பலதும் பத்தும்

காய்கறிகள் வாடாமல் புதிது போல் இருக்க சில வழிமுறைகள்…

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள காய்கறிகள் மிக முக்கியமான உணவு. அன்றைய காலங்களில் அனைவரும் வீட்டிலேயே காய்கறிகளை வளர்த்து அப்பப்போது சமைக்கும் போது காய்கறிகளை பறித்து சமைத்துக் கொள்வர். இதனால் உணவும் சத்தான ஆதாரமாகவே இருந்திருக்கிறது. பல்வேறு நோய்களை தடுக்கும் காய்கறிகள் பழங்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படும் ஒன்று. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இயற்கை உரம் கொண்டு விளைவித்த காய்கறி பழங்கள் இன்று ரசாயன ஓரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் காய்கறி விளைகிறது.

எந்திரமயமான சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு பின்பு கறிவேப்பிலையில் இருந்து மாமிசம் வரை அனைத்தையும் கெடாமல் இருக்க குளிர்சாதனப் பெட்டியை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். ஆனால் இது நமது உடலுக்கும் நமது சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பனவாகவே உள்ளது. நமது தவிர்க்க முடியாத சூழலுக்கு மட்டுமே எந்திரத்தை நாட வேண்டும் என்பதையே மறந்து இன்று எல்லாவற்றிற்கும் இயந்திரத்தை நம்பி இருக்கும் சூழலை உருவாக்கி உள்ளோம்.

நமது நோய்களுக்கு நமது இன்றை பழக்க வழக்கமே அடிப்படையாக மாறி விட்டது. இதை தடுக்க இயற்கை வழியில் காய்கறிகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை பற்றிய பகிர்வே இது. காய்கறிகள் கோடைக் காலத்தில் சீக்கிரமாகவே காய தொடங்கி விடும். காய்கறி வாடாமல் இருக்க புதிய மண்பானையில் காய்கறிகளை போட்டு பானையை ஈரமான மணல் மேல் வைத்தால் இரண்டு நாள் வரை காய்கறிகள் புதிது போலவே இருக்கும். இவை உடலுக்கு எந்த வித தீங்கும் விளைவிக்காது.

அதே போல் கீரைகள் எளிதில் வாடி போய் விடாமல் இருக்க நீரில் நனைத்த காகித்தை கீரைகள சுற்றி வைக்கவும். கிழங்குகளை எப்போதும் மூடி வைக்கக் கூடாது. காற்றாடப் பரப்பி தான் வைக்க வேண்டும். அதே போல் கிழங்கு வேகமாக வேக உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து பின் அடுப்பில் வைத்தால் சீக்கிரம் கிழங்கு வெந்து விடும். காய்கறிகளை ஒரு கூடையில் போட்டு ஈரத் துணியினால் மூடி வைத்தால் பல நாட்கள் வரை காய்கறிகள் வாடாமல் இருக்கும்.

பச்சை மிளகாயை காம்புடன் வைத்திருந்தால் சீக்கிரம் வாடி போய் விடும். சீக்கிரம் வாடி போகாமல் இருக்க பச்சை மிளகாயின் காம்பை நீக்கி விட்டு நிழலான இடத்தில் குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதால் நீண்ட நாள் பச்சை மிளகாய் வாடி போகாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகளை எப்போது வைத்தாலும் அவைகளை தனி தனி பிளாஸ்டிக் பைகளில் வைக்க வேண்டும். எல்லாக் காய்கறிகளையும் ஒரே பையில் வைக்கக் கூடாது.

பச்சை பட்டாணி விலை மலிவாக கிடைக்கும் போதே அதை தோல் உரித்து எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் வாய்ப் பகுதியை நன்கு இருக்க கட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து விட வேண்டும். இப்படி செய்தால் பல மாதங்கள் பட்டாணி அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்கும். வாழை பழங்களை எப்போதுமே குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. அதன் தோல் கறுத்துப் போய் விடும். பாகற்காய் சீக்கிரம் பழுத்துப் போகாமல் இருக்க பாகற்காயை இரண்டு இரண்டாக நறுக்கி வைத்து விட்டால் போதும். இஞ்சி தேவையான அளவிற்கு மேல் இருந்தால் அந்த இஞ்சியை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றினால் போதும். தேவை படும் போது எடுத்து பயன்படுத்தலாம். இஞ்சி காய்ந்துப் போகாது.

வாழைக்காய் கெடாமல் இருக்க தண்ணீரில் வாழைக்காயை போட்டு வைக்கவும். ஒரு வாரம் வரை வாழைக்காய் கெடாமல் இருக்கும். சமையலறையில் நாம் செய்யும் தவறு வெங்காயத்தை வாங்கி கூடையில் வைப்பது இதனால் வெங்காயம் எளிதில் அழுகி கெட்டுப் போக கூடும். இதை தவிர்க்க வெங்காயத்தை கூடையில் வைக்காமல் தரையில் வைக்க வேண்டும். வெண்ணெய் மேல் சிறிது உப்பு தூவி விட்டால் வெண்ணெய் கெடாமல் இருக்கும். கறிவேப்பிலை கொத்தமல்லி இரண்டும் தமிழரின் சமையலில் முக்கிய இடம் வகிக்கிறது. நாம் வாங்கிய உடன் இந்த இரண்டு இலைகளையும் வாழைமட்டையில் சுற்றி வைக்க வேண்டும். கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி வாடி போகாது.

முதல் நாள் வாங்கிய பூ மறுநாள் காலை வாடி போய் விடும். இதை தவிர்க்க பூவை ஈரத் துணியில் சுற்றி வைக்காமல் ஒரு பாத்திரத்தை கழுவி அந்த பாத்திரத்தில் பூவை வைத்து மூடி வைக்கவும். பூ எளிதில் வாடி போகாது வதங்கி போகாமலும் இருக்கும். கத்தரிக்காய் சீக்கிரமாக சுருங்கி காய்ந்து போய் விடும். காய் வாடாமல் இருக்க கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்து மூடி வைக்க வேண்டும். இப்படி செய்வதால் காய் வாடாமல் நிறம் மாறாமல் இருக்கும். ஊறுகாய் கெடாமல் இருக்க சிறிது எண்ணெய்யை சூடாக்கி ஊறுகாய் மேல் ஊற்றினால் கெடாமல் இருக்கும்.

கீரையை எப்போது சமைக்கும் போதும் முதலில் அதன் இலைகளை பறித்து கால் மணி நேரம் ஊற வைத்து பின் அரிந்து சமைக்க வேண்டும். ஊற வைத்து கீரையை அறியும் போது அதில் உள்ள ரசாயனம் நீங்கும் மேலும் அழுக்கு மற்றும் மணல் போன்றவை நீரின் அடியில் தேங்கி விடும். காய்கறிகளை எப்போதும் தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். பச்சையாக காய்கறிகள் வாங்கும் போது நன்றாகவே நன்கு கழுவ வேண்டும். காளிபிளவர் பூவை எப்போது சமைக்கும் போது சூடான உப்புத் தண்ணீரில் போட்டு சிறிது நன்கு அலசியே கழுவ வேண்டும். அப்போது தான் அதில் உள்ள புழு பூச்சிகள் நீங்கும். காய்கறிகளை குழாயில் தண்ணீரை திருப்பி விட்டு ஓடும் நீரில் தான் நன்கு கழுவ வேண்டும்.

நோயின்றி ஆரோக்கியமாக வாழ மிக மிக இன்றியமையா ஒன்று உணவு. அந்த உணவு எப்போதும் நஞ்சில்லா உணவாக இருப்பது மிக மிக முக்கியமான ஒன்று. நமது அவசரமான வாழ்வில் உணவு முறையும் அவசரமாக இருக்க கூடாது. நமது உணவில் 23% காய்கறிகள் இடம் வகிக்கிறது. நமது உடலுக்குத் தேவையான அதனை ஊட்டச்சத்துக்களும் காய்கறிகளில் உள்ளது. இயற்கை வழி முறை மட்டுமே நம்மை நீண்ட ஆயுளுக்கு செல்ல வழிவகுக்கும். இனி ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ள நமது உணவு பழக்கத்திலும் காய்கறிகளை எப்படி பாதுகாப்பாக கெடாமல் வைத்துக் கொள்ளலாம் என்று அறிந்து செயலாற்றுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.