உண்மையை உரக்கக் கூறி தமிழர்க்காக ஓங்கி குரல் தரும் ‘சிங்கள கொட்டி’ மருத்துவர் பிரைன் செனவிரத்தின!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
( ஆட்சி மாற்றங்களினூடாகத் தமிழர்கள் தம் சிக்கல்கள் தீரும் என்ற உளவியலில் தமிழ்மக்கள் ஒருபோதும் இருக்கக் கூடாது என்பதில் தமிழர்கள் முதலில் தெளிவுற வேண்டும் என்பதையும் ஈழ விடுதலையே தமிழர்கட்கான தீர்வு என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் எல்லா தமிழர்கட்கும் மருத்துவர் பிரைன் அவர்கள் அறிவுறுத்தி வந்தார்.
உண்மையை எப்போதும் உரக்கக் கூறும் மருத்துவர் பிரைன் செனவிரத்தின, தமிழ் மக்களுக்கு ஆதரவான தார்மீக நிலைப்பாட்டை என்றும் கொண்டிருப்பவர் . சிறிலங்காவின் அநீதிகளை உலகறிய செய்தவரும் ஈழத் தமிழர்களுக்காக என்றும் ஓங்கி குரல் கொடுக்கும், ‘சிங்களக் கொட்டி’ பிரைன் செனவிரத்னவின் பிறந்த நாளையோட்டி (16/01/1932 ) இக்கட்டுரை பிரசுரமாகிறது)
பிரைன் செனவிரத்னவின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் உள்ள உறுதியான அர்ப்பணிப்பு மானிடப் பிறவியாக பிறந்ததில் அவர் காட்டிடும் ஒரு உயர்வான பண்பாகும்.
சிங்களக் கொட்டி (சிங்களப் புலி)
அத்துடன் அவரது நடத்தையிலும் பேச்சிலும் மிகவும் புலப்படும் ஒரு பேரார்வம், அவருடன் பழகும் நிமிடம் எல்லோரது இதயத்தைக் கவரும். இனம், மதம், மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட மக்களுக்காக அவரது வாழ்நாள் முழுவதும், உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்கள், இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கலாநிதி செனவிரத்ன தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது சம்பந்தமாக, கல்வி, சர்வதேச வாதங்கள், பரப்புரை மற்றும் ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் இந்த பாதிக்கப்பட்ட மக்களின் அவலநிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.
தமிழர் தேசத்தை ஒடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசானது உண்மையில் சிங்கள உழைக்கும் மக்கட்கும் எதிரானது. அரசியற் புரிதல் கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிங்களத் தோழர்கள் தாம் ஒரு அமைப்பாகத் திரண்டு ஒடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரச எந்திரத்தைத் தகர்ப்பதன் மூலம் சிங்கள உழைக்கும் மக்களினையும் தேச ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் தமிழர் தேசத்தையும் விடுதலையடையச் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் மறவழியில் போராடுவது என்று ஆரம்ப காலத்தில் முனைப்புக் கொண்டு செயல்பட்டனர்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தினை உலகறியச் செய்ததுடன், தாம் சார்ந்த உலகளாவிய வலைப் பின்னல்களைக் கொண்டு மனித உரிமை அமைப்புகளினூடக ஒடுக்கப்படும் தமிழர்களின் உரிமைக்குரலை வெளிப்பட வைத்த பெருமையும் உண்டு.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் நேர்மையை வெளிப்படுத்தி, தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சர்வதேச அரங்கில் பேசி வருபவர் பிரைன் செனவிரத்ன.
நாடற்றவர்களின் குரல் :
1948 இல் பிரித்தானிய ஆட்சியில் இருந்து தீவு சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு எதிராக தைரியமான பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
மேலும் இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இலங்கையைச் சேர்ந்த சுமார் ஒரு மில்லியன் நீண்ட கால குடிமக்களின் குடியுரிமையை 1948இல் ரத்து செய்து, பெரும்பான்மை சிங்களவர்களால் உரிமை பறிக்கப்பட்டது.
தன்னிச்சையாக நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் பகிரங்கமாகப் பேசினார். 1840 களில் இருந்து தீவில் வாழ்ந்த மக்கள் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகப் புகழ்பெற்ற ‘சிலோன் டீ’ ஐ உருவாக்க உழைத்தவர்கள் தீவின் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக மாறியுள்ளனர்.
சிங்களவர்களைப் பெரும்பான்மையாக ஆக்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன் மட்டுமே அரசாங்கம் தீவின் பூர்வீகத் தமிழர்களின் நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் சட்டத்தை இயற்றின.
அவுஸ்திரேலியாக்கு புலம்பெயர்வு:
1976 இல் அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அவர் நாடு திரும்பக் கூடிய சூழல் அவரிற்கு ஏற்படவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி மாற்றங்களினூடாகத் தமிழர்கள் தம் சிக்கல்கள் தீரும் என்ற உளவியலில் தமிழ்மக்கள் ஒருபோதும் இருக்கக் கூடாது என்பதில் தமிழர்கள் முதலில் தெளிவுற வேண்டும் என்பதையும் தமிழீழ விடுதலையே தமிழர்கட்கான தீர்வு என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் எல்லாத் தரப்புத் தமிழர்கட்கும் மருத்துவர் பிரைன் அவர்கள் அறிவுறுத்தி வந்தார்.
பிறப்பால் சிங்கள இனத்தவராக இருந்தாலும் ஈழத் தமிழரின் விடுதலையையும், உரிமைகளையும் சிங்கள மக்கள் அறியும்படி செய்து வருகின்றார். பெரும் கவலைகளுடன் சிறிலங்காவானது சிங்கள பௌத்த நாடு என்று சிங்களவர்கள் நம்புவதே, தமிழர்கள் மீதான இனவழிப்பிற்குக் காரணம் என்றும் ஈற்றில் அது சிங்களவர்கள் தமக்குத்தாமே தோண்டும் சவக்குழியாக அமைந்துவிடும் என்றும் சிங்கள மக்கட்கு இவர் இடித்துரைத்தும் வந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றி ஏற்றியோ போற்றியோ எந்தவொரு கருத்துகளையும் குறிப்பிடத்தக்க அளவில் பகிராத மருத்துவர் பிரைன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல, மாறாக ஒடுக்கும் அரசிற்கெதிராகப் போராடும் போராளிகள் என்று உலகெங்கும் பரப்புரை செய்து வந்தார்.
அனைத்துலக மட்டத்தில் பரப்புரை:
இறுதிக்கட்ட தமிழினவழிப்பு இடம்பெற்ற வேளையில் தனது முதுமையையும் கணக்கெடுக்காமல் உலகெங்கும் அலைந்து திரிந்து மாநாடுகள், கூட்டத்தொடர்கள், பல்கலைக்கழக நிகழ்வுகள் என அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி ஒடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் இனவழிப்பைப் பற்றியும் அதிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவது உலகின் கடமை என்றும் அனைத்துலக மட்டத்தில் பரப்புரை செய்தும் வருகின்றார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழீழ தேசமானது சிங்கள அரசால் முற்றிலுமாக வன்கவரப்பட்ட பின்பான சூழலில், தனது முதிர்வையும் பொருட்படுத்தாது முன்னையதிலும் விரைவுடன் செயலாற்றி வந்தார். அதாவது, இலங்கைத்தீவில் தமிழர்கட்கு நடந்தது இனவழிப்பே என்றும் அதற்குத் தீர்வாக தமிழர்களிடத்தில் தமிழீழம் கோரிப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் தனது உரைகள் மூலமும் எழுத்துகள் மூலமும் கோரி வந்தார்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் விளைவுகள், தமிழர் மீதான சிங்களத்தின் இனவழிப்பு என்பவை தொடர்பில் 60 இற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளதோடு உலகரங்கில் இதுதொடர்பில் பல கருத்துரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
இறுதிநேரத்தில் எப்படியாவது தமிழர்கள் மீதான போரை நிறுத்திவிட வேண்டுமென்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளைத் தமிழினம் ஒருபோதும் மறக்கக்கூடாது. இவர் அவுஸ்திரேலிய தமிழ்க்காங்கிரசின்(ATC) பணிப்பாளராக இருந்தவர் என்பதோடு பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசில் அதிகாரமிக்க பதவியிலுமிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு நாடுகடத்தப்படவிருக்கும் தமிழ் ஏதிலிகளை நாடுக டத்தவிடாது அவுஸ்திரேலிய ம உரிமைச் செயற்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்துப் போராடுவதில் இவர் முன்னின்று உழைத்தார்.
தமிழர் இனப்படுகொலையை வெளிப்படுத்தயவர்:
அதேவேளை தமிழர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை வெளிப்படுத்தும் “சனல் 4” ஆவணப்படத்தை உலகெங்கிலும் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் மருத்துவர் பிரைன் செனவிரத்தின முன்னின்று உழைத்தார்.
இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் உரிமை மற்றும் கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பூர்வீகம் வடக்கு மற்றும் கிழக்கு என மருத்துவர் பிரைன் செனவிரத்தின தெரிவித்திருந்தார்.
நீண்டகாலமாக சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் பல தவறான செயற்பாடுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டியதுடன் அவற்றிற்கு எதிராகவும் போராடினார். அத்துடன் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளை உலகறிய செய்ததில் இவருக்கும் ஒரு பாரிய பங்குண்டு.
“The 1983 Massacre – Unanswered Questions”, “Human Rights Violations in Sri Lanka” (இது சிறிலங்காவால் தடைசெய்யப்பட்ட நூல்), “Rape of Tamil Women, Men And Children By Sri Lankan Armed Forces and Their Collaborators”, “UN Human Rights Council Fails to Address the Humanitarian Disaster in the Tamil North and East of Sri Lanka” ஆகிய நூற்கள் இவரால் எழுதப்பட்டவற்றுள் முதன்மையானவை.