ரூ.590 மில்லியன் வரி செலுத்த தவறியுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள்
அரசாங்க நிலங்களை குத்தகைக்கு பெற்றுள்ள 23 பெருந்தோட்ட நிறுவனங்கள் கூட்டாக ரூ.590 மில்லியன் வரி செலுத்தத் தவறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அறிக்கையின்படி, மொத்தம் 249,843 ஹெக்டேர் அரசுக்குச் சொந்தமான நிலம் இந்த 23 நிறுவனங்களுக்கு 53 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
குருநாகலை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமொன்று 2023 டிசம்பர் 31திகதி வரை அரசாங்கத்திற்கு ரூ.320 மில்லியனுக்கும் அதிகமான வரியை செலுத்த வேண்டியுள்ளது. இந்தத் தொகையில் ரூ. 160 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.
இந்த நிறுவனம் அதன் வருடாந்திர வரிகளை குறைவாக செலுத்தியுள்ளதுடன், நிறுவனத்தின் நிகர சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே இவ்வாறு வரியை செலுத்த முடியாதமைக்கான காரணமென குறித்த நிறுவனம் கூறியுள்ளது.
பெருந்தோட்ட அமைச்சு தொடர்பான தேசிய கணக்காய்வு அறிக்கையில் இந்த நிறுவனம் போன்று மேலும் பல நிறுவனங்கள் அரசுக்கு வரியை செலுத்துவதில் காலம் தாழ்த்திவருவதாக தெரியவந்துள்ளது.