திராவிடம், தமிழ் தேசியம் வேறு வேறு அல்ல; சொல்கிறார் திருமா!
திராவிடம், தமிழ் தேசியம் வேறு வேறு அல்ல’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் நடந்த நிகழ்ச்சியில், திருமாவளவன் பேசியதாவது: திராவிடம், தமிழ் தேசியம் வேறு வேறு என்று சொல்லில் வேறுபாடு இருக்கலாம். அந்த திராவிடம் தான் ஹிந்தியை எதிர்த்தது.
ஹிந்தி எதிர்ப்பு என்பது தமிழர்களுக்காக தானே. தமிழ் மொழியை பாதுகாப்பதற்கான போராட்டம் தானே. திராவிட இயக்கம் தானே ஹிந்தி திணிப்பை எதிர்த்தது. ஹிந்தி திணிப்பை எதிர்ப்பது தமிழ் தேசியத்திற்கு ஆதரவானதா? எதிர்ப்பானதா? மாநில உரிமைகளை கோரியது திராவிட இயக்கங்கள் தானே.
மாநில உரிமை கோருவது தமிழ் தேசியத்திற்கு ஆதரவானதா? எதிர்ப்பானதா? திராவிடம் தமிழ் தேசியத்தின் வேர் என்பதை நிலைநாட்ட உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது. திராவிடம் என்ற ஒரு அரசியல் உருவான காரணத்தினால் தான், ஹிந்தி இந்த மண்ணிற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. திராவிடம் என்பது நெடுச்சுவராக இருந்தது.
முதல்வர் பதவி என்பது அதிகாரம் இல்லாத அலங்கார பதவி. சர்வதேச பிரச்னைகளில் ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும் என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறங்கிவிட முடியும். அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதனால் தான் அவதூறு பரப்புகின்றனர். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.