முச்சந்தி
ஈரான் எதிர்பாராத பாரிய தோல்வி: கோலான் குன்றில் இஸ்ரேல் ஆதிக்கம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
நாடுகளிடையே எல்லைப் போர்கள் தொடங்குவதற்கும், பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் புவியியல் மற்றும் வளங்கள் எப்போதும் முக்கிய காரணங்களாகும்.
இஸ்ரேல் நாடு பெரும்பாலும் கடலோர சமவெளியில் உள்ளது. அதன் மக்கள் தொகையில் எழுபது வீதமானோர் அங்கு தான் வாழ்கின்றனர். விமான நிலையம் மற்றும் அதன் தலைநகரம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் அங்கு அமைந்துள்ளன.
மேற்குக் கரையும் கோலான் குன்றும்:
மேற்குக் கரையானது (West Bank) இந்த கடற்கரை சமவெளியைக் கண்டும் காணாத மலை முகடுகளைக் கொண்டுள்ளது. மேற்குக் கரையில் ஒரு விரோதமான அமைப்பு இஸ்ரேலின் மீது ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்லாமல், அது இஸ்ரேல் அரசை முற்றிலுமாக அழித்துவிடும் என்பதே மொசாட்டின் ஊகமாகும்.
மேற்குக் கரையின் மலைகளே இஸ்ரேலின் முப்பது வீத குடி தண்ணீரை வழங்குகின்றன. மேலும், கிழக்கிலிருந்து தாக்குதலைத் தடுக்க மேற்குக் கரை ஒரு முக்கியமான இராணுவக் கட்டுப்பாட்டுப் புள்ளியாகும்.
இந்த உயரமான நிலத்திலிருந்து, இஸ்ரேலிய இராணுவம் தரை முன்னேற்றங்களை நிறுத்துவது மட்டுமல்லாமல், முக்கிய இஸ்ரேலிய நகரங்களுக்கு செல்லும் வழியில் எதிரி விமானங்களையும் இடைமறிக்க முடியும்.
தற்போது சிரியாவில் அசாத் ஆட்சி வீழ்ச்சியுடன் கோலான் குன்றுகளில் இஸ்ரேல் தனது பிடியை உறுதிப்படுத்துவதற்கு விரைவாக நகர்ந்ததற்கும் இதுவே காரணமாகும். எந்தவொரு சமாதான ஒப்பந்தம் வந்தாலும் இஸ்ரேல் ஒருபோதும் மேற்குக் கரை, கோலான் குன்றுகளை மனமுவந்து விட்டுக் கொடுக்காது என்பதே உண்மையாகும்.
அதேவேளை காசா பகுதியானது இஸ்ரேலிய எல்லைக்குள் முற்றுகையிடப்பட்டு, கடல் வழியாக மட்டுமே தொடர்பு உள்ளது. இரு வருடமாக போர் நடைபெற்று வரும் காசா மூலோபாய முக்கியத்துவம் இல்லாததால், அங்கிருந்து இஸ்ரேலிய வெளியேறுவது சாத்தியமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் வாக்குகளும் எதிர்ப்புகளும் அங்கீகாரமும் இஸ்ரேலை மேற்குக் கரையில் இருந்து வெளியேற அழுத்தம் கொடுக்கும் என்ற கருத்து அசாத்தியமானதாகவே உள்ளது.
இதனாலேயே மேற்குக் கரையின் கட்டுப்பாடும், கோலான் குன்றுகளின் ஆதிக்கமும் இஸ்ரேலுக்கு இருக்க வேண்டியுள்ளது.
ஈரான் எதிர்பாராத தோல்வி:
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கும் போது, அது அரபுலகின் ஆட்சி மாற்றங்களுக்கும், இராணுவ சரிவுக்கு வழிவகுக்கும், என்று ஈரான் ஒருபோதும் எதிர்பார்த்திருக்காது.
அதன்பின் லெபனானில் ஹிஸ்புல்லா பாரியளவில் அழிக்கப்பட்டது, ஈரானுக்கு பெரிய அடியாகும். ஏனென்றால் அவர்களின் எதிரிகள் கூட தங்கள் போராளிகள் நன்கு ஆயுதம் ஏந்தியவர்கள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட முடியும் என்று நம்பினர். அதற்கு பதிலாக, அதன் முழு கட்டளையும் அதன் தலைவர் உட்பட பலரும் அழிக்கப்பட்டனர்.
அசாத் இப்போது சிரியாவிலிருந்து வெளியேறிவிட்டார். மேலும் இஸ்ரேல் கோலான் மலைகளை அதிகமாக கைப்பற்றிக்கொண்டு சிரிய இராணுவ வளங்களையும், இரசாயன ஆயுதங்களை அழிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
அதேவேளை யேமனில் உள்ள ஹவுத்திகளின் ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்தி, செங்கடல்
கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை முறியடித்துள்ளனர்.
காசாவில் பேரழிவு:
தற்போது காசாவில் இருந்து இஸ்ரேல் எந்த நேரத்தில் வெளியேறும் என்று தெரியவில்லை. இஸ்ரலின் எதிரிகள் அவர்களைத் தாக்கும் ஒவ்வொரு முறையும், அவர்கள் மிகவும் மோசமாகத் தாக்கப்படுகிறார்கள். அத்துடன் அவர்கள் பெற நினைத்ததை விட அதிகமாக இழக்கிறார்கள் என்பதை வரலாறு சொல்கிறது.
காசாவில் மக்கள் பேரழிவிற்கு ஆளாகியிருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் ஆட்சி செய்வதாகக் கருதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
1948 ஆம் ஆண்டில் இஸ்ரேல் உருவானதன் பின்னர், பாலஸ்தீன அரசை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக லட்சக்கணக்கான அரேபியர்கள் ‘பாலஸ்தீன’ அகதிகளாக மாறியதும் வரலாறாகும்.
1967 இல், ஒருங்கிணைந்த அரபு அரசுகள் காசா, மேற்குக் கரை, கோலன் மலைப் பகுதிகளை இஸ்ரேலிடம் இழந்தனர். தற்போது சிரியாவில் 2024இல் மீண்டும் அதே நடந்தது. இஸ்ரேல் உண்மையிலேயே தனது ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
சிரிய ராணுவ இலக்குகள் குறிவைப்பு:
சிரியா முழுவதும் உள்ள இலக்குகள் மீது அதன் போர் விமானங்கள் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கூறியுள்ளது.
சிரிய அரசாங்கம் கிளர்ச்சியாளர்களால் தூக்கியெறியப்பட்டதிலிருந்து இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு (SOHR) கூறியது.
ஆயினும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இஸ்ரேல் அரசை அச்சுறுத்தும் மூலோபாய திறன்களை அழிப்பதை இஸ்ரேலிய படையினரின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடராக சிரியாவின் கடற்படை, இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்நாட்டு இராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நூற்றுக்கணக்கான சிரியாவின் கடற்படை மற்றும் பிற இராணுவ சொத்துக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
லதாகியா மற்றும் எல் பெய்டா விரிகுடாவின் துறைமுகப் பகுதியில் இஸ்ரேலிய ஏவுகணைக் கப்பல்கள் அசாத்தின் படைகளுக்குச் சொந்தமான கடற்படைக் கப்பல்களை அழித்தன. அவை பல நூறு மைல்கள் வரை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இரசாயன ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கைகளில் கிடைத்தால், அவற்றை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்ற காரணத்தினால், அவை கிளர்ச்சியாளர்களின் கைகளில் கிடைப்பதை தடுக்கும் நோக்கில் இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது.
சிரிய கடற்படையை அழிக்க முயற்சி:
இத்துடன் சிரிய கடற்படையை அழிக்கும் நடவடிக்கை பெரும் வெற்றி பெற்றதாகவும் இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது. சிரிய தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், டார்டஸ் மற்றும் பால்மைராவில் உள்ள விமானநிலையங்கள், இராணுவ வாகனங்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஆயுத தயாரிப்பு தளங்கள் உட்பட – பரந்த அளவிலான இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிபய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.