இலங்கை

மிகப்பெரிய மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் அடங்க 80 பெட்டிகள் குறித்து ஆய்வு

பதினொரு வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கையை சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

2025 ஜனவரி 09 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச ஆகிய இரண்டு மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் மன்னாரில் ஊடகவியலாளர்களிடம் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட 27 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் பாலினம், வயது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கை சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

“கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஹேவகேயினால் பகுப்பாய்வு செய்யப்பட்ட 81 மனித எச்சங்களில் 27 மனித எச்சங்களுக்கான அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. வயது, பாலினம், இறப்புக்கான காரணம் போன்ற காரணங்களை உள்ளடக்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மிகுதி எச்சங்களுக்கான அறிக்கை ஆறு மாத காலத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.”

இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

சதொச மனித எலும்புக்கூடுகள் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது

ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அடங்கிய 80 பெட்டிகள் பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

“ஏற்கனவே இணங்கியமைக்கு அமைய அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது. 76 – 156 வரையான 80 பெட்டிகள் சட்ட வைத்திய அதிகாரியின் மேலதிக பகுப்பாய்விற்காக நீதிமன்றத்தால் கையளிக்கப்பட்டுள்ளன. இதுத் தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.”

எலும்புகளை பரிசோதித்ததன் பின்னர் மரணத்திற்கான காரணம், வயது, பாலினம், குற்றச் செயல்களுடன் ஏதாவது தொடர்புகள் உள்ளனவா, என யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி கந்தையா பிரணவன் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த சட்டத்தரணி, எலும்புக்கூடுகள் அடங்கிய எஞ்சிய 75 பெட்டிகள் ஜனவரி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் நீதிமன்றினால் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குற்றம் இடம்பெற் இடமாக கருதப்பட்டு மன்னார் சதொச மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச 190ஆவது நாள் அகழ்வு விசாரணையின்போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

மன்னார் சதொச புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட ஆறு எலும்புகளை ஆய்வு செய்த அமெரிக்காவின் மியாமியை தளமாகக் கொண்ட பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம் (Beta Analytic Inc.) அவை கி.பி.1404 -1635ற்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளை சேர்ந்தது என தீர்மானித்தது.

ஜூலை 2019 இல், அந்த தீர்மானத்தை கடுமையாக நிராகரித்த களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்லியல் முதுகலைப் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ, வெகுஜன புதைகுழியின் காலத்தைப் பற்றிய நம்பகமான தீர்மானத்திற்கு வரக்கூடிய வகையில், ஜூலை 2019 இல், மனித எலும்புகளுடன் தோண்டியெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்களில் புதிய விசாரணைகளை ஆரம்பித்தார்.

அப்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் சிலவற்றில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், ஒன்றாகக் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் எலும்புத் துண்டுகளும் மனித புதைகுழியில் காணப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.