தமிழரின் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டாம்; ஜனாதிபதியிடம் வீரவன்சவின் கட்சி வலியுறுத்து
பிரிவினைவாத நோக்கங்களை நிறைவேற்ற சில தரப்பு முயற்சிகளை முன்னெடுக்கின்றது. இதற்கு ஒருபோதும் ஜனாதிபதி இடமளிக்கக் கூடாது என்று விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் தேசிய சுதந்திர முன்னணியால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவே இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஒருபோதும் இனவாதம் மதவாதத்திற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி அடிக்கடி கூறி வந்தார். அத்துடன் இந்த மக்கள் ஆணை இனவாதம் மற்றும் பிரிவினை வாதத்திற்கு எதிரானது. சுமந்திரனை வீட்டுக்கு அனுப்பியதன் ஊடாக அது உறுதியாகியுள்ளது. அடிப்படைவாதிகள் சிலர் கடைசிக் கட்ட வாக்கிலேயே வந்துள்ளனர். இந்நிலையில் இனவாதம், அடிப்படைவாதத்திற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இதன்மூலம் பிரிவினை வாதத்திற்கு இடமளிக்கப்படாது என்று நம்புகின்றோம்.
இந்நிலையில் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து உடனடியாக தமிழ் பிரிவினைவாத நோக்கங்களை செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 13 ஆவது திருத்தத்தை செயற்படுத்தல், மாகாண சபை தேர்தலை நடத்துதல், வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த விகாரை அபிவிருத்திகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மக்கள் ஆணையை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இது இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான ஆணையாகும். இதனை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறான பிரிவினை வாத நோக்கங்களுக்கு அடிபணிந்துவிட வேண்டாம் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். ஆனால் சில சில குழுக்களை பயன்படுத்தி பிரிவினைவாத நோக்கங்களை செயற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இனவாதம், மதவாதம், பிரிவினை வாதத்தால் இழந்தவை போதும். இனினும் அதற்கு இடமளிக்கக் கூடாது. மக்கள் ஆணையை இதற்கு எதிராக பயன்படுத்துவதென்றால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கும்.