தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்குச் செய்யக் கூடிய உதவி என்ன?… நியூசிலாந்து சிற்சபேசன்
அதிரடியான தேர்தல் முடிவுகளை வழங்கிய ஆண்டாகவே 2024 விடைபெற்றிருக்கின்றது. அதனுடைய தொடர்ச்சியாக, மேன்மேலும் அதிரடிகளைப் பிரசவிக்க தயாரான ஆண்டாகவே 2025 பிறந்திருக்கின்றது.
தேர்தலொன்றை எதிர்கொள்ளக்கூடிய திராணியுடனே ஆளும்தரப்புக் காணப்படுகின்றது. மறுவளத்தில், எதிர்த்தரப்பு நொந்து “நூடில்ஸாகி”விட்டது. அதனால், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள ஆளும்தரப்பு விரும்புகின்றது.
உள்ளூராட்சித் தேர்தல், சித்திரை வருடப்பிறப்புக்கு முன்னரேயே, வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்பின்னர் மாகாணசபைத் தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன.
அதற்கான தயார்ப்படுத்தல்களும் தெரிகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரேயே உள்ளூராட்சித்தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். தேர்தலை எதிர்கொள்வதற்குச் சாதகமான சூழல், அன்றைய ஆளும்தரப்புக்கு, இருக்கவில்லை. அதனால், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதற்கு நிதிப்பற்றாக்குறை என்னும் நொண்டிச்சாக்குச் சொல்லப்பட்டது. தேர்தல் நிறுத்தப்பட்டமை தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றம் சாட்டையைச் சுழற்றியமை மறக்கக்கூடியதல்ல.
ஆனால், மாகாணசபைத் தேர்தல் என்பது பெரும்பாலும் மறக்கப்பட்டேவிட்டது.
தேசிய மக்கள் சக்தியின் உந்துவிசையான ஜேவிபியின், மாகாணசபை தொடர்பான, நிலைப்பாடு ஊரறிந்த இரகசியமாகும். ஆனாலும், களநிலைமைகளுக்கு ஏற்ப ஜேவிபி “அடக்கி” வாசிக்கின்றது. அதனாலேயே, ஜேவிபியின் பொதுச்செயலாளர், மூத்த அமைச்சர் போன்றோர் உதிர்த்த “ஞானமொழி”களைப் பௌத்திரப்படுத்திக்கொண்டு, மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு தயாராகின்றது.
மேன்மேலும் தேர்தல் வெற்றிகளை வசப்படுத்துவது, அதனூடாகக் கிடைக்கக்கூடிய வலுவைப் பயன்படுத்தி, அரசியல்யாப்பு மாற்றங்களை மேற்கொள்வதே ஆளும்தரப்பின் நோக்கமாகக் கருதமுடிகின்றது. அப்படியான சூழலிலே, “தடாலடியான” செயற்பாடுகளைக்கூட மக்கள் ஆணையுடனே முன்னெடுப்பதாகச் சொல்லமுடியும். அதனை கேள்விக்கு உட்படுத்துவது கடினமாகலாம்.
அவ்வாறு ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்களிலே “மாகாணசபை”, “13வது திருத்தம்” போன்றவை உள்ளடக்கப்படலாம். அஃது, தமிழ்மக்களுக்கு உவப்பானதாக இல்லாமலும் ஆகலாம்.
ஆனால், தமிழ்த்தரப்பு அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தலை ஆரம்பித்திருப்பதாகக் கருதமுடியவில்லை.
“விடியவிடிய இராமாயணம், விடிந்தபின் இராமன் சீதைக்கு என்னமுறை” என்று கேட்பதுபோலவே தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளைக் காணமுடிகின்றது.
மீண்டுமொரு தடவை “ஒற்றுமை” சலசலப்பு ஆரம்பித்திருக்கின்றது.
“ஒற்றுமை” தொடர்பில் பேசுவதுகூடப் பொழுதுபோக்கு ஆகிவிட்டதோ என்ற சந்தேகமே வருகின்றது.
“ஒற்றுமை” என்னும் சொல்லை, தமிழ் அரசியல்வாதிகளின் அகராதியிலிருந்து முற்றிலுமாக அழிக்கவேண்டுமோ என நினைக்குமளவுக்கான அனுபவத்தை கடந்தகாலம் தந்துவிட்டது.
ஒருபானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பார்கள். 2024 சனாதிபதித் தேர்தலை எதிர்கொண்ட பாங்கு மட்டுமேயே “ஒற்றுமைக்கு” ஒப்பற்ற சாட்சியாகும்.
யுத்தம் முடிவடைந்த பின்னரான, கடந்த பதினைந்து ஆண்டுகளில், தமிழ் அரசியல்வாதிகளின் தள்ளாட்டம் கண்கூடானது.
அத்தகையதொரு சூழலிலே, சிவில் சமூகம் காத்திரமாகச் செயற்படவில்லை எனச் சுட்டுவிரல்கள் நீண்டன.
தமிழ் மக்கள் பேரவை, பி2பி போன்றவை சிவில் சமூகத்தின் ஆற்றல்வளத்தை அவ்வப்போது வெளிப்படுத்தின. ஆனாலும், “அற்பாயுசிலேயே” முடிந்தன.
இத்தகையதொரு பின்னணியிலேயே, தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான கருத்துருவாக்கத்திலே சிவில் சமூகம் ஈடுபட்டது.
தமிழ் பொதுவேட்பாளர் என்பது, சமூகமாகத் திரள்தல் என்னும் கருதுகோளை சிவில் சமூக முன்வைத்தது.
அதனால், “என்ன பயனைப் பெறலாம்” எனக் கேள்வி கேட்கப்பட்டது.
“உடனடிப்பயனை நோக்கி மட்டுமே எப்போதும் செயற்படமுடியாது” என்னும் நம்பிக்கை “கால்தூசி” யாக உதாசீனம் செய்யப்பட்டது.
மாங்கன்றுகளை வைக்கும்போது, உடனே பழம் கிடைக்காது எனக் கணக்குப் போடலாமா?.
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பது பள்ளிக்கூடப் புத்தகத்தில் எழுதுவதற்கு மட்டுமே என்னும் எண்ணம் சமூகத்தில் வேரூன்றிவிட்டதா?.
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதானால், நேரடியான பாதிப்பு தமிழ் அரசியல்வாதிகட்கு இருக்கவில்லை. அவர்களுடைய தனிப்பட்ட வெற்றிதோல்வியை, சனாதிபதித் தேர்தல் தீர்மானிப்பதில்லை.
அதனால், தமிழ் பொதுவேட்பாளரை கொள்கை நிலையிலாவது ஆதரித்திருக்கலாம்.
ஆகக்குறைந்தது, எந்தக் கருத்தையும் சொல்லாமல் அமைதிகாத்திருக்கலாம்.
மாறாக, தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் பொதுவேட்பாளரைத் தோற்கடிக்கப்போவதாக முழங்கினர்.
தனிமனித முனைப்பு (ஈகோ) தலைவிரித்தாடியது.
மிக அடிப்படையான சமூக “இங்கிதத்தைக்” கூட காணமுடியவில்லை.
இருந்தபோதிலும், தமிழ் வாக்காளர்கள் “இங்கிதமாகச்” செயற்பட்டனர். கருத்துமாறுபடுகளுக்கு அப்பால், ஒரு சமூகமாகத் திரள எத்தனித்தனர். அதனாலேயே, தமிழ் பொதுவேட்பாளரினால் கணிசமான வாக்குகளைப் பெறமுடிந்தது.
ஆனாலும்கூட, தமிழ் பொதுவேட்பாளர் முன்னெடுப்பு பல சச்சரவுகளை ஏற்படுத்தியது. சிவில் சமூகத்தினர் தொடர்ச்சியாகக் காயப்படுத்தப்பட்டனர்.
செய்தியை செய்தியாகக் கொண்டு செல்லவேண்டிய கடப்பாடு கொண்டோரின் பக்கச் சார்பான செயற்பாடுகள் உச்சம் தொட்டன. தனிமனிதமுனைப்புக் கொண்டோரின் பிம்பத்தை ஊதிப்பெருப்பிப்பதிலேயே முழுமையான கவனத்தைக் கொண்டிருந்தனர்.
இத்தகைய பின்னணியிலே, சிவில் சமூகத்தினர் ஒதுங்கிக் கொண்டனர்.
ஆனால், பாராளுமன்றத் தேர்தலிலே தெளிவான முடிவை மக்கள் எடுத்தனர். தமிழ் அரசியல்வாதிகளைப் பெருமளவில் புறந்தள்ளினர்.
சனநாயகத்தில் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்பார்கள்.
அந்தவகையிலே, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒவ்வொருவரும் இனிவரும்காலங்களில் தேர்தலொன்றிலே போட்டியிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும்.
சுடலை ஞானம் போல, தோல்வியிலே “ஒற்றுமை” பேச முற்படுகின்றோரும், மீண்டுமொரு தேர்தலிலே போட்டியிடுகின்ற எண்ணத்தை அறவே கைவிடவேண்டும்.
தற்போது தமிழ் அரசியல்வாதிகள் என்று சொல்லிக்கொள்வோர் அல்லது அவ்வாறு தம்மை நினைத்துக்கொள்வோர் அரசியல் பரப்பிலிருந்து சுவடு தெரியாமல் விலகிக்கொள்ளவேண்டும்.
அதுவே தமிழ் மக்களுக்குச் செய்யக் கூடிய மிகப்பெரிய உதவியாகும்.