“சங்கதி”…. கனடா சிறு கதை 09 …. எஸ்.ஜெகதீசன்
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் பிரதான பட்டினமான ஹலிபாக்ஸை நோக்கிச் செல்லும் 102 நெடுஞ்சாலையுடன் உள்ளுர் வீதியை இணைக்கும் திருப்பத்தில் தனது பெருவிரலை வளைத்து காட்டி நின்றவள் முன்பாக எனது காரை மெதுவாக நிறுத்தினேன்.
ஓடோடி வந்து தொற்றிக் கொண்டாள்.
பொதுவாக வெள்ளைகள், கறுப்புகள், சீனர் என பல சாரதிகள் என்னை உற்று உற்றுப் பார்த்தவாறே தமது வேகத்தை கூட்டிச் சென்று விடுவார்கள். உனக்கு மிக்க நன்றி. எனது பெயர் அமிக்ஸ்யூ. கனடாவின் முதற்குடியினள். மிக்மாக் இன குழுமத்தின் வம்சாவழி என்றாள்.
நல்லது. எனது பெயர் மாலினி. இலங்கையை பூர்விகமாக கொண்டவள். உன் போன்ற காசில்லாப் பயணிகளுக்கு உதவினால் சிலவேளை உபத்திரவம் செய்யக்கூடும் என்ற அச்சம் காரணமோ தெரியாது என்றேன்.
அதை விடு! இலங்கைத் தீவை விட பரப்பளவில் சிறிய மாகாணம் நோவா ஸ்கோஷியா என்று கேள்விப்பட்டுள்ளேன். அப்படியா?
அப்படித்தான். ஆனால் இலங்கையில் உள்ள கலங்கரை விளக்குகளின் எண்ணிக்கை இருபத்தைந்து. நோவா ஸ்கோஷியாவில் உள்ள கலங்கரை விளக்குகளின் எண்ணிக்கை நூற்றி எண்பத்தைந்து. அது ஏன்?
மிக நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் குறைவான பகல் வெளிச்சம். கடும் பனிப்புகார். கொந்தளிக்கும் கடல் அலைகள், மற்றும் பனி மூடி மறைக்கும் பல குட்டிக்குட்டித் தீவுகள், மண் மேடுகள் போன்றன ஏற்படுத்தும் ஆபத்துகளை எச்சரிக்கவே ஏராளமான வெளிச்ச வீடுகள் இப் பிராந்தியத்தில் தேவையாயிற்று என்றாள் சாவகாசமாச் சாய்ந்தவாறு!
உன்னிலை விசயம் இருக்குது போலே! இதற்கு என்ன பதில் சொல்லு. நீ செய்தது போல் காசில்லாமல் பயணிக்க விரும்புபவர்கள் ஏன் தமது பெருவிரலை உயர்த்தி காண்பிக்கின்றார்கள்?
ஓ! அதுவா.. பயணிப்பதற்கு அனுமதி கோரும் சமிக்ஞையாக உலகம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இரண்டாம் உலக போருக்கு புறப்படத் தயாரான விமானிகள் விமானத்தில் இருந்தவாறே தரையில் உள்ளோரிடம் தமது பெருவிரலை உயர்த்திக் காண்பித்து தாங்கள் பயணிக்கலாமா என அனுமதி கோரியிருந்தனர். அதில் தொடங்கிய வழக்கம் இது.
சிறிய மௌன இடைவெளியின் பின் பார்வையால் என்னை அளந்தபடி ஸ்கோஷியா பற்றி என்ன தெரியும் என்றாள்.
உலகின் முதலாவது தொலைபேசித் தொடர்பை இங்கிருந்துதான் கிரஹம் பெல் மேற்கொண்டார். பழங்குடி மக்களால் பல காலம் அகாடியா என்றே அழைக்கப்பட்டது. சிங்கரால்களுக்கு முதலாவது இடம். நத்தார் மரங்கள் ஏற்றுமதியில் முன்ணணி. மேப்பிள் ஷிரப் தாயாரிப்பில் கியுபெக் ஒண்டாரியோ மாகாணங்களுக்கு அடுத்தது என்றவாறே அவள் பக்கம் முகம்திருப்பி நோவா ஸ்கோஷியா வரும் உல்லாச பயணிகள் பார்க்க விரும்புபவை எவை என்பதை நீ சொல்லு என்றேன்.
நோவா ஸ்கோஷியாவின் 13000 கிலோ மீட்டருக்கும் அதிகமான கடற்கரை பார்க்க வேண்டிய இயற்கை அழகு. கபோட் பாதை மனம் லயிக்கும் அழகு. ஆங்காங்கே தென்படும் படிம பாறைகள் புராதன அழகு. பெக்கிஸ்கோவ் கலங்கரை விளக்கு ஓர் அதிசய அழகு. இப்படி எத்தனையோ இருப்பினும் நான் சொல்வேன் கெஜிம்குஜிக் தேசிய பூங்காதான் எனது சொர்க்கம்.. சிறிய தேவதைகள் என்பது அதன் அர்த்தம். அங்கே எமது முன்னோர்கள்-செவ்விந்தியர்கள் எனப்பட்ட முதற்குடி மக்கள் வாழ்ந்த வாழ்வு உண்டு. அதற்கான வரலாற்று ஆவணங்கள் உண்டு. கலை கலாசார பாரம்பரிய அடையாயங்கள் காட்சிக்கு உண்டு. அங்குள்ள வென்ட்வேர்த் பள்ளத்தாக்கில் கஞ்சாவிற்கு பஞ்சமில்லாத உலகை கண் திறந்து பார்க்கும் அற்புத அழகு நிறையவே உண்டு.
ஸ்கோஷியா என்றால் அரசல்புரசலாக ஸ்கொட்லாந்து போலத் தொனிக்கின்றதே! இங்கு வந்த பல சனம் அதனை கொட்டியா என்று உச்சரிப்பில் பிழை விடுவதுண்டு. எங்க ஊரிலை ஆமிக்காரன் அப்பாவி இளைஞனை பிடித்தால் கொட்டியா கொட்டியா என்றே உதைத்தான் வதைத்தான். கொட்டியா என்றால் சிங்களத்தில் புலி என்று அர்த்தம்!
நோவா ஸ்கோஷியா என்றால் லத்தீன் மொழியில் புதிய ஸ்கொட்லாந்து என்பது அர்த்தம். நாடு பிடிக்க வந்த இத்தாலியர்கள் அப்பகுதியில் ஸ்கொட்லாந்து மக்களை கண்டதில் இழிவுசிறப்பாக சூடிய பெயரே நிலைத்தது. நோவா ஸ்கோஷியா கொடி கூட அப்படியே ஸ்கொட்லாந்து கொடியை உல்டா செய்ததை போன்றிருக்கும் என்றவள்
இலங்கையில் ஆகப் பெரிய சிங்க ரால்கள் அதிகபட்சம் எவ்வளவு நீளம் மாலினி என்றாள் சப்புக்கொட்டியவாறே!
எனக்குத் தெரிய ஒரு அடிக்கு மேலானதை நான் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. நீங்கள் அனைவரும் சிங்க ரால் புராணம் பாடுவது ஏன் என்பதுதான் ஜீரணிக்க முடியவில்லை!
“உலக புகழ் பெற்ற எங்களுடைய சிங்க ரால்களுக்காகவும் எங்களுடைய ‘டைடல் பே வைனு’க் காகவும் ஏங்காதவன் நோவா ஸ்கோஷியனாக இருக்க அருகதை அற்றவன். சும்மா வாயில வைச்சாலே ஜன்மசாபல்யம் கிட்டும். இக் கடல் பிராந்தியத்தில் சுமார் நான்கு அடி கொண்ட சிங்க ரால்கள் பிடிக்கப்பட்டுள்ளன. மார்கழி மாத ஆரம்பம் முதல் ஆனி வரை அவற்றின் ஸீசன். 12 வகை திமிங்கலங்கள்,உயிருள்ள கொழுத்த சிப்பிகள், கடல் மட்டிகள் என கடல்சார் வசீகரம் ஏராளம். சிங்க ரால்களின் கனடா தலை நகரமான இங்குள்ள பாரிங்டனில் ஒவ்வொரு பெப்ரவரி மாதமும் சிங்கரால் பெருவிழா பலரும் எதிர்பார்ப்பது! மஹோன் விரி குடாவில் சிங்க ரால் பியர் பலரது வித்தியாசமான விருப்பத் தெரிவு. சிங்க ரால்கள் சுமார் நூறு வருடங்கள் உயிருடன் வாழக் கூடியவை. கண்களை சுற்றியுள்ள வளையங்களை எண்ணி வயதை முன்னோர் கணித்தனர்!” என்றாள்.
பின்னர் நீ என்ன வேலையில் உள்ளாய் என்றாள் காயப்படுத்தாத தொனியில்.
கணக்காளர் என முடிக்க முன்பே வாவ்! நோவா ஸ்கோஷியாவிலே கொழுத்த சம்பளம் பெறும் வேலை உது என்றாள்.
நீ எங்கு வேலை செய்கிறாய்? என்றேன். பெருவிரலை உயர்த்தி ‘ஓஸி’ யாக பயணிப்பவளிடம் இது என்ன விசர்க் கேள்வி என்பது கேட்ட பின்தான் உறைத்தது.
திரவத்தங்கம் பகுப்பாளராக உள்ளேன் என்றாள் சிரித்தவாறே. வெள்ளி மாலை பெறும் சம்பளம் முழுவதும் திங்கள் காலைக்குள் போதை வஸ்துடன் தீர்ந்துவிடும். விரலோடு சீவியம் தொடங்கிவிடும். பிறகு உணவு உண்பவர்கள் என்னையும் சேர்த்துக்கொள்வார்கள். வீதியோரம் நின்று எத்தனை பேருக்குத்தான் தூக்குவது! மரத்துப்போகும்.
கதையின் போக்கை வேறு திசைக்கு திருப்ப எண்ணியவளாக நோவா ஸ்கோஷியாவில் பொன் ஆறு என்ற பெயரில் ஆறு உண்டு. திறந்த குழி சுரங்கங்கள், வரலாறு உற்பத்தி கொண்ட சுரங்கங்கள், உட்பட பல தங்கச் சுரங்கங்கள் உள்ளதையும் கேள்விப் பட்டுள்ளேன்.
ஆனால் திரவத்தங்கம் என்றால் என்ன என்றுதானே கேட்கப்போகின்றாய்! மேப்பிள் சிரப்பின் செல்லப் பெயர் அது. நான் வேலை செய்யும் இடத்துக்குச் சொந்தமாக எழுபதாயிரம் மேபிள் மரங்கள் உள்ளன. அவற்றிலிருந்து சேகரிக்கப்படும் பாணியை பகுப்பாய்வு செய்து தரம் பிரிப்பதுதான் எனது பணி. மேபிள் மரங்களில் 30 வருடங்களின் பின்னர் பாணி சுரக்கும். பெறப்படும் பாணி உடம்பை பலப்படுத்தும். உணவை இனிப்பூட்டும். உணவை பாதுகாக்கும். தொன்மையில் மயக்க மருந்தாகவும் பாவிக்கப்பட்டுள்ளது. மரத்திலிருந்து நேரடியாக பருகுபவர்கள் சிலர். அதிலுள்ள பக்டீரியாக்களை கொல்வதற்காக கொதிக்க வைத்தும் பருகுவார்கள் சிலர்.
சாலையின் இருமருங்கும் உள்ள மேபிள் மரங்கள் எம்மை விட வேகமாக எதிர்திசையில் ஓடிக் கொண்டிருப்பது போலொரு பிரமை திடீரென மனதில் வேர் விட்டது.
மேபிள் மரங்கள் டைனசோர் காலத்தவை. 100 மில்லியன் வருடங்கள் பழமையானவை என புதைபடிவ பதிவுகள் கூறும். 200 வருடங்கள் வாழக்கூடியவை. 128 வகை மரங்கள் உண்டு. 150 அடி உயரத்திலும் காணலாம். சில அங்குல உயரத்திலும் காணலாம். உறுதியான தளபாடங்கள், ‘பேஸ்போல்’ மட்டைகள், வாத்தியக் கருவிகள் தயாரிக்கின்றார்கள் என நானும் வாசித்துள்ளேன் என்றேன்.
கனடா தேசிய கொடியில் மேபிள் இலை இடம் பிடிக்க என்ன காரணம் தெரியுமா என்றவள் அதிஷ்டத்திற்கும், காதலுக்கும், பாதுகாப்புக்கும், மேபிள் இலைகள் அடையாளம் என அநாதியில் எமது முன்னோர்களிடம் இருந்த ஆழ்மன நம்பிக்கையை பிரதிபலிக்கவும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவை தேசியகொடியில் இன்று வரை அசைந்தாடுகின்றன என்ற கருத்து முதற்குடிமக்களிடம் உண்டு.. ஏனையோர் ஒற்றுமை, பன்முகத்தன்மை, அமைதி, இயற்கை அழகு வரலாறு என்பனவற்றை அடையாளப்படுத்துகின்றன என்றிடுவர் என பதிலையும் தானே சொன்னாள்.
மென்பச்சை, கடும் பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, அடர் சிவப்பு, ஊதா என பல நிறங்கள் காட்டும் இலையுதிர் கால மரங்கள் கொள்ளை அழகு. கனடாவை மேப்பிள் இலைகளின் நாடு என்றும் பெருமையாக சொல்வார்கள்தானே? என்று விட்டு அவளைப் பார்த்தேன்.
அது மட்டுமல்ல பெரிய வெள்ளை வடக்கு, நோத் லாந்து விக்டோரிய லாந்து போன்ற கொச்சையான பல பெயர்கள் கூட கனடாவிற்கு இருப்பினும் அவை வழக்கிழந்துள்ளன. நோவா ஸ்கோஷியாவை நீல மூக்கு என்றவர்களும் இருந்தனர் என்றாள்.
185 வெளிச்சவீடுகள் பற்றி ஏதாவது சங்கதி சொல்லேன்?
கனக்கப் புத்தகங்களுண்டு.வாசி.ஒவ்வொன்றிக்கும் தனித்துவம் அறிவாய்.
கனடாவில் முதலாவது வெளிச்ச வீடு 1734ல் கட்டப்பட்ட கேப் பிரெட்டன் தீவில் உள்ள லூயிஸ் வெளிச்சவீடு. இப்பொழுது செயலிழந்துவிட்டது. அதனால் 1758 லிருந்து இன்று வரை பாவனையில் உள்ள ஹலிபாக்ஸ் இயற்கை துறைமுக நுழை வாசலில் உள்ள சாம்ப்ரோ தீவு வெளிச்ச வீடுதான் மிகவும் பழமையானதாக உள்ளது. ஆனால் 1868 ல் உருவாக்கப்பட்ட பெக்கிஸ்கோவ் கலங்கரை விளக்கு மக்களிடம் பிரசித்தமாக திகழ்கின்றது.அதன் படம் பலரது விருப்பம். அங்கு கரை ஒதுங்கிய சிறுமியின் உடலுக்கு அளித்த முதலுதவி அவளுக்கு உயிரூட்டியது. அச்சிறுமிக்கு பெக்கி எனப் பெயரிட்டனர். பெக்கி என்றால் சிறு அதிசயம் என்று அர்த்தம்.அங்கு சென்று வந்தால் தமது வாழ்விலும் அதிசயம் நிகழும் என நம்புபவர்கள் ஏராளம். அப் பகுதியில் பளிங்குப்பாறைகள், கடற்கரையிலும், கடலுக்கடியிலும் நிறைந்து கண்களுக்கு விருந்தாகின்றன.
அடுத்த முடக்கிலை நான் நெடுஞ்சாலையை விட்டு வெளியேறப் போகின்றேன். நான் போக வேண்டிய ஹலிபாக்ஸ் இயற்கைத் துறைமுகம் வந்துவிடும் என்றேன்.
எங்கள் கதை எப்படி? மகத்தான கதை சொல்லி என்று என்னைச் சொல்வாயா? என்றாள்.
எங்கள் கிராமங்களிலும் உப்படித்தான். அந்தக் காலத்தில் புளியமரத்தடியில் அல்லது வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து ஊர் கதை கதைப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். உங்களின் மூதாதை கூட மூட்டிய நெருப்பின் முன்பாகவோ அல்லது மேப்பிள் மரத்தடியிலோ ஊர் பற்றி கதைப்பார்கள் எனவும் அறிந்துள்ளேன். அதுவே நினைவில் வந்தது என்றேன்.
சரி..சரி.. வசதிபோல எங்கையாவது என்னை இறக்கி விடு என்றவள் கார் நின்றவுடன் மிக்க மிக்க நன்றி எதிர் காலத்திலும் எங்கையாவது சந்திப்போம் என்றவாறே கதவைத் திறந்தாள்.
ஓ!…அப்ப ஊர் கதை தொடரும் என்றேன்.
காருக்குள் நடந்த கதை தொடரும் என்று சொல்வதே பலரது பாணி. ஆனால் அது வேறு கதை என்றாள் அமிக்ஸ்யூ.