குப்பிழான் ஐ. சண்முகன் முதலாண்டு நினைவாக இரு நூல்கள் இன்று வெளியீடு!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
மறைந்த எழுத்தாளர் குப்பிழான் ஐ சண்முகனின் முதலாவது ஆண்டு நினைவாக 28 / 04/2024 ஞாயிறு இரு நூல்கள் வெளியாகின்றன.
குப்பிழான் ஐ சண்முகனின்இ ரசனைக் குறிப்புகள் மற்றும் குப்பிழான் ஐ சண்முகனின்சிறுகதைகள்
ஆகிய இரண்டு நூல்களும்
சண்முகனின் பிறந்த ஊரான குப்பிழானில் உள்ள சிவபூமி ஆசிரமத்தில் இன்று
28 / 04 /2024 (ஞாயிறு ) காலை 9.30 மணிக்கு வெளியீட்டு விழா
நடைபெறவுள்ளது .
இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்குமாறு குப்பிழான் ஐ சண்முகனின் நூல் வெளியீட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
சாந்தமும் அமைதியும் அகத்தின் உள்ளேயும், கூர்மையான விழிகளால் ஈழத்து இலக்கியத்தை யாசித்த மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன்
அவர்களின் முதலாவது ஆண்டு 24/4/24 நினைவு தினமாகும்.
வடமராட்சியில் திருமணமணமாகி வாழ்ந்த போதும் தனது பிறந்த ஊர் குப்பிழான் எனும் அடையாளத்தைத் தனது பெயருடன் அடையாளமாக தொடர்ந்து இட்டவர்.
ஆகஸ்ட் முதலாம் நாள் 1946இல் சுன்னாகத்தில் பிறந்த குப்பிழான் ஐ. சண்முகன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர் ஆவார். சிறுகதை, கவிதை, திறனாய்வு, ஆன்மீகம் எனப் பல துறைகளில் எழுதிய குப்பிழான் ஐ. சண்முகன் அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.
குப்பிழான் ஐ. சண்முகன் முதலாவது சிறுகதை “பசி” ராதா என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆக்கங்கள் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 1975 இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு “கோடுகளும் கோலங்களும்” சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.
இவரது நூல்களில் கோடுகளும் கோலங்களும் சிறுகதை தொகுதி – 1975 வெளியானது. அதன்பின்னர்
சாதாரணங்களும் அசாதாரணங்களும் எனும் சிறுகதைகளின் நூல் 1983 வெளியானது. அத்துடன்
அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்களின் நூல் 2003 இலும்,
உதிரிகளும்… சிறுகதை தொகுப்பு 2006 வெளியானது.
யாழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பின் மூலமும், அதன் பின்னர் ஐ. சாந்தன், அ. யேசுராசா போன்றோரோடு சேர்ந்து “கொழும்பு இலக்கியக் கழகம்” மூலமும் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குப்பிழான் ஐ. சண்முகத்தின்
ஒரு பாதையின் கதை சிறுகதைகள் நூல் 2012இல் வெளியானது.
1976இல் சாகித்திய மண்டலப் பரிசை கோடுகளும் கோலங்களும் எனும் சிறுகதைத் தொகுப்புக்காக பெற்ற குப்பிழான் ஐ. சண்முகம் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்கத்தின்
“சங்கச் சான்றோர் பட்டம்” விருதினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குப்பிழான் மண்ணின் தனிப் பெரும் அடையாளமாகவும், சிறுகதை உள்ளிட்ட பல்துறை ஆளுமையாளராகவும், அனுபவப் பெட்டகமாகவும் திகழ்ந்த பிரபல எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன்
மரணம் கடந்தும் அவர் பெயர் எல்லோர் நெஞ்சங்களிலும் நிலைக்கும் என்பது உறுதியாகும்.