பைடனுக்குப் பதில் வேறொரு வேட்பாளரா?: அமெரிக்க தேர்தல் குறித்து வெளியான தகவல்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரைக் களமிறக்கத் தங்களுக்கு எண்ணம் இல்லை என்று ஜனநாயகக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
குடியரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்புடனான விவாதத்தில் பைடன் தடுமாறினார். அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 81 வயது பைடனுக்குப் பதிலாக இளம் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குமாறு சிலர் குரல் எழுப்பினர்.
அதை ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மறுத்துள்ளனர்.
“சில மோசமான விவாதங்கள் இடம்பெறுவதுண்டு,” என்று என்பிசியுடன் நடைபெற்ற நேர்காணலில் ஜார்ஜியா மாநில செனட்டரான ஜனநாயகக் கட்சியின் ராஃபாயெல் வார்னொக் கூறினார்.
“டோனல்ட் டிரம்ப், தமக்கு அல்லது தம்மைப் போன்றவர்களைத் தவிர வேறு யாருக்காக முன்னின்றிருக்கிறார் என்பதை சிந்திக்கவேண்டும். நான் ஜோ பைடன் பக்கம்தான் நிற்கிறேன். நவம்பரில் அவர் வெற்றிபெறுவதை உறுதிசெய்வது எங்கள் பொறுப்பாகும்,” என்றார் வார்னொக். திரு பைடனுக்குப் பதிலாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று கருதப்படும் சிலரில் வார்னொக்கும் ஒருவர்.
இதற்கிடையே, முன்னாள் ஜனாதிபதி என்ற முறையில் 78 வயது டிரம்ப்மீது வழக்கு தொடர முடியாதா என்பதைத் தெரிவிக்கும் தீர்ப்பு நேற்று திங்கட்கிழமையன்று (ஜூலை 1) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்ற திரு டிரம்ப் முயற்சி செய்தார் என்று அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2024 தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு அந்த வழக்கைத் தொடரமுடியுமா என்பதில் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ள தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
“வருங்காலத்துக்கான விதிமுறையை நாங்கள் எழுதுகிறோம்,” என்று டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட நீல் கொர்சுக் என்ற நீதிபதி கூறினார்.
இந்நிலையில், இந்திய வம்சாவளி அமெரிக்கரான டாக்டர் சம்பத் ஷிவாங்கி, அமெரிக்காவின் மில்வாவ்க்கி நகரில் இம்மாதம் நடைபெறவுள்ள குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கான அதிகாரபூர்வ பேராளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டாக்டர் ஷிவாங்கி, அந்த மாநாட்டில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக டிரம்ப்பை அதிகாரபூர்வமாக முன்மொழிவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.