போர் விரைவில் முடிவுக்கு வரும்; உக்ரைன் ஜனாதிபதி நம்பிக்கை
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ரஷ்யாவுடனான போர் “விரைவில் முடிவடையும்” என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ட்ரம்ப் உடனான தொலைபேசி உரையாடலின் போது அவருடன் “ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம்” செய்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் சாத்தியமான பேச்சு வார்த்தைகள் குறித்து ட்ரம்ப் ஏதேனும் கோரிக்கை வைத்தாரா என்பதை அவர் கூறவில்லை, ஆனால் உக்ரைனின் நிலைப்பாட்டிற்கு முரணான எதையும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பட்டார்.
2022 பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்புடன் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது முன்னுரிமை என்று ட்ரம்ப் கூறியதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய ஆயுத விநியோகத்தை செய்து வருகின்றது.
ஜெர்மனியின் ஆராய்ச்சி நிறுவனமான உலகப் பொருளாதாரத்திற்கான கீல் இன்ஸ்டிடியூட் படி, போரின் தொடங்கியதில் இருந்து ஜூன் 2024 இறுதிக்கும் இடையில் சுமார் 55.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது உரையாற்றியிருந்த ட்ரம்ப், “ஒரு நாளில்” போரை முடிவுக்கு கொண்டுவருவதாக பலமுறை உறுதியளித்தார். ஆனால் அவர் அதை எவ்வாறு செய்யப் போகின்றார் என்பதை இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில், “தற்போது வெள்ளை மாளிகையை வழிநடத்தும் அணியின் கொள்கைகளுடன் போர் விரைவில் முடிவடையும் என்பது உறுதி என உக்ரேனிய ஊடகமான சஸ்பில்னேவுக்கு அளித்த செவ்வியில் ஜெலென்ஸ்கி கூறினார்.
இது அவர்களின் அணுகுமுறை, அவர்களின் குடிமக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதி,” ஜெலென்ஸ்கி கூறினார்.
ரஷ்யாவுடனான “இந்தப் போர் அடுத்த ஆண்டு முடிவடையும் என்றும், இராஜதந்திர வழிகளில் முடிவடையும் வகையில் அனைத்தையும் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதேவேளை, ரஷ்யப் படைகள் உக்ரைனின் கிழக்கு மற்றும் தென்-கிழக்கில் வேரூன்றிய நிலைகளை ஆக்கிரமித்துள்ளன, முக்கியமாக கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் போரிட்டு வருகின்றது.
ரஷ்யப் படைகள் கிழக்குப் போர்முனையில் பெருகிய முன்னேற்றங்களை கண்டுள்ளன.
வடகிழக்கு நகரமான குப்யான்ஸ்க் மற்றும் தென்கிழக்கில் வுஹ்லேடரைச் சுற்றி மோதல் நடந்ததாக வாஷிங்டனில் உள்ள போர் ஆய்வு நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது.
ரஷ்ய எல்லையில் இருந்து வடகிழக்கு கார்கிவ் பகுதிக்குள் ரஷ்ய காலாட்படையும் தாக்குதலை தொடர்ந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள உக்ரேனிய இராணுவ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ISW தெரிவித்துள்ளது.