இந்தியா சென்றபோது என்னைத் தடுத்து நிறுத்தியது எதற்காக?; விமான நிலைய அதிகாரிகளைக் கேட்ட சிறீதரன்
தமிழக முதலமைச்சரின் விசேட அழைப்பிற்கிணங்க அங்கு நடைபெறும் அயலகத் தமிழர் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பியான எஸ்.சிறீதரனுக்கு ‘பயணத் தடை’ உள்ளதாக தவறுதலாக கூறப்பட்டுவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை நடத்தும் ‘அயலகத் தமிழர் தினம் 2025’ கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியா செல்லவென கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிறீதரன் எம்.பி கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தார்.
இதன்போது எஸ்.சிறீதரன் எம்.பிக்கு ‘பயணத் தடை’ உள்ளதாக தெரிவித்து விமான நிலைய அதிகாரிகளால் அவரை தடுத்து நிறுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது என சிறீதரன் எம்.பி வினவிய போதும் அவர்கள் எவ்வித விளக்கத்தையும் வழங்கவில்லை.
இவ்வேளையில் சிறீதரன் எம்.பியுடன் சென்றிருந்த ரவூப் ஹக்கீம் எம்.பியும் விமான நிலைய அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், எம்.பி சிறீதரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு உள்ளது. அவரை இவ்வாறு திடீரென தடுத்து நிறுத்த முடியாது. அவ்வாறெனில் தகுந்த காரணம் காண்பிக்கப்பட வேண்டும். எனவே அவரின் பயணத்தை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் பயணம் முடித்து வந்த பின்னர் தேவையானால் நீங்கள் விசாரணைகளை நடத்த முடியுமென வாதிட்டார்.
இதனையடுத்து சிறீதரன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள் சிறீதரனின் பயணத்தை தொடர அனுமதித்தனர்.
இந்நிலையில் சென்னை சென்று திங்கட்கிழமை மாலை நாடு திரும்பிய சிறீதரன் எம்.பி விமான நிலையத்தில் தான் இந்தியா சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை வினவியுள்ளார்.
இவ்வேளையில் தொழில்நுட்ப பிரச்சினையால் அவருக்கு பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளதாக காண்பிக்கப்பட்டதாகவும், அது தவறுதலாக நடந்தது என்றும், அவ்வாறு பயணத்தடை எதுவும் அவருக்கு கிடையாது என்றும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த விடயம் திட்டமிட்டு செய்யப்பட்டதா? என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும், இதனால் இது தொடர்பில் தான் பாராளுமன்றத்தில் எதிர்வரும் அமர்வில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பவுள்ளதாகவும் சிறீதரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.