கண்டியில் கைநழுவிய தமிழ் பிரதிநிதித்துவம்; பெருந்தோட்ட மக்கள் பெரும் கவலையில்
கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித் துவம் கைநழுவியுள்ளதாக பெருந்தோட்ட மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
மலையகம் என்றால் பொதுவாக மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களே நினைவுக்கு வரும். அதிலும் குறிப்பாக நுவரெலியா, கண்டி, பதுளை போன்றவை பிரதானமானவையாகும். ஆனால் பொதுவாக மலையகத்தின் தலைநகர் கண்டி என்பர்.
பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களில் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொள்ளப்பட்டது அல்லது பழைய பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மலையகத்தின் தலைநகர் எனப் போற்றப்படும் கண்டி மாவட்டத்தில் கடந்த 10 வருடங்களாக தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு வந்த போதும் இம்முறை அது கைநழுவியமை கவலையளிப்பதாக பலர் கவலை தெரிவித்தனர்.
கடந்த இரு பாராளுமன்றங்களிலும் வேலுகுமார் கண்டி மாவட்டம் சார்பாக பிரதிநிதித்துவம் செய்தார். அவர் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிச் சின்னங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாகப் போட்டியிட்டபோது அவர் வெற்றி பெற்றிருந்தார். இம் முறை அவர் சிலிண்டர் சின்னத்தில் போட்டி யிட்டு தோல்வியடைந்துள்ளார்.
அதேநேரம் ஐக்கிய மக்கள்சக்தி சார்பாகப் போட்டியிட்ட பாரத் அருள் சாமியும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரபல வேட்பாளர் கலாநிதி பீ.பீ.சிவப்பிரகாசமும் தெரிவு செய்யப்படவில்லை. இன்னும் பல சுயேச்சைக் குழுக்களும், சிறு கட்சிகளும் தமிழ் வேட்பாளர்களை நிறுத்திய போதும் வாக்குகள் சிதறிச் சென்றுள்ளதாகப் பலர் கவலையடைந்துள்ளனர்.