சங்கு கட்சியின் தலைவராக செல்வம் எம்.பி.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்(சங்கு ) தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக கூட்டணியின் பங்காளி கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் தேசிய கட்சி உட்பட 7 பங்காளி கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியாக செயல்பட்டு வருகின்றது.
தற்போது இதன் தலைமைத்துவம் இணைத் தலைமைகளாக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களை உள்ளடக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த வாரம் வவுனியாவில் இடம் பெற்ற, இந்தக் கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது ஒற்றை தலைமையின் கீழ் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை செயல்பட வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை தலைவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பங்காளி கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.
இதே வேளை புளட் அமைப்பின் சார்பில் செயலாளர் தற்போது நியமிக்கப்பட்டிருப்பதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையிலும் செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பது நல்லதாக இருக்கும் என தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.