புறாக்களை தூதுவிட்டு கொள்ளையடித்த நபர்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புறாக்களைப் பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நகரத்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவரே பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளார்.
இவர் வீடுகளுக்குக் கொள்ளையடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் புறாக்களை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம்.
வீடுகளை நோட்டமிடும் மஞ்சுநாதன் இலக்கை அடைந்தவுடன் குறித்த வீட்டின் மீது இரண்டு புறாக்களை விடுவிப்பார்.
இவ்வாறு விடப்படும் புறாக்கள் வீட்டின் மேற்கூரை அல்லது பல்கனிக்கு சென்று அமர்ந்துகொள்ளும்.
அவ்வாறு அமரும் புறாக்களை அவ் வீட்டில் உள்ளவர்கள் கவனித்தால் மஞ்சுநாதன் அங்கு செல்வதில்லை.
ஒருவேளை புறாக்களை யாரும் நெருங்கவில்லையெனில் அந்த வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
யாருடைய வீடு பூட்டியிருக்கிறது என்று பார்த்து இம்புக் கம்பியொன்றைப் பயன்படுத்தி வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் பணத்தை குறிவைத்து கொள்ளையடித்துள்ளார்.
நகரம் முழுவதும் இதுவரையில் 50 கொள்ளைச் சம்பவங்களில் மஞ்சுநாதன் ஈடுபட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து கொள்ளையடித்த பொருட்கள் மீட்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.