தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் இடமா?
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், தேர்தலில் தோற்றவர்களுக்கு இடமளிப்பதா? இல்லையா? என்று கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என்றும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் வருமாறு,
கேள்வி: உங்களுடைய கட்சியின் தேசியப் பட்டியலுக்கு என்ன நடக்கும்?
பதில்: அதற்காக ஐந்து போரை நியமிப்போம்.
கேள்வி: ஜீ.எல்.பீரிஸ் வருவாரா?
பதில்: தெரியாது.
கேள்வி: மனோ கணேசன் தோல்வியடைந்துள்ளார். அவர் வருவாரா?
பதில்: இன்னும் யார்? யார்? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை.
கேள்வி: உங்களிடம் இருப்பது 5 தேசியப் பட்டியல் ஆசனங்களே. இதில் மனோ கணேசனும் கேட்பார். ஹக்கீமும் கேட்பார். ரிஷாத்தும் கேட்பார். திகாம்பரமும் கேட்பார். இறுதியில் உங்களுக்கு என்ன எஞ்சப் போகின்றது.
பதில்: இருப்பதை நியாயமாக பகிர்ந்துகொள்வோம். சரியான தீர்மானங்களை எடுப்போம்.
கேள்வி: எப்போது அந்த தீர்மானங்களை எடுப்பீர்கள்? தோல்வியடைந்தவர்களை எடுக்க மாட்டீர்களா?
பதில்: கூடிய விரைவில் எடுப்போம். கலந்துரையாடல்கள் நடக்கின்றன.
கேள்வி: கலந்துரையாடலில் சரியென்றால் தோல்வியடைந்தவர்களை எடுப்பீர்கள் அப்படியா?
பதில்: அப்படி இல்லை. நாங்கள் எந்த தீர்மானத்திற்கும் வரவில்லை. தோற்றவர்களை எடுக்க வேண்டும் என்றா ஊடகங்கள் கூறுகின்றன.
கேள்வி: இல்லை. தோற்றவர்களை எடுக்காமல் இருப்பதே நல்லது. ஆனால் மனோ கணேசன் வருவார் போன்றே இருக்கின்றது.
பதில்: ஏன் , நீங்கள் நினைப்பதை போன்றா நாங்கள் செய்ய வேண்டும்.
கேள்வி: மனோ கணேசன் தேசியப் பட்டியல் எம்.பி ஆசனத்தை கோருவதாகவே கூறப்படுகின்றது.
பதில்: பலரும் கேட்கின்றனர். 29 பேர் பட்டியலில் இருக்கின்றனர். இது மிகவும் கடினமான வேலையே. ஆனால் நாங்கள் மிகவும் இலகுவாக தீர்ப்போம்.