவர்கள் வெற்றியீட்டுவார்கள் என்றிருந்தது. 1964 ம் ஆண்டு கேட்கப்பட்ட இக் கேள்விக்கான சரியான பதிலாகிய கயிறிழுத்தல் என்பதனை 2024 ம் ஆண்டிலும் எத்தனை பேரால் ‘இழுத்தடிக்காமல்’ சொல்ல முடியும்?
விவேகி சஞ்சிகையில் வந்த கேள்வி பதில் பகுதிக்கு “டக் டக்”! என்பதே அவர் இட்ட பெயர். வாசகர் கேள்விகளுக்கு “டக் டக்”கென சுவாரஸியமாக அவர் அளித்த பதில்கள் அந்த நாட்களில் மிகுந்தஅபிமானம் பெற்றிருந்தன.
ஆரம்பத்தில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். “அவரது முதலாவது சிறுகதை பூங்காற்றே கேள்! கையெழுத்துப் பிரதியாக அவர் தயாரித்த வசந்தம் சஞ்சிகையில் உள்ளது” என்று அவரது உற்ற நண்பனான பிரபல எழுத்தாளர் பெரி.சண்முகநாதன் ஒரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். யாழ். புதினத்தில் வெளிவந்த அவள் தெய்வம்.நீ! என்பதே அச்சில் வெளிவந்த அவரது முதலாவது சிறுகதை. ஈழநாட்டில் வெளிவந்த முதலாவது சிறுகதை மொட்டை மரம்.
1964 ஆண்டு ஈழநாடு உதவி ஆசிரியராக நியமித்தது. பக்கம் சாராது பக்கம் பக்கமாக எழுதிக்குவித்தார். காலக்கிரமத்தில் ஈழநாட்டின் இயக்குனர் சபை செங்கதிர், கமலம் போன்ற சஞ்சிகைகளை மேலதிகமாக வெளியிடத் தீர்மானித்த பொழுது செங்கதிரின் இணை ஆசிரியராகவும் ராஜகோபாலையும் இணைத்துக்கொண்டது. சிறிது காலம் கண்டியிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த செய்தி பத்திரிகையின் யாழ்.நிருபராகவும் நட்பு ரீதியில் செய்தி வழங்கினார்.
ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்கு காலுடன் நுழைந்த பல கலைஞர்கள் ராஜகோபாலை சந்தித்த பின் இறகுகளுடன் திரும்பியது பத்திரிகையாளராக அவர் பக்கத்திலிருந்ததில் எனக்கும் தெரியும்.
கலைஞர்களை நெறிப்படுத்தவும் சரிப்படுத்தவும் கூடிய வலுமிக்க சக்தியாக அமைந்தது அவர் எழுதிய நம் நாட்டுக் கலைஞர்கள்.
அனலை தீவுற்கு அருகே அனாதரவான ஒரு நிலப்பகுதிக்கு உல்லாசப் பயணிகளைக் கவரும் மவுசைப் பெற்றுக் கொடுத்தது அவரது தொடரான பருத்தித்தீவில் ஒரு ராஜா.
தெருவில் யாசகம் பெற்று வாழ்க்கை மறுக்கப்பட்டவர்களுக்கு வாழ்வு கொடுத்தது அவரின் இன்னொரு தொடரான யாரை நம்பி நாம் பிறந்தோம்.
அன்பால் அரவணைத்து , ஆதரவு நல்கும் பண்பும் , துயரில் ஆறுதல் கூறும் சுபாவமும் , சமூகம் மீதான பற்றும் அக்கறையும் அவரை எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்ட வைத்தன!
இரணைமடு குளத்திற்கு பாடசாலையுடன் சுற்றுலாச் சென்ற ஒரு பிஞ்சு மாணவி பரிதாபமாக அதற்கு பலியாகித் தனது வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்த தகவல் ராஜகோபாலின் அடிமனதை விம்மி விம்மி அழ வைத்ததால் , அடுத்த நாள் செய்தி அனைத்து இதயங்களையும் பிசைந்து பிழிய வைத்தது. பலரது இதயத் துடிப்பை நிற்க வைத்து , துடிக்க வைத்ததாக அப் பொழுது பலராலும் பேசப்பட்டது.
ஏழு வயதுச் சிறுமியொருத்தி தனது இளைய சகோதரிகள் மூவருக்கு தாயாய்-தந்தையாய்-உற்றாராய்-சுற்றாராய் இருக்கும் பாழாய் போன வாழ்வு கண்டு கொதித்த ராஜகோபாலின் பேனா , சாரை சாரையாய் இரத்த அருவி கொட்டியதால் , கவனிப்பாராற்றுக் கிடந்த அந்த ஏழு வயதுத் தாய்க்கு நிவாரணம் கிடைத்தது. ராஜனின் அச் செய்தியின் பின்னர் திரட்டப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியினை , 5000 ரூபாய் காசோலை அனுப்பி ஆரம்பித்து வைத்தவர் அப்போதைய தபால் அமைச்சர் செல்லையா குமாரசூரியர். மரணத்தைக் கூட மரிக்க வைக்கும் ஆற்றல் ராஜகோபாலிடமிருந்தது.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாநகர சபை முதல்வர்கள் , உள்ளுராட்சி பிரமுகர்கள் , ஆணையாளர்கள், அதிகாரிகள் , பல்கலைகழக வேந்தர்கள் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் , கல்லூரி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மருத்துவர் , வழக்கறிஞர் , காவற்துறையினர் , எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , கலைஞர்கள் , வர்த்தகர்கள் என பிரபலங்களிடமும் பிரபலமாக இருந்தவர் ராஜகோபால்.
இது வரை நான்கு நூல்கள் அவரிடமிருந்து சமூகத்திற்கு கிடைத்தன. மக்கள் பிரதமர் ஸ்ரீ மாவோ. அவரது முதலாவது நூல் மடடுமல்ல ஸ்ரீ மாவோ பற்றி தமிழில் வெளிவந்த முதலாவது நூலும் இதுவே ஆகும். இந் நூலை நேரடியாக பிரதமரிடம் கையளித்த ராஜகோபாலிடம் இன்னொரு பிரதியை கேட்டு வாங்கிய பிரதமர் அதில் தனது கையெழுத்தை வைத்ததுடன் நூறு ரூபாவையும் சேர்த்து ராஜனிடம் வழங்கிய ஞாபகம் எனக்கு உண்டு.
சில வெற்றிகள் கூட விலாசமற்றுப் போய்விடுகின்றன , ஆனால் சில தோல்விகளுக்குக் கூட சரித்திரம் உண்டு என்பதை நன்கு உணர்த்தியது அவரது இரண்டாவது நூலாகிய வி.பியின் சோவியத் பயணக் கதை.
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்ற அவரது மூன்றாவது நூலை வாசிக்கும் ஆற்றல் மட்டும் பசுபிக் சமுத்திரத்திற்கு இருந்திருக்குமேயானால் என்றோ அது பாக்கு நீரிணையுடன் சங்கமித்திருக்கும்.
சோதனையின் கொம்பு முறித்துச் சாதனை பலதை மனித குலத்திற்கு காட்டிய ஆழிக்குமரன் ஆனந்தனின் செயலாற்றல்கள் அவரது நான்காவது நூலான பொழுது பலர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி காலம் போற்றும் முத்துகளுடன் மிதந்தனர்.
இலங்கையில் வெளிவந்த பத்திரிகைகள் , சஞ்சிகைகள் மற்றும் அவற்றின் ஆசிரியர்கள் உட்பட சுமார் மூன்று தலைமுறை இலக்கியவாதிகளினதும் அரசியல்வாதிகளினதும் வரலாறுகளை ஞாபகத்திலிருந்தே அவர் சொல்வார்.
தினகரன் பத்திரிகை இவரை 1975ல் துணை ஆசிரியராக்கி கொழும்புக்கு அழைத்தது. அத்துடன் பாராளுமன்றுக்கும் நிருபராகியதில் பல அமைச்சர்களுடன் நெருக்கமானார்.
தினகரனின் முதலாம் பக்கம் முதல் கடைசிப்பக்கம் வரை கவரும் வகையில் அவரது கைவண்ணம் கண்ட வாசகர்கள் பல்கிப் பெருகினர். இதயராகங்கள் , கலையரங்கம் , சினிமாப்பகுதி எனவும் பிறவுமாக பல தரப்பட்ட விஷயங்களை பக்கம் பக்கமாக எழுதி , தினகரனின் எல்லாப் பக்கங்களும் ரசிக்கத்தக்கவை என்று சொல்ல வைத்தார்.
அச்சடித்த நந்தவனமாக அழகாக மலர்ந்தது தினகரன்.
ஆறு வருடங்களின் பின் ஈழநாட்டிற்கு மீண்டார். 1985 ம் ஆண்டு மார்ச் மாதம் யாழ் முத்திரை சந்தையடியில் ஆறு மாத இளம் கர்ப்பிணிப் பெண் மீது சிங்கள ராணுவக் காடையர் பலாத்காரம் புரிந்த கொடூரத்தை ஈழநாட்டிலிருந்த ராஜகோபாலால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பின்னர் ராணுவத்தாலும் ராஜகோபாலை சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.
இங்கிலாந்து அவரை அரவணைத்தது.
1993ல் இங்கிலாந்தில் தமிழன் என்று இவரை சொல்ல வைத்தது தமிழன் பத்திரிகை. தமிழரோடு தமிழில் பேசிய தமிழன் பத்திரிகையால் அவரை கனவானாக்கவும் முடியவில்லை.அவரை தனவானாக்கவும் முயலவில்லை. சம காலத்திலே ஆசிரியராக ஈழகேசரி பத்திரிகையையும் வெளியிட்டார். ஆனால் அவசர யுகம் அதனையும் ஆட்கொள்ளவில்லை.
நீண்ட நாள் கனவுடனும் புதிதாய் தோன்றிய தினவுடனும் 1994ல் புதினம் , மனம் பேசுகிறது ஆகிய பத்திரிகைகளை வர்ணத்தில் வெளியிட்டு நிறைவேற்று அதிகாரியாகவும் , பிரதம நிர்வாக ஆசிரியராகவும் வீறுற வீற்றிருந்தவர் ராஜகோபால் என்பதை வரலாறு அடிக்கோடிடும்!
இலக்கிய களஞ்சியமான புதினம் ராஜகோபாலின் புனிதம் என்பார்கள் படித்தவர்கள்.
தமிழ் மக்களின் உயர்வுக்காகவும் , நல் வாழ்வுக்காகவும் , ஏற்றமுடன் பணிசெய்வதை பணிவோடும் , துணிவோடும் , முத்திரை பதித்தது புதினம் மாசிகை.
கோகிலா தங்கத்துரை, ஈ.கே.ஆர், ரங்கன் தேசிகன், மகரந்தன், தேனீ, விசாலாட்சி, ராகி, ராகினி, பவானி, பாமா, ஷர்மினி, ஷியாம், ராகிராஜ் என அவரது புனை பெயர்களை கூட புகழ் பூக்க வைத்தார்.
ஈகேஆர் பப்ளிஷர்ஸ் , ஈழகேசரி பப்ளிஷர்ஸ் , தமிழன் பப்ளிஷர்ஸ் , புதினம் வெளியீட்டகம் ஆகிய பதிப்பகங்களை சொந்தமாகக் கொண்டு இயங்கிய ராஜகோபால் அவற்றின் ஊடாக தனது படைப்புகளுக்கும் வெளியாரின் வேறு சில படைப்புகளுக்கும் நூலுருக்கொடுத்தார்.
ராஜகோபால் சிவப்பு சிந்தனையாளர்.பொதுவுடமை கட்சியாளர். அந்த வட்டாரத்தில் விஸ்தாரமான நட்பு இருந்தது. எனினும் மாற்று அரசியலாளருடனும் பேதமற்ற உறவை அவர் பேணியது மனதில் குழப்பமின்றி குமிழிடுகிறது.
செய்தி , கட்டுரை , கடிதம் எதுவாகவும் இருக்கட்டுமே! அவர் எழுதும் பாணி அலாதியானது. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவதில் அவருக்கு நிகர் அவரே. விடயங்களுக்கு அருமையான விமர்சனங்களையும், கடிதங்களுக்கு அழகான பதில்களையும் உடனக்குடன் எழுதும் உன்னத சுபாவம் அவரிடம் உண்டு.
அவரது பெருமதிப்புக்கும் , பெருவிருப்புக்கும் உரிய பத்திரிகையாளர்களாக , ஈழநாட்டின் பிரதம ஆசிரியராகவிருந்த திரு கே.பி.ஹரன் அவர்களும் தினகரன் பிரதம ஆசிரியராகவிருந்த திரு ஆர்.சிவகுருநாதன் அவர்களும் இதயத்தில் நீடித்து நிலைத்தனர்.
“பத்திரிகை உலகில் பலர் வியக்கும் பத்திரிகையாளர்கள் அவர்கள்.சில வார்த்தைகளை அல்லது சில வரிகளை அல்லது சில பந்திகளை திருத்தி சுவாரஸியம் சேர்ப்பது பத்திரிகை ஆசிரியர்களின் வழமை. ஆனால் அவர்கள் இருவரும் ஒரு கட்டுரையையே சிறிது நேரத்தில் விறுவிறுவென்று மாற்றி அச்சுக்கு அனுப்பும் ஆற்றல் நிரம்பியவர்கள் என்பது பாரறிந்த உண்மை. இவர்கள் இருவரும் குருநாதர்களாக எனக்குக் கிடைத்தது நான் பெற்ற பாக்கியம் என்பேன்.” என இதயம் மலர என்றுமே சொல்லிக்கொள்வார் ராஜகோபால்.
பத்திரிகையாளர்களின் அன்றைய – இன்றைய வேறுபாடுகள் எவை? என்று அவரிடம் கேட்டுப்பாருங்கள்.
“தேவையானவற்றை விரல்நுனியில் வைத்திருக்கும் தேவை அன்றிருந்தது. விரல்நுனியே தேவையானவற்றை தேடிப்பிடிக்கும் சேவை இன்று உளது. கிட்ட இருந்தாலும் சட்டெனத் தொடர்பு கொள்ள முடியாத நிலை அன்று. எட்ட இருந்தாலும் எட்டித் தொடும் சாதனங்கள் இன்று. செய்திகளை கூட்டியும் , கதைகள் , கட்டுரைகளை குறைத்தும் செதுக்கினர் அன்றைய பத்திரிகையாளர். திருப்பி அனுப்பினால் அவற்றைத் தாமே கவனித்துக் கொள்கின்றார்கள் இன்றைய எழுத்தாளர்கள்! தீபாவளி மலர் தயாரிப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பமானது அன்று. ஆறு நாட்களோ ஆறு மணித்தியாலங்களோ போதும் என்ற நிலை இன்று. ஆகக்குறைந்தது நான்கு ஐந்து பேரது உழைப்பின்றி அச்சில் கொண்டு வர முடியாது அன்று. அனேகமாக ஒருவரே முடிக்கின்றார் எவ்வித களைப்புமின்றி இன்று! ” என்பதே அவரது பதிலாகும்!
புதிய பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் என்றால் “சொல்லப் போகும் விடயத்தை சுற்றி வளைக்காது நேரே நறுக் என்று சொல்லும் பொழுதுதான் ஆக்கங்கள் மனதைத் தொடும்.ஒரு செய்தியின் முக்கிய அம்சத்தை அந்தச் செய்தியின் முதலாவது வாக்கியமாகவே கொடுத்து விட வேண்டும். வாசகர்களை செய்திக்குள் செய்தியை தேடவிடக் கூடாது என்று சொல்வேன்”என்பார்.
“தொடர்ந்து எழுதுங்கள்.தொடராக எழுதுங்கள்”என்பதே எழுத்தாளர்களுக்கான அவரது பொதுவான அறிவுரை.
மக்களின் எண்ணங்களையும் , வாழ்வியல் அழகையும் , இதயங்களில் பதிய வைத்து முதியவர்களின் அனுபவத்தையும் இளைஞர்களின் ஆர்வத்தையும் இணைத்துக் கொண்டு் , தொலைநோக்குப் பார்வையுடன் செயற்படுவதில் , வல்லவராகவே வாழ்ந்த அவரது வாழ்வு புதிய பத்திரிகையாளர்களுக்கு நல்லதோர் முன்னுதாரணம்.
தனக்கென ஓர் தனியிடத்தைப்பெற்று தரணி போற்ற வாழ்ந்த ராஜகோபாலின் ஊடக வாழ்வு சாதனை நிறைந்தது. சுவை மிகுந்தது. ஓய்வறியா உழைப்பு பிரமிப்பு ஊட்டுவது.
இதயத்தை ஊடுருவும் ஜனரஞ்சக பத்திரிகையாளரான ராஜகோபால் எம்முடன் வாழும் அதி மூத்த பத்திரிகையாளர்!
அவரது ஊடக தாகம் , அவரது ஊடக அர்ப்பணிப்பு என்பன உச்சக்கட்டமாக அவரை ஊடக அடையாளமாக்கியதில் வியப்பேது?
‘ஈழநாடு’ பத்திரிகையின் விசாலமான வரலாற்றுப் பக்கங்களில் மதிப்பார்ந்த இடம் அவருக்கு என்றும் உண்டு!
தமிழ் பத்திரிகை உலகின் மதிப்பார்ந்த வரலாற்றுப் பக்கங்களிலும் வியாபகமான இடம் அவருக்கென்று என்றும் உண்டு!
முதுமையை வென்று முனைப்புடன் வாழ ஏதாவது ஒரு வழி இருந்தால் எவ்வளவு நல்லது!