அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் எங்கே?
கடந்த சில வருடங்களுக்குள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரசியல்வாதிகள் உள்ளிட்ட வெவ்வேறு நபர்கள் பெற்றுக்கொண்ட 1690 துப்பாக்களில் 30 மாத்திரம் தற்போது வரையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வெலிசற கடற்படைத் தளத்தில் இவை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனிநபர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை விரைவில் மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு விடுத்த உத்தரவிற்கு ஏற்ப அவை மீள ஒப்படைக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வருட காலப்பகுதிக்குள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரசியல்வாதிகள் உள்ளிட்ட வெவ்வேறு நபர்களுக்கு அதிகளவில் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கூடுதல் விசாரணையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
கடந்த சில வருடங்களில் 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதை பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு துப்பாக்கிகள் வழங்கியுள்ளமை தொடர்பில் கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன்மூலம் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை கண்டுபிடிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிகளை பெற்றுக்கொள்வதற்காக வெவ்வேறான நபர்கள் பொலிஸ் நிலையங்கள் ஊடாக, பொலிஸ் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட பொலிஸ் சான்றிதழ்களை வைத்து இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
மேலும், கடந்த அரசாங்கத்தின் போது சில அரசியல்வாதிகள் பாதுகாப்பு அமைச்சினூடாக 8-10 துப்பாக்கிகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அவற்றில் சில காணாமல் போயுள்ளதாகவும் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.