போராட்டத்தை கைவிட்ட இம்ரான் கட்சி; இயல்பு நிலைக்கு திரும்பியது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கட்சியினரின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, அங்கு நான்கு நாட்களாக நிலவிய பதற்றம் முடிவுக்கு வந்தது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதமராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாக்., – தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான்மீது, 200க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதில், ஒரு சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அரசுக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு வந்த இம்ரான், நவ., 24ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த தன் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார். இதன்படி, தலைநகர் இஸ்லாமாபாதை நோக்கி அவரின் மனைவி புஷ்ரா பீபி தலைமையில் இம்ரான் கட்சி தொண்டர்கள் கடந்த 24ல் பேரணியாக புறப்பட்டனர்.
அவர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருந்து மேலும் பல தொண்டர்கள் இஸ்லாமாபாத் விரைந்தனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறியதில் இரு போலீசார், நான்கு துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, அதிபர், பிரதமர் அலுவலகங்கள் உள்ள இஸ்லாமாபாதின் மைய பகுதியான டி – சவுக்கை போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முற்றுகையிட்டனர். அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், இம்ரான் கானை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு இம்ரான் மனைவி புஷ்ரா பீவி மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் முதல்வர் அலி அமீன் காந்தாபூர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதையடுத்து, அங்கு வந்த பாதுகாப்புப் படையினர், போராட்டக்களத்தில் இருந்து அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இருப்பினும், சம்பவ இடத்தில் இருந்து புஷ்ரா பீபி மற்றும் அலி அமீன் ஆகியோர் தப்பினர். இந்நிலையில், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் சமூக வலைதள பதிவில், ‘அமைதியான முறையில் போராட்டம் நடத்திய நிலையில், அரசு வன்முறையை கட்டவிழ்த்து அடக்குமுறையை மேற்கொண்டது. இதில், எங்கள் கட்சியின் நுாற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். அரசின் மிருகத்தனத்தால், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை கருத்தில் வைத்து எங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலை உட்பட அடைக்கப்பட்ட முக்கிய சாலைகள் திறந்துவிடப்பட்டன. இருப்பினும், தலைநகரின் டி சவுக் பகுதியில் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சன்னி – ஷியா மோதல் 10 பேர் பலி
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் குராராம் மாவட்டத்தில் சன்னி – ஷியா முஸ்லிம்களிடையே கடந்த ஜூலையில் நிலத்தகராறு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 21ம் தேதி துவங்கி மூன்று நாட்களாக நடந்த வன்முறை சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நடந்த பேச்சில், அடுத்த ஏழு நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், போர் நிறுத்த முடிவை மீறி இருதரப்பினரும் நேற்று முன்தினம் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கோசாகாரி, மடாசாநகர், குஞ்ச் அலிஜாய் பகுதியில் நடந்த மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தகவலை கைபர் பக்துன்குவா மாகாண போலீசார் உறுதிப்படுத்தினர்.