மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அர்ச்சுனா; 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பனை அபிவிருத்திச் சபை சார்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறும் பட்சத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்வதற்கு நான் சட்டத்தரணி ஊடாக தயாராகி வருகின்றேன் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி மிகமோசமான முறையில் செயற்பட்டார்.
என்னுடைய உறவினர்கள் எவருமே பனை அபிவிருத்தி சபையில் இல்லை. என்னை வாயை மூடு என சொல்கின்றார். சபை நாகரிகம் இல்லாமல்அவர் இவ்வாறான விடயங்களை சொல்வது எமது சபையின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
95,000 ஆக இருந்த பனைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை இன்று 6000 ஆக குறைந்திருக்கின்றது. எதிர்வரும் வருடங்களில் 1500 பேர் வரையிலானோரே அனுமதிக்கு வந்துள்ளார்கள். 15000 பேரை கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டு வரும்போது அர்ச்சுனா இராமநாதனின் நடவடிக்கை இந்த தொழிலை முற்றாக அழிக்கின்ற நிலைக்கு தள்ளும். டிசம்பர் மாதத்தில் செய்ய வேண்டிய வேலைக்காக கடந்த யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
கூட்டத்தில் சில விடயங்களை செய்ய முயன்றபோது அர்ச்சுனாவின் குழப்பத்தால் செய்ய முடியவில்லை.
அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.எல்லோரிடமும் கேள்வி கேட்டு குழப்பம் செய்வதன் மூலம் ஊடகத்தில் தலைப்பு செய்தியாக வர முயல்கிறார்.அர்ச்சுனாவை கட்டுப்படுத்த வேண்டிய தேவை அமைச்சர் சந்திரசேகருக்கு இல்லை.அர்ச்சுனா எம்.பி.கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்ற தேவை அவருக்கு இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் இதனை செய்ய தவறினால் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டும். நமது அமைதி நிதானம் என்பதை பொருட்டாக கருதாமல் தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
உண்மையில் அர்ச்சுனா அதிகாரிகளை கேள்வி கேட்பதற்கு முதல் தன்னை நோக்கி கேள்விகளை கேட்க வேண்டும். சாவகச்சேரி மக்கள் நம்பிக்கை அடிப்படையில் அர்ச்சனாவை எம்.பி.யாக அனுப்பி இருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையில் விசுவாசமாக நடக்கின்றாரா? அவர் முகப்புத்தகத்தில் வருகின்ற கருத்துக்களை வைத்து கொண்டு தன்னை பெரியாளாக கருதுகின்றார். உண்மையில் அவருடைய எம்.பி. பதவி என்பது ஊழலுக்கு எதிரான குரலுக்கு கிடைத்த பரிசாகும். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளங்களை முன்னேற்ற தடை ஏதும் இல்லை. ஆனால் இன்று அது நடந்து இருக்கின்றதா? உண்மையில் இந்த ஊடகங்கள் அர்ச்சுனாவை பார்த்து கேள்வி கேட்கின்ற நேரம் விரைவில் வரும். சஜித் பிரேமதாசாவுக்கு பின்னால் அர்ச்சுனா ஒளி ய முற்பட்டார். அது நடக்கவில்லை. தற்போது தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் ஒளி ய முற்படுகின்றார்.
என்னை யாரும் இந்த அரசியல் கட்சி தான் என்று சொல்ல மாட்டார்கள். என் மீது பல விமர்சனங்கள் உண்டு. விமர்சனங்களை கடந்து நான் ஆராய்ச்சி துறையில் விடுதலைப் புலிகளின் காலம் சிறப்பாக பல வேலைகளை செய்துள்ளேன்.
கட்சிக்குரிய ஆளாக செயல்படவில்லை. அதற்கு சான்றாகவே இந்த பதவியை தந்தார்கள். நான் ஜே.வி.பி.யின் தொழிற்சங்கத்திலும் அங்கத்தவராக இல்லை.
பாராளுமன்ற அர்ச்சுனா எம்.பி.யின் அவதூறு பொய் கருத்துக்கள் மக்களைச் சென்றடைந்திருப்பதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்குள் பணியாளர்களுடன் தொடர்ந்து வேலைகளை முன்னெடுப்பதில் இக்கட்டான சூழலில் இருக்கின்றேன். எம்முடைய பனை அபிவிருத்திச் சங்கங்கள் இதனால் பாதிப்படைய போகின்றன. முழு விடயங்களுக்கும் அர்ச்சுனா எம்.பி. பதில் சொல்லி பொறுப்பு கூற வேண்டும். இதற்கான சட்ட ஆலோசனை பெற்றிருக்கின்றேன்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பனை அபிவிருத்திச் சபை சார்ந்து அர்ச்சுனா எம்.பி. சுமத்திய ஏதாவது ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபிக்க தவறும் பட்சத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கின்றேன். 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்வதற்கு நான் சட்டத்தரணி ஊடாக தயாராகி வருகின்றேன்.
இனி இவ்வாறான விடயங்களை கூட்டங்களில் செய்வாராகவிருந்தால் பாரதூரமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.