புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும்; நாளை முதலாவது கூட்டம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளது.
ஜனாதிபதி செயகலகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர். இந்த நிகழ்வை எளிமையான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
23 பேர் கொண்டதாக புதிய அமைச்சரவை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரியவே நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த அமைச்சரவையில் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் வெளிவிவகார அமைச்சு பதவி ஏற்கனவே அமைச்சராக இருந்த விஜித ஹேரத் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை 23 அமைச்சுகளுக்கு ஏற்றால் போன்று பிரதி அமைச்சர்கள் பலர் நியமிக்கப்படவுள்ளதுடன், பல்வேறு விடயதானங்களின் கீழுள்ள முக்கிய அமைச்சுக்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதன்போது வடக்கு, கிழக்கு, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரும் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களாக நியமனம் பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அமைச்சரவை பதவியேற்பின் பின்னர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதலாவது அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.