20 ஆம் திகதி பதவியேற்பு; 10 ஆம் திகதி ட்ரம்புக்கு தண்டனை!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ்,கடந்த 2006 ஆம் ஆண்டு ட்ரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை வெளியில் கூறாமல் இருக்க தனக்கு பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்துக்காக திரட்டப்பட்ட நிதியிலிருந்து போலியான வணிகப் பதிவுகளை உருவாக்கி சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அந் நடிகைக்கு ட்ரம்ப் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன.
இது தொடர்பில் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை குற்றவாளி என கடந்த ஆண்டு ஜூன் மாதம் மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், இவ் வழக்கு தொடர்பில் டொனால்ட் ட்ரம்புக்கு அடுத்த வாரம் 10 ஆம் திகதி நீதிமன்றம் தண்டனை அறிவிக்கிறது.
தண்டனை அறிவிக்கப்படும்போது நேரிலோ அல்லது காணொளி மூலமாகவோ ட்ரம்ப் கலந்துகொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவ் வழக்கு தொடர்பில் ட்ரம்புக்கு தண்டனை அளிக்கப்படாமல் அபராதத் தொகை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில் 10 ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படும் நிகழ்வு பெரும் பேசுபொருளாகியுள்ளது.