மணிப்பூரில் மீண்டும் பதற்றம்; ஆறு பேர் சடலங்களாக மீட்பு; முதலமைச்சர் வீட்டின் மீதும் தாக்குதல்
மணிப்பூரில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் என். பிரேன் சிங் மற்றும் அவரது மருமகன் ஆகியோரின் தனியார் வீடுகள் மீது போராட்டகாரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலிக் போது, முதலமைச்சர் இல்லத்தில் இல்லை எனவும் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டகாரர்களின் கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் காணாமல் போன மைதேயி பிரிவைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து மாநிலத்தில் பதற்றம் தீவிரமானியுள்ளது.
முன்னதாக, கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி மைதேயி இனத்தை சேர்ந்தவர்கள் இரண்டு அமைச்சர்கள் மற்றும் மூன்று சட்ட மன்ன உறுப்பினர்களின் வீடுகளைத் தாக்கினர்.
எவ்வாறாயினும், வன்முறை காரணமாக இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழு மாவட்டங்களில் இணைய சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை கொலை செய்த குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜிரிபாம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக மணிப்பூரில் மீண்டும் இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
ஜிரிபாம் மாவட்டத்தில் பழங்குடியின இளம்பெண் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிரிபாம் பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை தீ வைத்து எரித்து குகி இனத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.