வரலாறு படைத்த இந்திய வம்சாவளி இளம்பெண்
பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரான இளம்பெண் ஒருவர் தென் துருவத்துக்குத் தனியாக பயணித்து வரலாறு படைத்த நிலையில், தற்போது அடுத்த சாதனைக்குத் தயாராகிவருகிறார்.
இந்திய வம்சாவளியினரான பிரீத் சந்த் என்னும் Harpreet Kaur “Preet” Chandi (36), 2022ஆம் ஆண்டு, தனியாக பூமியின் தென் துருவத்துக்கு பயணித்தார்.
அதனால், அண்டார்டிக்காவுக்கு தனியாக பயணித்த முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்னும் பெருமையையும் அவர் பெற்றார்.
இங்கிலாந்திலுள்ள Derby என்னுமிடத்தில் வாழும் பிரீத் சந்த், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதுடன், தனது அசாதாரண சாதனைகளுக்காக இளவரசி கேட் மிடில்டனிடம் பாராட்டுகளும் பெற்றார்.
இப்படியே வரிசையாக சாதனைகள் படைத்துவரும் பிரீத் சந்த், தற்போது அடுத்த சாதனைக்குத் தயாராகிவருகிறார்.
ஆம், பூமியின் தென் துருவத்துக்கு தனியாக பயணித்து வரலாறு படைத்த பிரீத் சந்த், தற்போது தனியாக, யாருடைய உதவியுமின்றி, பூமியின் வட துருவத்துக்குப் பயணிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
கனடாவிலிருந்து புறப்பட்டு, கடலின் உறைந்த பகுதிகள், உயரமான பனிப்பாறைகள், மைனஸ் 50 டிகிரி செல்ஷியஸ் குளிர் என பல தடைகளைத் தாண்டி வட துருவத்தை அடைய இருக்கிறார் பிரீத் சந்த்.
திட்டமிட்டபடி பிரீத் சந்த் வட துருவத்தை அடைவாரானால், தனியாக வட துருவத்தை அடைந்த முதல் பெண் என்னும் பெருமையும் அவரைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.