இந்திய அரசியலில் தன்னலம் கருதாத மக்கள் பணியாளர் கர்மவீரர் காமராஜர் இன்று பிறந்த தினம்!… மா. இளவழுதி திண்டுக்கல்.
காமராஜர் நினைவாக இலங்கை பத்திரிகையாளர் மர்லின் மரிக்காருக்கு ‘தேசத்தின் மாமணி விருது’ வழங்கி கௌரவிப்பு
மா. இளவழுதி
திண்டுக்கல் அகில இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், ‘தென்னாட்டு காந்தி’ என அழைக்கப்பட்டவருமான மறைந்த கே. காமராஜரின் 109 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விருது வழங்கும் திட்டத்தின் கீழ் இலங்கை தினகரன்_ வாரமஞ்சரி இணையாசிரியர் மர்லின் மரிக்கார் ‘தேசத்தின் மாமணி விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் பசுமைவாசல் பவுண்டேசன், குமரி மாவட்டத்தின் தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தின் காமராஜர் இளைஞர் வளர்ச்சி பேரவை, சேலம் மாவட்டத்தின் ஸ்ரீ சக்சஸ் அகாடமி அன்ட் பவுண்டேசன் ஆகிய அமைப்புக்கள் இணைந்து சமூக மேம்பாட்டுக்காக பங்களித்து வரும் பல்துறைச் சாதனையாளர்களுக்கு இணையவழி ஊடாக விருது வழங்கி கௌரவிக்கும் திட்டத்தின் கீழேயே ஊடகவியலாளர் மர்லின் மரிக்காருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ‘பெருந்தலைவர் காமராசரின் மாமணி விருதுகள்_- 2022’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இவ்விருது வழங்குதலில் ‘தேசத்தின் மாமணி’ விருது பெற்றுக் கொண்ட ஒரே இலங்கை பத்திரிகையாளார் மர்லின் மரிக்கார் ஆவார். இவ்விருதை மொத்தம் ஏழு பத்திரிகையாளர்கள் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், ஏனைய அனைவரும் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர் என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்விருது வழங்கும் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமூகசேவகர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், இளம் படைப்பாளர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகிய ஒன்பது பிரிவுகளைச் சார்ந்த சாதனையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, வெவ்வேறு பெயர் கொண்ட விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்த விருதுகளுக்கென 1112 பேர்
விண்ணப்பித்துள்ளனர். பத்திரிகைத்துறை ஊடாக சமூக மேம்பாட்டுக்காக அளித்துவரும் பங்களிப்பில் பெற்றுக் கொண்டுள்ள சாதனைகள் மற்றும் கௌரவிப்புக்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மர்லின் மரிக்கார் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு அளப்பரிய பங்களிப்பை நல்கியவர் காமராஜர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அகில இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவருமான கர்மவீரர் மறைந்த கே. காமராஜரின் 99 ஆவது ஜனன தினம் இன்றாகும் (15.07.2022). அண்ணல் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் இணைந்து இந்திய விடுதலைக்கு உழைத்தவர்களில் கே. காமராஜரும் ஒருவராவார்.
இந்தியாவின் தேசிய முன்னேற்றத்திற்கும் குறிப்பாக தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ள காமராஜர் தன்னலமற்ற ஒரு தலைவராக இன்றும் போற்றப்படுகின்றார். தமிழ்நாட்டு மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ஆற்றியுள்ள சேவைகளின் பிரதிபலனாக தமிழக மக்களின் மனதில் அழியாத இடம்பிடித்துள்ள தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார் கர்மவீரர் காமராஜர். இவ்வாறு சிறப்புற்று விளங்கும் காமராஜர், குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1903 ஜுலை 15 ஆம் திகதி விருதுநகரில் பிறந்தார். காமராஜர், தமது ஆரம்பக் கல்வியை சத்ரிய வித்யா சாலா பாடசாலையில் தொடர்ந்தார். இளம் வயதில் தந்தையை இழந்ததன் விளைவாகப் பொருளாதார கஷ்டத்திற்கு முகம் கொடுத்த இவர், கல்வியை இடைநடுவில் கைவிட்டதோடு தாய்மாமாவின் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். சிறு பராயத்திலேயே வேலைக்குச் சேர்ந்த போதிலும், பத்திரிகைகளைப் படிப்பதிலும் அரசியல் தலைவர்களின் உரைகளை செவியேற்பதிலும் இவர் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். இந்நிலையில் அவர் தமது 16 ஆவது வயதில் இந்திய காங்கிரஸ்
கட்சியில் தொண்டனாக இணைந்து கொண்டார். மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தினால் கவரப்பட்ட இந்திய இளைஞர்களில் ஒருவராக கமராஜரும் விளங்கினார். அதனால் மகாத்மா காந்தி முன்னேடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் 18 வயதாகும் போதே இவர் பங்கெடுத்தார். 1930 இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதால் இவர் கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டு, சொற்ப காலத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவரிடம் அரசியல் தொடர்பில் காணப்பட்ட ஆர்வமும் நாட்டுப்பற்றும் அவரை 1940 இல் காங்கிரஸ் கமிட்டி தேர்தல் தலைவராக பொறுப்பேற்க வைத்தன. 1942 இல் நடைபெற்ற ஓகஸ்ட் புரட்சிப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றிய காமராஜர், பல சந்தர்ப்பங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஆறு தடவை சிறையில் அடைக்கப்பட்டு 09 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ளார்.
இருந்த போதிலும், அவர் தாய்நாட்டுக்கான சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளிலும் அரசியல் செயற்பாடுகளிலும் இருந்து ஒதுங்கி விடவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் சுதந்திரத்தின் பின்னர் 1954 இல் நடைபெற்ற தமிழ்நாட்டு மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய காமராஜர், தமிழகத்தின் முதலமைச்சரானார். இவர் இப்பதவியை மூன்று தடவைகள் (1954–57, 1957–62, 1962–63) ஒன்பது ஆண்டுகள் வகித்துள்ளார். இக்காலப்பகுதியில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார். குறிப்பாக கல்விக்கு முன்னுரிமை அளித்தார்.
இதன் பயனாக ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் 7 வீதமாகக் காணப்பட்ட தமிழகத்தின் கல்வி வளர்ச்சி இவரது ஆட்சிக் காலத்தில் 37 வீதம் வரை வளர்ச்சி கண்டது. இவர் முதலமைச்சரானதும், சாதி, மத வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி இலவசமாக்கப்பட்டது. ஆறாயிரம் கிராமங்களில் பாடசாலைகளே இல்லை என்பதை அறிந்து, அந்தந்த ஊர்களில் ‘ஒரேயொரு ஆசிரியர் கடமையாற்றும் பாடசாலைகளைத்’ திறந்தார். ‘ஏழைக் குழந்தைகள் கல்வி பெறவேண்டுமென்பதற்காக கையேந்தி
பிச்சையெடுக்கவும் நான் தயார்’ என்றார் அவர். தான் படிக்கா விட்டாலும், இந்தத் தேசம் படிக்க வேண்டும் என்று நினைத்தவர் இவர். எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு கல்வி ஒரு சொத்து. கல்வி என்ற சொத்தை பெற்று விட்டாலே வறுமை தானாகவே ஒழிந்து விடும் என்பதே காமராஜரின் நிலைப்பாடாக இருந்தது.
மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தையும் இவரே அறிமுகப்படுத்தினார். இவர் முதலமைச்சரான முதல் வருடத்திலேயே அனைத்து ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணையிட்டார். அதன் பின்னர் உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அதன் பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும்படி ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்தினார்.
இவரது தாயார் ஒரு தடவை இவரை சந்திப்பதற்காக கிராமத்திலிருந்து முதலமைச்சர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். அங்கு முதலமைச்சரைச் சந்திப்பதற்காகப் பொதுமக்கள் வரிசையில் காத்து நின்று கொண்டிருந்தனர். இச்சமயம் தாயார் காமராஜரை சந்திக்க வந்திருப்பதை முதலமைச்சரின் உத்தியோகத்தர்கள் அவருக்கு எடுத்துக்கூறினர். அதற்கு முதலமைச்சர் காமராஜர், “பரவாயில்லை, அவரும் வரிசையில் வரட்டும்” என்று கூறி மக்கள் சேவையின் போது எல்லோரையும் சரிநிகராக நோக்கினார்.
மற்றொரு தடவை காமராஜரின் தாயார் தம் மகனுக்கு கடிதமொன்றை எழுதி, மாத செலவுக்காக அனுப்பி வைக்கும் பணம் போதியதாக இல்லை. அப்பணத்தை சற்று அதிகமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
காமராஜர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டின் முன்னேற்றம், மக்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றுக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை முன்னெடுத்தார். அவரது ஆட்சியின் கீழ் பத்து முக்கிய நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தோடு சீனி உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல தொழிற்சாலைகளையும் ஆரம்பித்தார்.
இவ்வாறான சூழலில் ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று தேசிய அரசியலில் பிரவேசித்த இவர், 1964 இல் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார். 1967 வரை இப்பதவியை வகித்த இவர், இந்தியாவின் மூன்று பிரதமர்களைச் தெரிவு செய்வதற்கும் பங்களித்துள்ளார். இவ்வாறு நாட்டுக்கும் தமிழக மேம்பாட்டுக்கும் அளப்பரிய
சேவையாற்றிய காமராஜர், 1975 ஒக்டோபர் 02 ஆம் திகதி (காந்தியின் பிறந்த தினம்) காலமானார். அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர, அவரது வங்கிக் கணக்கிலே பணம் எதுவும் இருக்கவில்லை, அத்தோடு அவருக்கு சொந்தமாக வீடோ, வேறு ஏதாவது சொத்துகளோ இருக்கவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டிலேயே வசித்தார் கர்மவீரர் காமராஜர். இவர் மரணமடைந்த சமயம் தமிழகத்தின் முதலமைச்சராக மு. கருணாநிதி பதவி வகித்தார். அதனால் முழு அரச மரியாதையுடன் காமராஜருக்கு இறுதி மரியாதை நடத்தப்பட முதலமைச்சர் கருணாநிதி ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
காமராஜர் மறைந்த மறுவருடம், அதாவது 1976 இல் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படும் ‘பாரத ரத்னா’ விருது அவருக்கு வழங்கப்பட்டது. அத்தோடு மதுரை பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரும் சூட்டப்பட்டது.
கர்மவீரர் காமராஜர் சமூக மேம்பாட்டுக்கு உழைத்த முன்னுதாரணம் மிக்க ஒரு அரசியல் தலைவராக விளங்கினார். அதனால் அவர் மறைந்து பல தசாப்தங்களாகியும் (47 வருடங்கள்) இன்றும் நினைவு கூரப்படக் கூடியவராக விளங்குகிறார் என்றால் மிகையாகாது. … _
மா. இளவழுதி திண்டுக்கல்.