சினிமா

அசுரன்!.. திரைப்படம் – எனது பார்வையில். — -சினிமாப்பிரியன்.

பிரித்தானியா இந்தியாவைவிட்டுப் போன சில ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற ஆள்பவன் ஆளப்படுவன் கதையைக் கொண்ட படந்தான் இது .

இதைப்போல பல படங்கள் வந்துவிட்டன.இன்னமும் கிராமங்களின் சாயலைக் கடந்து தலித்தையம் கடந்து மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தின் வன்முறை கலந்த அடக்குமறை தாழ்த்தப்பட்டோர் மீது இருந்து வருகின்றது.

இக்கதை சாதியத்தைத் தொடாமல் நிலப் பிரச்சினை தொடர்பான கதை .கதை வேறு வடிவத்தில் இருந்தாலும் சாதிய அடக்குமுறைக்கு கொஞ்சமும் குறைவில்லாது அதே வேளை வழமையான திரைப்படக் கதை சொல்லும் பாணியை கொஞ்சம் விட்டு விலகி பார்ப்பவரை படத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மையை உருவாக்கியுள்ளது.

கதைக்களமும் கதை மாந்தர்களும் ஒன்றுக்கு ஒன்று பொருந்தமாக இருக்கின்றன -இருக்கின்றனர்.

தனுசின் நடிப்பில் பாத்திரத்திற்கேற்ற தோற்ற வெளிபாட்டு நடிப்பும் அதனை இயல்பாக வெளிக் கொணர்ந்தமையும் சிறப்புத்தான். அவரின் உருவம் குறிப்பாக அவரின் கன்னங்கள் பாத்திரப் படைப்புக்கு கச்சிதமாக ஒத்துப் போகின்றது.

ஒரு பாத்திர அமைப்புக்கு ஏற்ப ஒரு நடிகரின் உடல் தோற்றம் ஒப்பனையினால் கொண்டு வருவதைவிட அதற்கேற்றவாறு நடிகரிடம் முகம் சார்ந்த மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இரசிகர்களை உள்வாங்க முடியும்.

தனுசின் மீசை அந்த மீசையில ஆங்காங்கே தென்படும் நரைமயிர் தாடி போன்றவைற்றுடன் ஒரு காலை நொண்டி நொண்டி நடப்பது போன்றவை பாத்திரத்தை இயற்கைத்தன்மையுடன் இருக்க வைத்துள்ளது.மீசை தாடி கதை சொல்லுமா என்றால் சொல்லும் – கதாபாத்திரத்தின் வாழ்வியலின் சூழ்நிலைக்கேற்ற மனப் பலம் – பலவீனத்தையும் சொல்லும்.

தனுசின் இளமைக்காலத்தை காட்டும் போது அவருக்கு கீறிய மீசை செயறகையாகவிருக்கின்றது. அதைக் கண்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.

மஞ்சு வாரியார் இளமைக்காலத்திலும் ஒரு பின்தங்கிய கிராமத்தில் எப்படியிருப்பாரோ அப்படி அவரின் தோற்றம் வெளிப்பட்டு நிற்பதும் திருமணமான பிறகும் அதற்குரிய தோற்ற வெளிப்பாட்டை இரசிகனின் இரசிப்பு புறந்தள்ளாமல் இருக்காதவாறு ஒப்பனை இடம்பெற்றிருக்கின்றது.

இந்தப் படத்தில் இரண்டு காட்சிகள் பார்ப்பவர்களின் மனதில் ஆள்பவன் ஆளப்படுபவன் பற்றியதும் ஆளப்படுபவனின் மிலேச்சத்தனம் பற்றியும் கொதிப்படைந்து நிற்க வைக்கின்றது.பச்சையம்மாள் படிக்கிற காலத்தில் அவளை

அவளின் தலையில் செருப்பை வைத்துக் கொண்டு போக வைத்த காட்சியும் தனுசு ஒவ்வொரு வீடாகச் சென்று விழுந்து வணங்கும் காட்சியுமாகும்.

மிகையற்றதும் குறைவற்றதுமான பாத்திரங்களக்கேற்ற நடிப்பு நடிப்பென்று தெரியாமல் நடிக்கப்படும் போதுதான் இரசிகனின் அருகில் கலைஞன் போய் நிற்க முடியம்.அதனை இந்தப் படம் செய்திருக்கின்றது.

தனுசின் மகன்களாக வருபவர்கள் மிகச் சிறப்பாக நத்திருக்கிறார்கள்.அதிலும் இரண்டாவது மகனாக நடிக்கும் இளைஞன் தனக்குரிய பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறான்.

இரண்டாவது மகனைக் கொலை செய்த காட்சியில் தலையை வெட்டி முண்டமாக காட்டியதை தவிர்திருக்கலாம்.

தமிழகத்திலோ இலங்கையிலோ இத்தகு காட்சிகளைக் கொண்ட படங்களை குழந்தைகளும் சிறியவர்களும் பார்க்கும் சூழ்நிலை உண்டெனினும் அது வன்முறைக்கு சார்பான சமூகத்தை உருவாக்கும் நிலையைத் தோற்றுவிக்க முயலலாம்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இத்தகு வன்முறைக் காட்சிகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

வாள்கள் கத்திகள் கொண்டு வன்முறையை மேற்கொள்ளும் சமூகங்கள் உண்டு என்பதும் சமரசமும் சமாதானமும் நிராகரிக்கப்படும் போது சாதுவும் வாள் எடுப்பான் என்பதை இப்படம் கோடிட்டு காட்டியுள்ளது.

இப்படம் உருவாக்கப்படவில்லை ஒரு காலத்தில் இருந்த அல்லது அத்தகு சமூகம் இன்னமும் தேவையென்போர் வெட்கப்படுமளவிற்கு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இயக்குனர்கள் தாம் எழுதிய கதைக்கான கதாபாத்திரஙகளையும் கதைக்களத்தையும் தமது மனவெள்ளித்திரையில் ஓடவிட்டு பார்த்ததன் பின்பு படத்தை இயக்கத் தொடங்குவார்கள் வெற்றிமாறன் அதைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.

தனுசு என்ற நடிகர் திரைப்படத்துறையில் இருக்கும் மற்ற எந்த நடிகர்களையம் விட நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரண மனிதரைப் போன் தோற்றமுடையவரே.எனினும் அவர் இரசிகர்களின் மனதில் பதிவாகி விட்டார்.

நான் படம் பார்த்த அன்று பல இளந்தலைமுறையினரும் படத்தைப் பார்த்திருந்தனர். அவர்களில் சிலரிடம் “எப்படிப் படம் “என்று கேட்டேன்.தனுசின் நடிப்பை பாராட்டினார்கள்.

வன்முறை கொண்ட அடக்குமுறைக்கு எதிர்வன்முறை தேவையா என ஒரு வாதத்தை முன் வைத்தால் திட்டமிட்ட வன்முறை கொண்ட அடக்குமுறையை எப்படிஎதிர்கொள்வது என்ற கேள்வி எழுகிறது.

விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக மனித மனங்களையும் அவர்தம் உடலங்களையும் கவனத்திற் கொண்டே முன் வைக்க வேண்டும்.

அடக்கப்படும் மனிதர்களின் மனங்களை மதியுங்கள் என்பதுடன் அவர்கள் கிளர்ந்தெழுந்தால் அடக்கியாள்பவர்களே அதற்கும் பொறுப்பு என்கிறது இப்படம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.