இலங்கை

தனி அறையில் இருந்து பரீட்சை எழுதிய நாமல் பல்கலைக்கழகங்களில் கடினமாக படித்து பட்டம் பெற்றவர்களின் கல்வித் தகைமையை கேள்விக்குள்ளாக்குகிறார்

தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்திட்டங்களை முழுமையாக மீறி தனி அறையில் இருந்து சட்டமாணி பரீட்சை எழுதிய நாமல் ராஜபக்ஷ பல்கலைக்கழகங்களில் கடினமாக படித்து பட்டம் பெற்றவர்களின் கல்வித் தகைமையை கேள்விக்குள்ளாக்குகிறார்.
முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில்  நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாடசாலை மாணவர்களின் கல்வி தொடர்பான குறை நிரப்பு பிரேரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகைமை பற்றி பேசப்படுவது சிறந்ததொரு மாற்றமாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கல்வித் தகைமை பற்றி ஏன் பேசப்படுவதில்லை என்று பலர் கேள்வியெழுப்புகிறார்கள்.
நாமல் ராஜபக்ஷவுடன் சட்டக்கல்லூரியில் கல்வி கற்றவர் வெளிநாட்டில் இருந்து இவ்விடயம் குறித்து பேசியுள்ளார். நாமல் ராஜபக்ஷ இந்தியாவில் பெற்றுக் கொள்ள ஏதேனுமொரு கல்விச் சான்றிதழை பயன்படுத்தியே சட்டக்கல்லூரிக்கு தேர்வாகியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக அறையில் இருந்து 2010 ஆம் ஆண்டு சட்டமாணி இறுதி பரீட்சையை எழுதியதாகவும் அவருக்கு வினாத்தாள் முன்கூட்டியதாகவும் சுவிஸ்லாந்தில் அரசியல் அடைக்கலம் பெற்றுள்ள துசார என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ முறையற்ற வகையில் பரீட்சைக்கு தோற்றியமை தொடர்பில் துசார என்ற நபர் முறைப்பாடளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏனெனில் நாமல் ராஜபக்ஷவின் தந்தை அப்போதைய ஜனாதிபதி.
இதன் பின்னர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டத்தின் பின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் உயர் பீடம் நாமல் ராஜபக்ஷவின் முதல் பட்டத்தை கேள்விக்குள்ளாக்கி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இதுவே வரலாறு.
தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்தை முழுமையாக மீறியே நாமல் ராஜபக்ஷ சட்டமாணி பரீட்சை எழுதினார். முறையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத்தில் கடினமாக படித்து பட்டம் பெற்றவர்களை இவர் இன்று கேள்வியெழுப்புகிறார் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.