மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் ரணிலை குற்றம் சாட்டுகின்றனர்
அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குற்றம் சாட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ரணிலை குற்றம் சாட்டுவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது எனவும் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.
காலிஈ உலுவிடிகேயில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.
இம்மாதம் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் காலி மாவட்டத்தில் அனைத்து ஆசனங்களையும் உள்ளடக்கும் விதத்தில் கூட்டங்களை நடத்தப் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாடு எந்த திசையில் செல்கிறது என்பது குறித்து மக்களுக்கு தெளிவான பார்வை உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனுபவமுள்ள ஒரு குழுவை நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு பலமுறை கூறியதற்கு இதுவே காரணம் என்று வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.