இலங்கை

கிழக்கில் புலனாய்வுப் பிரிவு ஊடாக இஸ்லாமிக் சென்டருக்கு ஆயுதங்கள் வழங்கிய சலே

அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் கிழக்கு மாகாணத்தில் புலனாய்வுப் பிரிவு ஊடாக சேவையாற்றிய போது இஸ்லாமிக் சென்டர் அமைப்புக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற்பட்ட காலங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களை தனிப்பட்ட முறையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிப்பதாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கூறிய அவர் மேலும் பேசுகையில்,

அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ள பின்னணியில் முன்வைக்கப்படும் இந்த கேள்விகளுக்கு பதிலை ஆராய்வது, முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

இலங்கை இராணுவத்தால் தேடப்பட்ட கோபி, அப்பன் மற்றும் தேவிகன் ஆகியோர் 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழ் அரசியல்வாதி ஒருவரின் காட்டிக் கொடுப்பினால் 2000 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு வவுனியா நெடுங்கேணி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இதில் காட்டிக்கொடுக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் இவ்விடயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே இது தொடர்பான புகைப்படத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை வெற்றிபெற வைக்கவே புலிகள் மீள் உருவாக்கம் செய்யப்படுகின்றனர் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்றதாக இந்த மூவரும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது தப்பியோட முயற்சித்த நிலையில் மூவரும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.எனவே இந்த சம்பவத்தையும் மீண்டும் விசாரணை செய்தால் தற்போதைய விசாரணைகளுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் புலனாய்வு பிரிவு ஊடாக சேவையாற்றிய போது இஸ்லாமிக் சென்டர் அமைப்புக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற்பட்ட காலங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களை நான் தனிப்பட்ட முறையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆயுதங்கள் தற்போது கிடைக்கப்பெறுகின்றன. இவர்கள் வைத்த ஆயுதங்களை இவர்களே தற்போது மீள வழங்குகிறார்கள். இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வேண்டும். அது தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு சாதகமாக அமையும் என்றார்.

இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, முன்வைக்கப்பட்ட விடயங்களில் ஒருபகுதி பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையது,ஆகவே விரிவான பதிலை நாளை (இன்று வெள்ளிக்கிழமை ) முன்வைக்கிறேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button