முச்சந்தி

மாகாண சபைகள் பற்றிய தனிநபா் பிரேரணை: நடந்தது என்ன?

தனிநபர் பிரேரணையின் இரண்டாம் வாசிப்புக்கு வாக்கெடுப்போ விவாதமோ தேவையில்லை. எந்த ஒரு சட்டமூலத்துக்கும் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதம் அல்லது வாக்கெடுப்பு என்று எவரேனும் கேட்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு அனுமதிக்கப்படலாம்.

முக்கியமான அதுவும் அரசியலமைப்புச் சட்டமூலங்களுக்கு விவாதமும் வாக்கெடுப்பும் நிச்சயமாக அவசியமானது. ஆனால் தனிநபர் பிரேரணையின் இரண்டாம் வாசிப்புக்கு விவாதம் வாக்கெடுப்பு கோரப்படுவதில்லை.

ஆகவே விவாதம் இன்றி வாக்கெடுப்பும் இல்லாமல் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம் என்று தலைப்பிட்டு வெற்றி என்ற தொனியில் செய்தி எழுதப்பட்டமைதான் பெரும் வேடிக்கை.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் பிரகாரம் சட்ட மூலம் அல்லது தனிநபர் பிரேரணை ஆகியவற்றின் இரண்டாம் வாசிப்பு சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாம் வாசிப்புக்கு அனுமதிப்பது வழமை.

ஆனால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம் என்ற அர்த்தத்தில் செய்தி எழுத முடியாது. செய்தி மொழியில் அதனை சமர்ப்பிப்பு என்று தான் எழுத வேண்டும்.

தனிநபர் பிரேரணைக்கான நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 52 – 53 பகுதிகளின் 10 ஆவது சரத்தில், இரண்டாம் வாசிப்பு சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாவது வாசிப்பின் பின்னர் 72 ஆம் பிரிவுக்கு அமைவாக நிறைவேற்றப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விதி, சட்டவாக்கக் குழு சமர்ப்பிக்கும் இரண்டாம் வாசிப்புக்கும் பொருந்தும். அதன் ஆங்கிலப் பதம் இப்படித்தான் வருகின்றது. (After the Bill has been reported to Parliament, the Bill shall be read a Third time and passed in terms of Standing Order 72)

ஆகவே சுமந்திரன் சமர்ப்பித்த இரண்டாம் வாசிப்பு மூன்றாவது வாசிப்பாக மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். இதுதான் உண்மை. நிறைவேற்றம் என்று தலைப்புச் செய்தி எழுதியன் மூலம், நாடாளுமன்ற செய்தி எழுதும் மரபும் பண்பும் அவமதிக்கப்பட்டிருக்கிறது என்றே பொருள்கொள்ள வேண்டும்.

அதேவேளை எதிர்வரும் வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள மூன்றாம் வாசிப்பு சுமந்திரனின் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்படமாட்டாது.

அது சட்டவாக்கக் குழுவின் சட்டமூலமாகவே கருதப்படும். ஆகவே அது சம்மந்தப்பட்ட அமைச்சரே மூன்றாவது வாசிப்பை சபையில் சமர்ப்பிப்பார் என்பதையும் இங்கே தெரிந்துகொள்ள வேண்டும்.

சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த தனிநபர் பிரேரணை 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது அதனால் கைவிடப்பட்டிருந்தது.

எனினும் நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் எந்த ஒரு சட்டமூலத்துக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் அந்த வழக்கு பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டும். ஆறு மாதங்கள் கடந்தும் வழக்கு பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லையானால் குறித்த சட்டமூலத்தை மீண்டும் இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.

அதன் பிரகாரமே குறித்த தனிநபர் பிரேரணையை சுமந்திரன் கடந்த செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்திருக்கிறார். சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது பற்றி அவர் பேசியிருக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவும் இதற்கு இருந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் ரணில் யாழ்ப்பாணத்துக்கு சென்றபோது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில பகுதிகள் அமுல்படுத்தப்படும் என்று உறுதியளித்ததாக சுமந்திரன் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

சுமந்திரனிடமும் மாவை சேனாதிராஜாவிடமும் ரணில் விக்கிரமசிங்க 13 ஐ நடைமுறைப்படுத்துவது பற்றிய தனது உத்தரவாத்தை ஆங்கிலத்தில் இரண்டு பக்கத்தில் கையளித்திருக்கிறார்.

இங்கே 13 ஐ நடைமுறைப்படுத்துவதில் எவருக்கும் பிரச்சினை இல்லை. 2012 ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரையான ஜெனிவா மனித உரிமைச் சபையின் இலங்கை பற்றிய தீர்மானங்களில் 13 அரசியல் தீர்வுக்கான ஆரம்பமாக அமைய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

அத்துடன் 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பிரதான கடமை. ஒவ்வொரு சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு.

ஆனால் அதனை தனி ஒருவராக ரணில் விக்கிரமசிங்கவுடன் மாத்திரம் பேசிக் கொண்டு முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்கம் பற்றியே கேள்விகள் எழுகின்றன. .

இப் பின்னணியிலேதான் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம் என்ற தலைப்பில் குறித்த மின் இதழ் செய்தி வெளியிட்டிருக்கின்றது என்ற சந்தேகம் எழுத்தது.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளைக் கடந்து தனியொருவராக தமிழ்ச் சமூகத்தின் அரசியல் உரிமைகள் பற்றிப் பேசுவதானது, எண்பது வருடகால இனப்பிரச்சினையின் தரத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைகின்றது. உரிமை பற்றிய பேச்சு என்பது அதுவும் ஜனநாயகச் சூழலில் ஒரு கூட்டுச் செயற்பாடு.

சுமந்திரன் அந்தக் கூட்டுச் செயற்பாட்டை 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதியேற்ற நாளில் இருந்தே வெட்டியோட ஆரம்பித்துவிட்டார்.

அதன் உச்சக் கட்டமே இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம் என்ற செய்தியின் தலைப்பைக் காணமுடியும். அத்தோடு தமிழரசுக் கட்சியின் தற்போதைய அவல நிலையும் உதாரணமாகிறது.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டம் பற்றிய விளக்கம் சாதாரண பொது மக்களுக்கும், ஏன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் மற்றும் செய்தியாளர்கள் பலருக்கும் தெரிவதில்லை. இப் பலவீனங்களின் அடிப்படையில் தனிநபர் செயற்பாடுகள் அமைகின்றன என்று சொன்னால் அதில் மாற்றுக் கருத்தில்லை.

நாடாளுமன்ற விதிகளில் சட்டமூலங்கள் நிறைவேற்றம் என்பதற்கு ஆங்கிலப் பதம் (Executed) என்றுதான் உண்டு. அதாவது மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டு சபாநாயகரும் கையெழுத்திட்ட பின்னரே குறித்த சட்டமூலம் நிறைவேற்றம் என்று செய்தி மொழியில் எழுத வேண்டும்.

மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டாலும் அதனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றுதான் தமிழில் செய்தி எழுத வேண்டும்.

சபாநாயகர் கையொப்பமிட்ட பின்னரே எந்த ஒரு சட்டமூலமும் நிறைவேற்றம் (Executed) என்று அர்த்தப்படும்.

அ.நிக்ஸன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.