அர்ச்சுனா கற்றுக்கொள்ள வேண்டியது!
இலங்கைத்தீவின் நாடாளுமன்றம் 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவைச் சட்டமன்றமாகும். இது பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தன்மையைக் கொண்டது.
சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார் என்பது மரபு.
1972 மார்ச் 22 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து முற்று முழுதான இறைமை கொண்ட நாடாகியது. அதாவது குடியரசானது. அதனையடுத்து பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது.
இதற்கு 168 பேர் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரசுப் பேரவை கலைக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை மற்றும் மரபுகள் சம்பிரதாயங்கள் ஆகியவற்றைப் பேணும் வகையில் நிலையியற் கட்டளைச் சட்டமும் உண்டு. ஜனாதிபதி, பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நிரந்தரமான இடத்தில் ஆசனங்கள்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். ஏனைய உறுப்பினர்களின் ஆசன இடங்கள் அவ்வப்போது மாறுபடும்.
ஒரு உறுப்பினர் இன்னுமொரு உறுப்பினரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கலாம். ஆனால் குறித்த உறுப்பினர் உரையாற்றும் நேரம் வரும்போது அவருக்குரிய ஆசனத்தில் இருக்க வேண்டும். அந்த ஆசனத்துக்குரிய ஒலிவாங்கியில் தான் அந்த உறுப்பினர் பேசவும் வேண்டும்.
ஆக வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் நடைபெறும் அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாத்தின்போது மாத்திரம் எந்த ஒரு உறுப்பினரும் வேறு ஆசனங்களில் இருந்து உரையாற்ற முடியும்.
ஆகவே இந்த மரபுசார்ந்த நடைமுறைகள் உறுப்பினர்களுக்குரிய ஒழுக்கங்கள். மற்றும் சிறப்புரிமை என்பது விசேடமானது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எந்த விடயத்தையும் துணிந்து பேசலாம். சுட்டிக்காட்டலாம்.
ஆனால் தகவல்கள் தவறாக இருக்கக்கூடாது. தகவல்கள் தவறு என்று வேறு யாராவது ஒரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சிஜனை எழுப்பினால் குறித்த அந்த உரையின் சில பகுதிகள் ஹன்சாட் பதிவுப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்குவார்.
ஆகவே நாடாளுமன்ற நிலையியற் கட்டளை விதிகள் அவற்றின் கீழ் உள்ள நடைமுறைகள், விவாதம் மற்றும் சபையினுள் உறுப்பினர்களது நடத்தை என்பன சீரமைக்கப்பட்டுள்ளன.
நிலையியற் கட்டளைகளின் பிரதான நோக்கமானது, நாடாளுமன்றத்தின் ஒழுங்கமைதியுடைய, காத்திரபூர்வமான செயற்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை வரையறுப்பதாகும்
நிலையியற் கட்டளைகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் முக்கியமான மூல ஆதார ஏடாகவும் மற்றும் விவாதங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பனவாகவும், பரிசீலனையின் பின்பு தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றன.
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் – உரிமைகளை வழங்க மறுக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் அதன் கொள்கைத் தீர்மானங்களில் தமிழர்கள் பங்குகொள்ளக்கூடிய ஏற்பாடுகள் இந்த அரசியல் யாப்பில் இல்லை என்பதும் பகிரங்கமானதுதான்.
ஆனால் நாடாளுமன்றம் என்பது ஒரு ‘அரச சபை’ அதற்குரிய ‘மாண்புகள்’ ‘மரபுகள்’ பேணப்பட வேண்டும். எந்த ஒரு எதிர்க் கருத்துள்ள நாடாளுமன்றத்திற்குச் சென்றாலும் அங்குள்ள மரபுகளை பேண வேண்டியது கட்டாயம். அது ஒரு அரசியல் பண்புடன் கூடிய நாகரிகம்.
எதிர்த்தரப்பு உறுப்பினர்களுடன் வாதிடும்போதுகூட நாகரிகம் உண்டு. வார்த்தைகள் ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஒருவர் சபைக்குச் சமூகமளிக்காத நேரத்தில் அவரைப் பற்றிப் பேசுவதுகூட நாடாளுமன்ற மரபல்ல. இவ்வாறானதொரு கட்டமைப்பு உள்ள நிலையில் புதிதாகத் தெரிவான உறுப்பினர் அர்ச்சுனா 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு கூடியபோது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
அது முதலாவது அமர்வுதான். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட முன்னரே ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரைக்காக முதலாவது அமர்வு கூடிய முறையும் கேள்விக்குரியதுதான்.
ஆனாலும் மரபு பற்றிய புரிதல் என்பது மிக முக்கியமானது. ‘அரச சபை’ என்றால் நிச்சியமாக ஆசன ஒதுக்கீடுகள் இருக்கும் அதுவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் பிரத்தியேகமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அதுவும் அனுபவமுள்ள நாடாளுமன்ற படைக்கல உதவி சேவிதர்கள் அது பற்றி விளக்கமளித்தபோதும் அதனை மறுத்துரைத்த அந்த உறுப்பினர், அதற்கு வழங்கிய விளக்கம் அரசியல் பண்பல்ல. பல மூத்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மாண்புக்கு மாறாகச் செயற்பட்டிருக்கின்றனர் என்பது வேறு.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்டு இன்றுவரை அரசியல் விடுதலை கோரி மெதுமெதுவாகச் சிதைவடைந்து வரும் ஒரு சமூகத்தின் புதிய பிரதிநிதியாக சபைக்குள் வந்த ஒரு புதிய உறுப்பினர் அநாகரிகமாக நடந்துகொள்வது அச் சமூகத்தை மேலும் தலைகுனிய வைக்கிறது.
1983 ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சட்ட சபைகள் மற்றும் 1948 இன் பின்னரான நாடாளுமன்றங்களில் மாபெரும் தமிழ் சட்ட மேதைகள் உறுப்பினர்களாக இருந்த இடத்தில் சில தமிழ் உறுப்பனர்கள் நடந்துகொள்ளும் முறை அரசியல் பண்பல்ல.
2004 ஆம் ஆண்டு ஈழவேந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தனது எதிர்க்கட்சி ஆசனத்தை விட்டு அரச தரப்பு ஆசனங்களிலும் மாறி அமர்ந்த கதைகள் உண்டு. ஆனால் ஈழவேந்தனை அறிவுசார் உறுப்பினராக ஏனைய சிங்கள உறுப்பினர்கள் மதிப்புக் கொடுத்திருந்தனர்.
ஈழவேந்தன் வயது மூப்பினால் அவ்வாறு செயற்படுகிறார் என்ற வாதங்கள் அன்று இருந்தன. அப்போது சபாநாயகராக இருந்த வி.ஜே.மு லொக்குபண்டார ஈழவேந்தனின் ஆங்கில மொழி உரைகளை செவிமடுத்து அதற்கு மேலும் பொருள் விளக்கம் கேட்டதையும் மறுப்பதற்கில்லை.
நாடாளுமன்றத்தில் வரப்பிரசாதங்கள் உண்டு. சிறப்புரிமைகள் உண்டு என்பதற்காக ஒவ்வொரு உறுப்பினர்களும் தமக்கு வாக்களித்த மக்களின் சுயமரியாதையை அவமதிக்க முடியாது.
அதுவும் புதிய தமிழ் உறுப்பினர்களின் செயற்பாடுகள் முற்போக்கான மற்றும் அரசியல் அபிலாஷை நோக்கில் இயங்க வேண்டியது அவசியமானது. இது ஒவ்வொரு தமிழ் உறுப்பினர்களுக்கும் சமர்ப்பணம்.