எழுத்தும் வாழ்க்கையும்! …. ( இரண்டாம் பாகம் ) ….. அங்கம் – 98 …. முருகபூபதி.
சாதி அடிப்படையில் நடக்கும் தேர்தல் ! ?
எங்கிருந்து, எங்கே செல்கின்றோம் ! ?
முருகபூபதி.
இலங்கையில் வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல், மாவட்ட சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் , ஜனாதிபதித் தேர்தல் ஆகியனபற்றிய செய்திகளை ஒப்பு நோக்கியிருக்கின்றேன்.
ஆசிரிய பீடத்திலிருந்தவேளையிலும் சில தேர்தல்கள் தொடர்பான செய்திகளை எழுதியிருக்கின்றேன். அக்காலப்பகுதியில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலும், தமிழ்நாட்டில் சட்ட மன்றத்தேர்தலும் நடந்தால், எங்கள் அலுவலக நிருபர் பயஸ் என நாம் அழைக்கும் பால. விவேகானந்தா, மிகவும் உற்சாகமாக அச்செய்திகளை எழுதித்தருவார்.
அவருக்கு வேட்பாளர்களின் பெயர்கள் விரல் நுனியிலிருக்கும். செய்தியை எழுதித்தந்துவிட்டு, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்றும் தீர்க்கதரிசிபோன்று கணித்துச்சொல்வார்.
முதலில் மித்திரனுக்கும் பின்னர் வீரகேசரிக்கும் பால. விவேகானந்தா எழுதிக்கொடுப்பார்.
தற்போது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் காலப்பகுதியில், அங்கே என்ன நடக்கிறது, என்பதை சமூக ஊடகங்களில் தினம் தினம் பார்த்து வருகின்றேன்.
இதில் எனக்கு நன்கு தெரிந்த ஒருவரும் தமிழ்நாட்டில் தென்சென்னை தொகுதியில் தி. மு. க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் கடந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்தான். எழுத்தாளர் – கவிஞர் – இலக்கியவாதி – ஆங்கில இலக்கிய பேராசிரியர்.
அவர்தான் தமிழச்சி சுமதி தங்கபாண்டியன். அவரது தேர்தல் பிரசார உரைகளையும் இங்கிருந்து காணொளிகளின் ஊடாகப் பார்த்தேன்.
தென்சென்னை தொகுதியில் அவருடன் போட்டியிடும் இதர இரண்டு வேட்பாளர்களின் பெயரிலும் தமிழ் இருக்கிறது. அவர்கள்தான் பாரதீய ஜனதா கட்சி தமிழிசை சவுந்தரராஜன் , நாம் தமிழர் கட்சி தமிழ்ச் செல்வி ஆகியோர்.
இவர்களில் எந்தத் “ தமிழ் “ வெற்றிபெரும் என்பதை விரைவில் தெரிந்துகொள்ள முடியும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதி கடும் போட்டியை சந்தித்தது. எனினும், தி. மு. க. வேட்பாளர் தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் அந்தத் தேர்தலில் 5,64,872 வாக்குகளைப் பெற்று, 2,62,223 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இம்முறை அவர், காலில் சிறுசிகிச்சையுடன் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார். அவரது சுக நலத்தை, அவரின் அன்புக்கணவர் முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகரனுடன் தொடர்புகொண்டு விசாரித்தேன்.
சில வருடங்களுக்கு முன்னர் ( 2018 இல் ) இவர்கள் குடும்ப சகிதம் மெல்பன் வந்தபொழுது, எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் தமிழச்சியின் நிழல் வெளி என்ற நூலையும் வெளியிட்டு வைத்தோம்.
தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் பற்றிய எனது விரிவான பதிவு, ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. அந்த ஆக்கம் கடந்த 2022 ஆம் வெளியான எனது யாதுமாகி ( பெண் ஆளுமைகள் ) தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.
இலங்கை – இந்தியத் தேர்தல்களில் எனக்கு நன்கு தெரிந்த, எனது நட்பு வட்டத்திலிருக்கும் எழுத்தாளர்கள் போட்டியிடும்போது, அவர்களின் வெற்றி வாய்ப்பு குறித்த கவனம் எனக்குள் எழுவது இயல்பானதே.
தமிழ்நாட்டில் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சட்டசபைத்தேர்தலில் எழுத்தாளர் ஜெயகாந்தனும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவர் பெற்ற வாக்குகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இம்முறை இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழச்சி சுமதி தங்கபாண்டியனைப்போன்று மற்றும் ஒரு எழுத்தாளர் – திரைப்பட இயக்குநர் – ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானும் பாரதீய ஜனதா கட்சியின் அணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
எழுத்தாளர் – நிறப்பிரிகை இதழ் ஆசிரியர் ஏற்கனவே இந்திய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் து. ரவிக்குமார், இம்முறையும் விழுப்புரம் தொகுதியில் இந்தியா கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
எழுத்தாளர் சு. வெங்கடேசன் இந்திய கம்யூனிஸ்ட் ( இடது ) கட்சியின் சார்பில் மீண்டும் மதுரையில் போட்டியிடுகிறார். இவரது கட்சியும் இந்தியா கூட்டணியில் இணைந்திருக்கிறது.
இவர் கடந்த 2019 இல் நடந்த தேர்தலில், 1.39 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து நானறிந்தவரையில் நான்கு எழுத்தாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர். இவர்களில் தங்கர் பச்சான் தவிர்ந்து ஏனைய மூவரும் ஏற்கனவே இந்திய நாடாளுமன்றில் அங்கம் வகிப்பவர்கள். தொடர்ந்தும் ஒரே கூட்டணியில் இணைந்திருப்பவர்கள்.
இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளையும் அவதானித்தேன்.
அவற்றை சமூக ஊடகங்களில் பார்த்தபோது, அதில் கருத்துக்களையும் கணிப்புகளையும் சொன்ன ஊடகவியலாளர்கள் உதிர்த்த வார்த்தைகள்தான், இந்த அங்கத்தில் நான் எழுத முன்வந்த குறிப்புகள்.
தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த சாதிப்பிரிவினர், எத்தனை சதவீதத்தினர் இருக்கிறார்கள் ? என்பதை துல்லியமாகச்சொல்லி, யார் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்றும் அந்த ஊடகவியாலளர்கள் சொன்னபோது, அவர்கள் இந்தத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுவிடுவார்களோ ? என்றும் யோசித்தேன்.
தமிழ்நாட்டில் எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார் ( 1882 – 1921 ) பாப்பாக்களுக்காக இயற்றிய பாடல் ஓடிவிளையாடு பாப்பாவில்,
“ சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! நீதி,உயர்ந்தமதி,கல்வி – அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். “
என்று எழுதிவைத்துவிட்டுச்சென்றார்.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வரைந்தவரான அறிஞர் அம்பேத்கர் ( 1891 – 1956 ) இந்தியாவில் சாதிகள் என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
“ உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்று திரட்ட முடியாது. சாதியை
அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும். “
இவர்களையும் இவர்களது கருத்துக்களையும் நன்கு தெரிந்த இந்திய அரசியல் தலைவர்களும், தேர்தல் வேட்பாளர்களும், இவர்களின் வெற்றிவாய்ப்பினை கருத்துக்கணிப்பின் மூலம் சமூகத்திற்கு ஊடகங்களின் ஊடாக சொல்லும் ஊடகவியலாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும், தொகுதிகளில் வாழும் சாதியினர் பற்றித்தான் சொல்லிவருகிறார்கள்.
சாதி பார்த்து தேர்தலில் வாக்களிக்கும் கலாசாரம் என்றைக்கு இல்லாமல்போகும் ? என்பது புகலிடத்தில் வாழும் என்போன்றவர்களுக்குத் தெரியாது. புகலிடத்தில் வாழும் எமது குழந்தைகளிடம் இதுபற்றிச்சொன்னால், அவர்கள் எம்மைப்பற்றி என்ன கருதுவார்கள்! ?
இலங்கை – இந்திய தேர்தல்களை தொடர்ந்து அவதானித்து வந்திருக்கும் நான், நீண்டகாலமாக வதியும் அவுஸ்திரேலியாவில் நடக்கும் தேர்தல்களையும் அவதானித்தவாறு இங்கு வாக்களித்து வருகின்றேன்.
இங்கு வாக்களிக்காது விட்டால், அதற்குச் சரியான காரணமும் சொல்லாமல்விட்டால், தண்டப்பணம் செலுத்த நேரிடும்.
ஒருவரின் சேவையை கவனத்தில் எடுத்து வாக்களித்துவரும் ஒரு நாட்டிலிருந்து, சாதியை கவனத்தில் எடுத்து வாக்களிக்க முன்வரும் ஒரு தேசத்து மக்களைப் பார்க்கின்றேன்.
இம்முறையும் இந்திய தேர்தலில் போட்டியிடும் தமிழ் எழுத்தாளர்களின் கவனத்திற்கு இந்தப்பதிவை சமர்ப்பிக்கின்றேன்.
( தொடரும் )